Published:Updated:

`பிரதமருக்கு வழங்கும் அதே பாதுகாப்பைத் தரமுடியாது!’- எஸ்பிஜி விவகாரத்தில் அமித் ஷா

சிறப்பு பாதுகாப்புப் படை திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது

அமித் ஷா
அமித் ஷா

எஸ்பிஜி என்றழைக்கப்படும் சிறப்பு பாதுகாப்புப் படை திருத்த மசோதாவை மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி திங்களன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்துக்கு வழங்கிவந்த எஸ்பிஜி பாதுகாப்பை மத்திய அரசு சமீபத்தில் திரும்பப் பெற்றது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சோனியா குடும்பத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகின்றனர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலும் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்த எம்.பி-க்கள் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில்தான், மத்திய அரசு இந்த மசோதாவை திங்களன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

நாடாளுமன்றத்தில்
நாடாளுமன்றத்தில்

இந்தப் புதிய மசோதாவின்படி, ``பிரதமர் மற்றும் அவருடன் வீட்டில் இருக்கும் குடும்பத்துக்கு மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படும். அதேபோல் முன்னாள் பிரதமர் தங்களது பாதுகாப்பு தொடர்பாக அச்சுறுத்தல் குறித்து தெரிவித்தால் அதை ஆராய்ந்து பாதுகாப்பு வழங்கப்படும். முன்னாள் பிரதமர்களுக்கு 5 ஆண்டுகள் மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவானது மக்களவையில் நேற்று நிறைவேறியது. இந்த மசோதா தொடர்பான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார்.

அப்போது எதிர்க்கட்சிகளின் கேள்விக்குப் பதிலளித்தவர், ``பா.ஜ.க யாரையும் பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படவில்லை. முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும் இதுபோன்ற பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எஸ்பிஜி திருத்தமே சோனியா காந்தி குடும்பத்துக்கு எதிராகக் கொண்டு வந்ததாகப் பேசுகிறார்கள். உண்மை அதுவல்ல. சோனியா காந்தி குடும்பத்துக்கான பாதுகாப்பைத் திரும்பப் பெறவில்லை. அவர்களுக்கு Z ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அரசியல் கட்சியினருக்குப் பாதுகாப்பு வழங்க அரசு தயாராக இருக்கிறது. ஆனால், பிரதமருக்கு வழங்கும் அதே பாதுகாப்பை அரசியல் தலைவர்களுக்கு வழங்க முடியாது. 2015-ம் ஆண்டுக்குப் பிறகு ராகுல் காந்தி சிறப்பு பாதுகாப்புப் படையினருக்கு தெரிவிக்காமல் இந்தியாவில் 1,892 பயணங்களையும், வெளிநாடுகளுக்கு 247 முறையும் பயணம் செய்துள்ளார். அதேபோல் சோனியா காந்தி டெல்லியில் 50 முறையும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு 13 முறையும், வெளிநாடுகளுக்கு 29 முறையும் சிறப்பு பாதுகாப்புப் படை பாதுகாப்பு இல்லாமல் சென்றுவந்துள்ளார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்த அதிகாரிகள் பாதுகாப்பை விலக்கிக்கொள்வது குறித்து பேசியுள்ளனர். அதற்கு அவரும் உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதைச்செய்யுங்கள் என்றார். வாஜ்பாய், நரசிம்ம ராவ், தேவகவுடா குடும்பத்துக்கு வழங்கப்பட்ட எஸ்பிஜி பாதுகாப்பும் நீக்கப்பட்டது. அப்போது அவர்கள் எல்லாம் எதிர்க்கவில்லையே. காங்கிரஸ் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும். நீங்கள் இப்போது அதிகாரத்தில் இல்லை. எஸ்பிஜி பிரதமரின் பாதுகாப்பை மட்டுமே இனி கவனிக்கும்” என்றார்.

எஸ்பிஜி என்றழைக்கப்படும் சிறப்பு பாதுகாப்புக் குழுவானது பிரமரின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து, பிரதமரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக 1985-ம் ஆண்டு சிறப்பு பாதுகாப்புக் குழுவானது உருவாக்கப்பட்டது. 1988-ம் ஆண்டு இதற்கு சட்ட வடிவம் கொடுக்கப்பட்டது. இந்தச் சிறப்புப்படை பாதுகாப்புப் பிரிவில் சுமார் 3,000 வீரர்கள் உள்ளனர். அவர்கள் வி.வி.ஐ.பி-க்களின் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வர்.

வாஜ்பாய்
வாஜ்பாய்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பின்னர், இந்தச் சிறப்புப் பாதுகாப்புச் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. அதன்படி முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு 10 ஆண்டுகள் வரை இந்தப் பாதுகாப்பு வழங்கப்படும் என்று விதிகள் கொண்டுவரப்பட்டன. 2003-ம் ஆண்டு வாஜ்பாய் அரசு மீண்டும் பதவியேற்றபோது முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு 10 ஆண்டுகள் வரை பாதுகாப்பு வழங்கப்படும் என்ற விதிகளில் மாற்றம் கொண்டுவந்தார். தற்போது மத்திய அரசு மேலே குறிப்பிடப்பட்டுள்ள சில திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது.