Published:Updated:

பா.ஜ.க நிர்வாகிகள் நியமனம்... அண்ணாமலையின் புதுக்கணக்கு!

vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

இளைஞரணித் தலைவராக இருந்தவரை மாநிலச் செயலாளராக மாற்றியதில் வினோஜ் கடும் அப்செட். இளைஞரணி என்பது கட்சியின் முக்கியப் பொறுப்பு.

பா.ஜ.க நிர்வாகிகள் நியமனம்... அண்ணாமலையின் புதுக்கணக்கு!

இளைஞரணித் தலைவராக இருந்தவரை மாநிலச் செயலாளராக மாற்றியதில் வினோஜ் கடும் அப்செட். இளைஞரணி என்பது கட்சியின் முக்கியப் பொறுப்பு.

Published:Updated:
vikatan
பிரீமியம் ஸ்டோரி
vikatan

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாடு பா.ஜ.க-வின் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டதோடு, அவர்களுடனான கூட்டத்தையும் நடத்தி முடித்திருக்கிறார் மாநிலத் தலைவர் அண்ணாமலை. அவர் தலைவராகப் பொறுப்பேற்று எட்டு மாதங்களுக்கு மேலாகியும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாதது குறித்து 01.05.2022 தேதியிட்ட ஜூனியர் விகடனில், “தள்ளிப்போகும் நியமனங்கள்... என்ன செய்யப்போகிறார் அண்ணாமலை?” என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதையடுத்தே நிர்வாகிகள் பட்டியலை அறிவித்திருக்கிறார் அண்ணாமலை. இதிலும்கூட பல்வேறு சர்ச்சைகள், அதிருப்திகள் எழ... லிஸ்ட்டைக் கையில் வைத்துக்கொண்டு விசாரணையில் இறங்கினோம்...

பா.ஜ.க நிர்வாகிகள் நியமனம்... அண்ணாமலையின் புதுக்கணக்கு!

“எனக்கு 40... உங்களுக்கு 60...”

நிர்வாகிகள் நியமனங்கள் குறித்து நம்மிடம் பேசிய மாநிலச் செயலாளர் ஒருவர், “தனக்குப் போட்டியாக யாரும் வந்துவிடக் கூடாது என்கிற தெளிவோடு இந்தப் பட்டியலை வெளியிட்டிருக்கிறார் அண்ணாமலை. பிரபலமில்லாதவர், அரசியல் அனுபவம் குறைவானவர்களாகப் பார்த்துப் பார்த்து பதவி கொடுத்திருக்கிறார் அவர். அண்ணாமலைக்கு 40, பொன்னாருக்கு 30, கேசவ விநாயகம், ஹெச்.ராஜா, முருகன் ஆகியோருக்குத் தலா 10 சதவிகிதம் என்று ஐந்தாறு பேர் தங்களுக்குள்ளாக சிண்டிகேட் அமைத்து, பதவிகளைப் பிரித்துக் கொண்டிருக்கிறார்கள். நிர்வாகிகள் நியமனத்தில் கட்சியின் எந்த விதிமுறையையும் அண்ணாமலை பின்பற்றவில்லை. எஸ்.ஆர்.சேகர் ஐந்தாவது முறையாக பொருளாளராக நீடிக்கிறார். இது இந்தியாவில் எந்த மாநில பா.ஜ.க-விலும் நடக்காதது. இப்போது மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டவர்களில் கே.பி.ராமலிங்கம், ஏ.ஜி.சம்பத், பால் கனகராஜ், பால கணபதி உள்ளிட்ட சிலருக்கு சமூகரீதியிலான பிரதிநிதித்துவம் என்ற அடிப்படையிலேயே பொறுப்புகள் கிடைத்திருக்கின்றன. பேராசிரியர் இராம.னிவாசன் ஆர்.எஸ்.எஸ்-ன் பிரதிநிதி. தி.மு.க., அ.தி.மு.க போன்ற மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கும் பதவி தரப்பட்டிருக்கிறது” என்றார்.

அண்ணாமலை போட்ட புதுக் கணக்கு!

பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். “பெப்சி சிவக்குமார் மீது பல்வேறு புகார்கள் எழுந்ததையடுத்து அவர் உள்ளிட்ட ஏழு பேரைக் கட்சியிலிருந்து நீக்குவதாக காயத்ரி ரகுராம் ட்விட்டரில் பதிவிட்டார். நீக்கப்பட்ட பெப்சி சிவா, அண்ணாமலையை அணுக அவர்கள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார்கள். இப்போது அதே சிவாவை, கலைப் பிரிவுத் தலைவராக நியமித்திருக்கிறார் அண்ணாமலை. கூடவே, ‘கட்சி நடவடிக்கைக்கு எதிராக இருந்தார்’ என்று காயத்ரி ரகுராமைப் பதவியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். இளைஞரணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரமேஷ் சிவா, தேசிய அளவில் முக்கியப் பொறுப்பிலிருக்கும் ஒருவரை ‘நன்கு கவனித்தே’ இந்தப் பொறுப்பை வாங்கியிருக்கிறாராம். இவர் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டு மீண்டும் கட்சியில் சேர்ந்தவர்” என்றவர் மேலும் சில தகவல்களைச் சொன்னார்.

“இளைஞரணித் தலைவராக இருந்தவரை மாநிலச் செயலாளராக மாற்றியதில் வினோஜ் கடும் அப்செட். இளைஞரணி என்பது கட்சியின் முக்கியப் பொறுப்பு. இப்பொறுப்பில் இருந்தால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல... தேசிய அளவிலும் முக்கியத்துவம் கிடைக்கும். டெல்லி தலைமை சென்னை வரும்போது அவர்களை நேரடியாகச் சந்திக்கவும், ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்கவும் வாய்ப்பு கிடைக்கும். அப்படியான இடத்தில் வினோஜ் இருக்கும்பட்சத்தில் அடுத்து தனக்கு நிகராக, எதிராகத் தமிழ்நாட்டில் வளர்ந்துவிடுவார், தனது நாற்காலிக்கும் சிக்கல் ஏற்படும் என்பதாலேயே அவரை இளைஞரணித் தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அந்தப் பதவியை ரமேஷுக்குக் கொடுத்திருக்கிறார் அண்ணாமலை. மகளிரணியின் தலைவராக நியமிக்கப்பட்ட உமாரதி பொதுவெளியில் பெரிதும் அறியப்படாதவர். கரு.நாகராஜனை மாநிலப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து துணைத் தலைவராக நியமித்திருப்பதால் அவரும் அப்செட் என்கிறார்கள். நயினார் நாகேந்திரனுக்குச் சட்டமன்றக்குழுத் தலைவர் பதவி மட்டும் கொடுத்திருக்கிறார்கள். இந்தப் பதவி மாநிலத் தலைவர் பதவிக்கு நிகரானது எனச் சொல்லி அவரைச் சமாதானப்படுத்தியிருக்கிறார்கள். இப்படி எல்லாவிதத்திலும் கணக்குப் போட்டே அண்ணாமலை நிர்வாகிகளை நியமித்திருக்கிறார்” என நிர்வாகிகள் மாற்றத்தின் பின்னணியை விவரித்தார்.

பா.ஜ.க நிர்வாகிகள் நியமனம்... அண்ணாமலையின் புதுக்கணக்கு!

அனுபவமில்லாதவர்களுக்கு முக்கியப் பொறுப்பு!

மேலும், “சிறுபான்மையினர் அணியின் தலைவரான டெய்சி சரண் காங்கிரஸிலிருந்து கட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள்தான் ஆகின்றன. மாநிலச் செயலாளர்களான அனந்த பிரியா, பிரமிளா சம்பத் ஆகியோர் கட்சியில் சேர்ந்தே மூன்று ஆண்டுகள்தான் ஆகின்றன. அரசியல் அனுபவம் பெரிதாய் இல்லையென்றாலும், ‘முக்கிய’ப் பின்புலத்துடன் களமிறக்கப்பட்டவர்கள் என்பதால் கட்சிக்குப் பொருளாதாரரீதியாக பெரிய பங்களிப்பைக் கொடுப்பார்கள் என்றே இவ்விருவருக்கும் பதவி தரப்பட்டிருக்கிறது. இப்படி முக்கியப் பொறுப்புகளிலெல்லாம் தனக்கு சாதகமான, தன்னிடம் அடக்கி வாசிக்கும் நபர்களையே நியமித்திருக்கிறார் அண்ணாமலை. ‘நான் சொல்லும் ஆட்களை நியமிக்க எனக்கு அனுமதி தாருங்கள். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தருகிறேன்’ என்று டெல்லியைச் சமாதானப்படுத்தி இந்த அபத்தமான நியமனத்தை முடித்திருக்கிறார் அண்ணாமலை” என்றார்.

“கட்சி வளர்ச்சிக்காகவே புதியவர்களுக்கு வாய்ப்பு!”

இந்த விமர்சனங்கள் குறித்து பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் கேட்டோம். “மாநிலத் துணைத் தலைவர்கள் 11 பேரில் இருவரும், 13 மாநிலச் செயலாளர்களில் மூவரும் மட்டுமே புதியவர்கள். மற்றபடி அனைத்துப் பொறுப்புகளிலும் அனுபவமிக்க நிர்வாகிகளையே நியமித்திருக்கிறோம். மாற்றுக் கட்சியிலிருந்து பா.ஜ.க-வுக்கு வந்தவர்களின் அரசியல் வரலாறு மிக நீண்டது. பா.ஜ.க-வுக்கு வேண்டுமானால் அவர்கள் புதியவர்களாக இருக்கலாம். அதுமட்டுமல்ல, மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களை அங்கீகரிக்க வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது. இதையெல்லாம் மனதில்வைத்தே இந்த நிர்வாகிகள் நியமனம் நடந்திருக்கிறது. நிர்வாகிகளின் சராசரி வயதும் கடந்த முறையைவிட 12 ஆண்டுகள் குறைந்திருக்கிறது. கட்சியின் அடுத்தடுத்த நகர்வுகளின் மூலம் நிர்வாகிகளின் தேர்வில் இருக்கும் தெளிவு புலப்படும்” என்றார்.

அண்ணாமலை கட்சி வளர்ச்சிக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கிறாரா... தனது வளர்ச்சிக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கிறாரா... என்பது புதிய நிர்வாகிகளின் செயல்பாட்டிலும், அடுத்தடுத்த காட்சிகளிலும் தெரிந்துவிடும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism