Published:Updated:

அவசரத்தில் தி.மு.க - அந்தரத்தில் அ.தி.மு.க - பரிதவிப்பில் பா.ஜ.க - பரபர நகர்ப்புறத் தேர்தல்!

ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை

ஆளுங்கட்சியாக இருந்தாலும், தடுமாற்றத்துடன்தான் இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது தி.மு.க. ஆர்வ மில்லாமல் கடமைக்குத்தான் தேர்தலைச் சந்திக்கிறது அ.தி.மு.க.

அவசரத்தில் தி.மு.க - அந்தரத்தில் அ.தி.மு.க - பரிதவிப்பில் பா.ஜ.க - பரபர நகர்ப்புறத் தேர்தல்!

ஆளுங்கட்சியாக இருந்தாலும், தடுமாற்றத்துடன்தான் இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது தி.மு.க. ஆர்வ மில்லாமல் கடமைக்குத்தான் தேர்தலைச் சந்திக்கிறது அ.தி.மு.க.

Published:Updated:
ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை

தமிழகத்தில் கடந்த 11 ஆண்டுகளாக நடைபெறாமலிருந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், விரைவில் நடக்கவிருக்கிறது. வார்டு வரையறை பிரச்னைகள், வெள்ள பாதிப்பு, கொரோனா பரவல் என ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி இந்தத் தேர்தலை ஒத்திப்போடும் முயற்சியிலேயே இருந்துவந்தது ஆளுங்கட்சியான திமுக. உச்ச நீதிமன்றத்தின் அழுத்தமான உத்தரவுக்குப் பிறகும்கூட தேர்தல் குறித்து ஆர்வம் காட்டவில்லை. கொரோனா மூன்றாம் அலையைக் காரணம் காட்டி இன்னும் கொஞ்சம் தள்ளிப்போடலாம் என்ற கணக்கிலிருந்த தி.மு.க-வின் யோசனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஐந்து மாநிலத் தேர்தல்!

ஜனவரி 22-ம் தேதி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை அறிவிக்கவிருக்கிறது தேர்தல் ஆணையம். தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளிலும் அனல் கிளம்பத் தொடங்கியிருக்கிறது. கூட்டணி, பங்கீடு, நிதி, உள்ளடி வேலைகள் என இப்போதே குஸ்திகள் ஆரம்பித்துவிட்டன.

“ஆளுங்கட்சியாக இருந்தாலும், தடுமாற்றத்துடன்தான் இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது தி.மு.க. ஆர்வ மில்லாமல் கடமைக்குத்தான் தேர்தலைச் சந்திக்கிறது அ.தி.மு.க. தனது கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-விடம் வார்டுகளைக் கேட்டு மிரட்டவும் முடியாமல், கெஞ்சவும் முடியாமல் பரிதவிக்கிறது பா.ஜ.க. காங்கிரஸுக்கும் கிட்டத்தட்ட இதே நிலைதான்” என்கிறார்கள் அந்தந்தக் கட்சிக்காரர்களே. சரி, இவற்றோடு மற்ற கட்சிகளின் நிலையையும் வியூகங்களையும் அறியலாம் எனக் களமிறங்கினோம்...

அவசரத்தில் தி.மு.க - அந்தரத்தில் அ.தி.மு.க - பரிதவிப்பில் பா.ஜ.க - பரபர நகர்ப்புறத் தேர்தல்!

கள நிலைமை மாறியுள்ளது...

ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், பெரும் வெற்றிபெற்றது தி.மு.க. ‘அதே வேகத்தில் நகர்ப்புறத் தேர்தலையும் நடத்திவிடலாம்’ என்று தி.மு.க-வின் சில மூத்த நிர்வாகிகள் தலைமையிடம் சொன்னபோது, “ஒன்பது மாவட்ட நிலை வேறு, நகர்ப்புற நிலை வேறு. குடும்பத் தலைவிகளுக்கு அறிவித்த உரிமைத்தொகை, சிலிண்டருக்கு மானியம் உள்ளிட்ட முக்கியமான வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்ற முடியவில்லை. வெள்ள பாதிப்புக்கும் நிவாரணத் தொகை வழங்க முடியவில்லை. எனவே, முடிந்த அளவு தேர்தலைத் தள்ளிப்போடலாம். குறைந்தபட்சம் பொங்கல் பரிசுக்குப் பிறகாவது தேர்தலைச் சந்திப்பதுதான் நமக்குச் சாதகமாக இருக்கும்” என்றது தலைமை. ஆனால், பொங்கல் பரிசுத்தொகுப்பும் பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், மிகுந்த சங்கடத்துடனேயே தேர்தலை எதிர்கொள்கிறது தி.மு.க.

தி.மு.க முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம், “ஆளுங்கட்சியாக இருப்பதால் தேர்தலில் எளிதாக வென்றுவிடலாம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அப்படியில்லை. கடந்த மூன்று மாதங்களில் கள நிலைமை மொத்தமாக மாறியுள்ளது. தமிழகம் முழுக்கப் பரவலாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போது, மக்கள் நிவாரணத் தொகையை எதிர்பார்த்தார்கள், ஆனால் வழங்க முடியவில்லை. நகைக்கடன் தள்ளுபடி விஷயத்திலும் மக்களிடம் அதிருப்தி எழுந்தது. அ.தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்டதுபோல பொங்கல் பரிசுப் பணம் வழங்குவோம் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். அதையும் கொடுக்க முடியவில்லை என்பதோடு, கொடுத்த பொங்கல் பரிசுத்தொகுப்பிலும் ஏராளமான பிரச்னைகள். மற்றொரு பக்கம், பத்தாண்டுகளாக ஆட்சியில் இல்லாததால் கீழ்மட்ட நிர்வாகிகளிடம் பணப்புழக்கம் இல்லை. ‘ஆட்சிக்கு வந்த பிறகும்கூடப் பெரிதாகச் சம்பாதிக்க முடியவில்லை. எல்லா டீலிங்குகளும் மேலிடத்தோடு முடிந்துபோகின்றன’ என்கிற புலம்பல் இருக்கிறது. எனவே, வழக்கமான தேர்தல் உற்சாகம் அவர்களிடம் இல்லை. ‘தாமதப்படுத்த முடியாத தேர்தலை இனி அவசரப்படுத்தலாம்’ என்பதுதான் தலைமையின் கடைசிகட்ட ஐடியாவாக இருக்கிறது. பெரிதாக எந்தக் கட்சியும் போதிய முன்னேற்பாட்டோடு இல்லை. யாருக்கும் அவகாசம் தராமல், தேர்தல் தேதியை அறிவித்துவிட்டு, குறைந்த காலத்துக்குள் அதாவது 20 நாள்களுக்குள் வாக்குப்பதிவை நடத்தினால், அது நமக்குச் சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறது தலைமை. மேலும் தேர்தலுக்கு இடைப்பட்ட காலத்தில், அடுத்தடுத்து சில ரெய்டுகளை நடத்துவதன் மூலம் அ.தி.மு.க தரப்பை மொத்தமாக பலவீனப்படுத்தும் திட்டமும் உள்ளது” என்றவர்களிடம் கூட்டணிக் கட்சிகளுடனான குஸ்தி குறித்துக் கேட்டோம்.

“கொடுப்பதை வாங்கிக்கொள்ளுங்கள்!”

“எதிர்க்கட்சியாக இருந்து உள்ளாட்சித் தேர்தலைச் சந்தித்தபோதே, கூட்டணிக் கட்சிகளிடம் கறார் காட்டியது தி.மு.க. ஆனால், இப்போது வலுவான ஆளுங்கட்சியாக இருக்கிறது. எனவே, வார்டு பங்கீடு விஷயத்தில் தி.மு.க-வின் முடிவு குறித்த அச்சம் கூட்டணிக்குள் அதிகம் உள்ளதுதான். யதார்த்தத்தைச் சொல்ல வேண்டுமென்றால், 80 சதவிகிதத்துக்குக் குறையாத அளவில் தி.மு.க நிற்கும். மீதம்தான் கூட்டணிக் கட்சிகளுக்கு. சட்டமன்றத் தேர்தலை முன்வைத்துத்தான் கூட்டணியெல்லாம். உள்ளாட்சித் தேர்தலிலும் அதை எதிர்பார்க்க முடியாது. கொடுப்பதை வாங்கிக்கொள்ள வேண்டியதுதான். மேலும், மேயர் பதவி குறித்து மட்டும்தான் தலைமை முடிவெடுக்கும். மற்றபடி நகராட்சி, பேரூராட்சி விவகாரங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளே கூட்டணிக் கட்சிகளுடன் பேசி முடிவெடுத்துக்கொள்ள வேண்டியதுதான். மேயர், நகர்மன்றப் பதவிகளுக்கு நேரடித் தேர்வு முறை இல்லை என்பதால், கூட்டணிக் கட்சிகள் குட்டிக்கரணம் அடித்தாலும் எங்களைவிட்டுச் செல்ல முடியாது” என்றார்கள் நம்பிக்கையோடு.

கூட்டணிக் கட்சிகள் தரப்பில் விசாரித்தோம். “காங்கிரஸ் கட்சி இரண்டு மாநகராட்சியை வாங்கிவிட வேண்டுமென்று நினைக்கிறது. கூடுதலாகச் சில நகராட்சிகளில் துணைத் தலைவர் பொறுப்புகளை எதிர்பார்க்கிறது. கம்யூனிஸ்ட்டுகள், தஞ்சாவூர், திருப்பூர் மாநகராட்சியை எதிர்பார்க் கிறார்கள். சில நகராட்சி, பேரூராட்சிகளைப் பெற்றுவிட முயல்கிறது ம.தி.மு.க. மறைமுகத் தேர்வுக்கான மசோதாவை, அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வந்தபோது, அதன் அறிமுக நிலையிலேயே அதை எதிர்த்த தி.மு.க., இப்போது அதையே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறது. அதைப் புரிந்துகொண்டு அதற்கு எதிரான குரலை முன்வைத்தார் திருமாவளவன். அது எடுபடாமல் போன நிலையில், ஒரு மாநகராட்சியையாவது பெற்றுவிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்” என்றனர்.

அவசரத்தில் தி.மு.க - அந்தரத்தில் அ.தி.மு.க - பரிதவிப்பில் பா.ஜ.க - பரபர நகர்ப்புறத் தேர்தல்!

“திட்டமிடவே இல்லை...” அந்தரத்தில் அ.தி.மு.க!

சமீபத்தில், அனைத்துக் கட்சியினருடன் தேர்தல் ஆணையம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் “துணை ராணுவப் பாதுகாப்பு வேண்டும். தலைவர்கள் பிரசாரத்துக்கு எந்தச் சிக்கலும் வரக் கூடாது” எனப் பல ஆலோசனைகளை வழங்கியது அ.தி.மு.க தரப்பு. ``எல்லாம் சரி, தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறீர்களா?’’ என்று கேட்டால், “இல்லை!” என்று விரக்தியாகக் கையை விரிக்கிறார்கள். அ.தி.மு.க அமைப்புச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். “கடந்த நவம்பர் மாதம் முதலே தமிழகத்திலுள்ள பெரும்பாலான கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்ப மனு வாங்குவது முதல் நேர்காணல் வரை நடத்திவந்தனர். ஆனால், எங்கள் கட்சிக்குள் நடந்த பஞ்சாயத்துகளைத் தீர்க்கவே எங்களுக்கு டிசம்பர் மாதம் வரை ஆகிவிட்டது. இதுவரை விருப்ப மனு மட்டுமே பெறப்பட்டுள்ளன. அதுவும்கூட முழுமையாகப் பெறப்படவில்லை. மாவட்ட நிர்வாகிகள் கொடுக்கும் லிஸ்ட்டை அப்படியே அறிவிக்க வேண்டியதுதான். எந்தத் திட்டமிடலும் இல்லாமல் அந்தரத்தில்தான் இந்தத் தேர்தலை எதிர்கொள்ளப்போகிறோம். சமீபத்திய உள்ளாட்சித் தேர்தலிலேயே எங்கள் நிலைமையைப் பார்த்திருப்பீர்கள். மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களே அந்தத் தேர்தலில் பெட்டியைத் திறக்கவில்லை. கட்சிக்குள் சுத்தமாகப் பணப் புழக்கம் இல்லை. கட்சித் தலைமைகளிடமும் பெரிய உற்சாகமில்லை. கடந்தகாலங்களில் அமைச்சர்களாக இருந்து சம்பாதித்தவர்கள், தேர்தல் செலவுகளைப் பார்த்துக்கொள்ள வேண்டியவர்களெல்லாம் அமைதியாக ஒதுங்கிக்கொள்ள ஆரம்பித்துள்ளார்கள். சொந்தக் காசைச் செலவுசெய்து தேர்தலில் நிற்க விரும்புகிறவர்களுக்குத் தாராளமாக வாய்ப்பு கிடைக்கும். அதேசமயம், தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க நிறைவேற்றாமல் இருப்பது, பொங்கல் பரிசுப் பணம் கொடுக்க முடியாமல் போனது உள்ளிட்ட பல விஷயங்களில் இந்த ஆட்சிமீது மக்களுக்கிருக்கும் அதிருப்தியும் எங்களுக்குச் சாதகமாக அமையும்” என்றார்கள்.

அவசரத்தில் தி.மு.க - அந்தரத்தில் அ.தி.மு.க - பரிதவிப்பில் பா.ஜ.க - பரபர நகர்ப்புறத் தேர்தல்!

“பா.ஜ.க எதிர்பார்ப்பு சாத்தியமில்லை!”

பனிப்போர் ஒருபக்கம் தொடர்ந்தாலும், அ.தி.மு.க-வை இன்னும் கெட்டியாகவே பிடித்துக்கொண்டிருக்கிறது பா.ஜ.க. ‘உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை பா.ஜ.க-வின் நிலை என்ன?’ என்று மாநில நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். “இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, அ.தி.மு.க-வுடன் கூட்டணியிலிருக்கும் பெரிய கட்சி நாங்கள்தான். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மூன்றிலும் மொத்தமாகச் சரிபாதி அளவில் வார்டுகளைக் கேட்கும் முடிவில் இருக்கிறோம். கோயம்புத்தூர், திருப்பூர், நாகர்கோவில், ஈரோடு, ஓசூர், சிவகாசி உள்ளிட்ட ஆறு மாநகராட்சிகள் எங்கள் சாய்ஸ். அதேபோல, எங்களுக்குச் செல்வாக்குள்ள பகுதிகளில் நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பொறுப்புகளையும் கேட்கும் முடிவிலிருக்கிறோம். வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட தேர்தல் பணிகளை முடித்து தயாராக இருக்கிறோம்” என்றார்.

ஆனால், கூட்டணிக் கட்சிகள் குறித்து அ.தி.மு.க தரப்பில் கேட்டால், “எங்கள் கட்சியில் பிரச்னைகள் இருப்பது உண்மைதான். அதற்காகக் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களைக் கொடுத்து, எங்கள் இமேஜைக் கெடுத்துக்கொள்ள மாட்டோம். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் எப்படி பத்து சதவிகித இடங்களைக் கொடுத்தோமோ, அதே அளவில்தான் இப்போதும் கொடுப்போம். பா.ஜ.க எதிர்பார்க்கும் விஷயமெல்லாம் கனவில்கூட சாத்தியமில்லை. எப்படியாவது அதிக இடங்களைப் பெற்று கீழ்மட்ட அளவில் தனக்கு பலமிருப்பதாக நிரூபிக்கப் பரிதவிக்கிறது பா.ஜ.க. ஆனால், உண்மை நிலை வேறு. இப்போது எங்கள் மடியில் எந்த கனமும் இல்லை, அவர்கள் எங்களை மிரட்டுவதற்கு. உள்ளாட்சித் தேர்தல் என்பது கட்சியின் அடிப்படை நிர்வாகிகளுக்கான தேர்தல் கள வாய்ப்பு. அதை அடுத்த கட்சிக்குக் கொடுத்துவிட்டு, அ.தி.மு.க தன்னை ஒருபோதும் பலவீனமாக்கிக் கொள்ளாது” என்றார்கள்.

அவசரத்தில் தி.மு.க - அந்தரத்தில் அ.தி.மு.க - பரிதவிப்பில் பா.ஜ.க - பரபர நகர்ப்புறத் தேர்தல்!

பரீட்சையில் பா.ம.க!

அ.தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறி, ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டுக் கையைச் சுட்டுக்கொண்டது பா.ம.க. தேர்தல் ரிசல்ட்டுக்குப் பிறகு, கடுமை யான உணர்ச்சிக் கொந்தளிப்போடு அடிக்கடி தொண்டர்களைச் சந்தித்துவந்தார் ராமதாஸ். வட மாவட்டங்களில் மட்டுமே குறிப்பிடத்தக்க செல்வாக்குள்ள பா.ம.க., தமிழகம் முழுவதுமான இந்தத் தேர்தலைத் தனித்து எதிர்கொள்ளவிருப்பது மிகப்பெரிய சவால்தான் என பா.ம.க-வினரே ஒப்புக்கொள்கிறார்கள்.

பா.ம.க மாவட்டப் பொறுப்பாளர்கள் சிலரிடம் பேசினோம். “கட்சித் தலைமை, தனித்து நிற்பது என்பதில் உறுதியாக இருந்தாலும், கள நிலவரப்படி அது ரிஸ்க்கான முடிவுதான். அசுர பலத்தோடு இருக்கிறது ஆளுங்கட்சி. எதிர்க்கட்சியும் தன் பங்குக்கு வரிந்துகட்டுகிறது. இந்த இரண்டு கட்சிகளையும் பெரும் நிதி இல்லாமல் எதிர்கொள்வது சாத்தியமில்லை. ஆனாலும், வட மாட்டங்களில் எங்களுக்கேயான செல்வாக்கில் குறிப்பிடத்தக்க இடங்களைப் பிடிப்போம். தெற்கில், மாற்றுச் சமூக அமைப்புகளுடன் கூட்டணி சேர்ந்து, போட்டியிடலாமா என்றும் தலைமை யோசிக்கிறது. எப்படிப் பார்த்தாலும், இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை பா.ம.-கவுக்கு மற்றுமொரு பரீட்சைதான்!” என்றார்கள்.

அவசரத்தில் தி.மு.க - அந்தரத்தில் அ.தி.மு.க - பரிதவிப்பில் பா.ஜ.க - பரபர நகர்ப்புறத் தேர்தல்!

முந்திக்கொண்ட கமல்!

கடந்த சட்டமன்றத் தேர்தலில், கணிசமான வாக்கு வங்கியைப் பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி, இந்தத் தேர்தலையும் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வாய்ப்பாகவே பார்க்கிறது. கடந்த டிசம்பர் மாதம் முதலே தேர்தல் வேலையை ஆரம்பித்து, கிட்டத்தட்ட வேட்பாளர்கள் இறுதி செய்வது வரை அனைத்துப் பணிகளையும் முடித்துவிட்டது. வெற்றியோ தோல்வியோ களத்தில் நிற்போம் என்று முஷ்டி உயர்த்தி நிற்கிறார்கள் நாம் தமிழர் கட்சியினர்.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, சலசலத்துப்போயிருந்தது மக்கள் நீதி மய்யம். ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில், போட்டியிட வேட்பாளர்கள் இல்லாமல் தத்தளித்தது. அதனால், இந்தத் தேர்தலில் போட்டியிடுமா என்கிற கேள்விகூட எழுந்தது. ஆனால், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே கோயம்புத்தூர், மதுரை, சென்னை, ஆவடி ஆகிய மாநகராட்சிகளுக்கும் போடி நகராட்சிக்கும் கணிசமான வேட்பாளர்களை முந்திக்கொண்டு அறிவித்தது ம.நீ.ம. ‘கடந்த ஊரகத் தேர்தலைப்போல அல்ல, இந்த நகர்ப்புறத் தேர்தலில் கணிசமான வாக்குகளையும் பல இடங்களையும் கண்டிப்பாக வெல்வோம்’ என்ற நம்பிக்கையில் உள்ளார் கமல்.

தனித்துப் போட்டியிடும் சூழலில் தே.மு.தி.க நிர்வாகிகள் இல்லாததால், கட்சித் தலைமையிலிருந்து “கட்சியிலிருந்து சல்லிப் பைசா கிடைக்காது... பணம் இருப்பவர்கள், செல்வாக்கு இருப்பவர்கள் போட்டியிட்டு ஜெயித்துக்கொள்ளுங்கள்” என்று அக்கட்சித் தலைமை வாய்மொழியாகவே நிர்வாகிகளுக்கு அறிவித்துவிட்டது. அ.ம.மு.க-வைப் பொறுத்தவரை, ‘கட்சி என்ன நிலை எடுக்கப்போகிறது என்கிற ரகசியம், தினகரன் வாய் திறந்தால் மட்டுமே தெரியும்’ என்கிறார்கள் அந்தக் கட்சியினர். 129 இடங்களில் ஜெயித்ததாகச் சொல்லிக்கொள்ளும் விஜய் மக்கள் இயக்கம், இந்த முறையும் களத்தில் இறங்க முடிவெடுத்துள்ளது.

எல்லாக் கட்சிகளுக்கும் எல்லாத் தேர்தலுமே முக்கியமானவைதான். என்றாலும், உள்ளாட்சித் தேர்தல் என்பது ஒரு கட்சியின் ஆதார வேரின் பலத்தை உலகுக்குச் சொல்வது. அந்தவகையில், அத்தனை கட்சிகளும் தங்களின் தனமானப் பிரச்னையாக நினைத்து கச்சைகட்டுகின்றன. அனல் கூடுகிறது தமிழக அரசியல் களத்தில்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism