Published:Updated:

எஸ்.பி.ஜி புகார்; கம்போடியாவே கடைசி! - ராகுலின் வெளிநாடு டிரிப்புக்குக் கெடுபிடி காட்டும் மத்தியஅரசு

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மேலிடத் தலைவர்கள் மனக்குமுறலைக் கொட்டவே, நீண்ட சர்ச்சைகளுக்குப் பின் ராகுல் கம்போடியாவுக்குச் சென்றுள்ளதாக காங்கிரஸ் தலைமையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் வரும் 21-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக மற்ற கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுவரும் வேளையில் காங்கிரஸ் கட்சியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கு காரணம் ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணம்தான். நான்கு நாள் பயணமாக வெளிநாடு சென்றுள்ளார் ராகுல். ஆனால், அவர் எங்கு சென்றிருக்கிறார் என்பதே பெரிய கேள்விக்குறியாக இருக்க, காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் அவரது பயணம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

`தேர்தல் நேரத்தில் பிரசாரத்தை விடுத்து இப்படி வெளிநாடு செல்லலாமா' என மேலிடத் தலைவர்கள் மனக்குமுறலைக் கொட்டவே, நீண்ட சர்ச்சைகளுக்குப் பின் ராகுல் கம்போடியாவுக்குச் சென்றுள்ளதாக காங்கிரஸ் தலைமையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ``ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொதுவாழ்க்கையுடன் தொடர்புபடுத்தக் கூடாது. ஜனநாயக நாட்டில், பொதுவாழ்க்கைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளன. இங்கு ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரம் மதிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தை யார் சர்ச்சையாக்க முயற்சி செய்கிறார்களோ அவர்கள், மக்களைக் குழப்பி, தங்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்று அர்த்தம்.

`இனி 98 அல்ல 217 கி.மீட்டர் பயணம்!' - வயநாடு போராட்டத்துக்குக் கரம் கொடுத்த ராகுல் காந்தி

கம்போடியா பயணத்தை முடித்துக்கொண்டு ராகுல் பிரசாரம் செய்வார்" என்று கூறியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரான அபிஷேக் மனு சிங்வி. இது ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் எஸ்பிஜி பாதுகாப்பில் புதிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளார் ராகுல். ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி என மூவர் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதால், அவர்களுக்கு எப்போதும் எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தப் பாதுகாப்பை அவர்கள் இந்தியாவில் இருக்கும்போது மட்டும்தான் பயன்படுத்துகின்றனர் எனக் கூறப்படுகிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ராகுல், சோனியா ஆகியோர் இத்தாலி, இங்கிலாந்து என அடிக்கடி தனிப்பட்ட முறையில் பயணம் செல்வது வழக்கம். இந்த மாதிரியான பயணங்களின் போது எஸ்பிஜி பாதுகாப்பு வீரர்களை தங்களுடன் வருவதற்கு ராகுல், சோனியா ஆகியோர் அனுமதிப்பதில்லையாம். தனிப்பட்ட பயணமாக வெளிநாடுகள் செல்லும்போது எஸ்பிஜி படை வீரர்களை விமான நிலையத்தோடு திருப்பி அனுப்பி விடுகின்றனர். சமீபத்தில் சோனியா காந்தி மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றபோதுகூட எஸ்பிஜி பிரிவினரை உடன் வர அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

Vikatan

சில நேரங்களில் இந்திய தூதரங்களுக்குக் கூட தகவல் தெரிவிக்காமல் இவர்கள் பயணம் செய்வதாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் எஸ்பிஜி படை வீரர்கள் சமீபத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அதில், ``ராகுலோ அல்லது அவரின் குடும்பத்தினர்களோ அலுவல் ரீதியாகப் பயணம் செய்யும்போது மக்களவை சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறையிடம் தெரிவிப்பதால் அந்தப் பயணங்களில் நாங்கள் அவர்களுடன் செல்கிறோம். அதேநேரம் தனிப்பட்ட பயணத்தில் அவர்களுடன் எங்களை உடன் செல்ல அனுமதிப்பதில்லை" எனப் புகார் கூற தற்போது எஸ்பிஜி பாதுகாப்பில் புதிய விதிமுறைகளை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

சோனியா காந்தி
சோனியா காந்தி

அதன்படி ராகுலே நினைத்தால்கூட அவர்களை தடுக்க முடியாத வகையில் புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. புதிய விதியின்படி, ராகுல் விரும்பினாலும், இல்லையென்றாலும் கூட இனி அவரைச் சுற்றி எப்போதும் எஸ்பிஜி படை வீரர்கள் உடனிருப்பர். வெளிநாடுகளுக்குச் சென்றாலும் எஸ்பிஜி வீரர்களும் உடன் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ராகுலைச் சுற்றி இனி எஸ்பிஜி பாதுகாப்புப் படையினர் இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

Vikatan

இந்த விவகாரம் குறித்து எஸ்பிஜி அமைப்பில் உள்ள மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஐ.ஏ.என்.எஸ் தளத்துக்கு அளித்துள்ள பேட்டியில், ``சமீபத்தில் சோனியா மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோதுகூட எங்கள் வீரர்களை அனுமதிக்கவில்லை. இருந்தும் அவரின் பயணம் குறித்து இந்திய தூதரகத்துக்கு நாங்கள் தெரியப்படுத்தினோம். இதேபோல் ராகுல் எப்போதும் தனது தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணங்களின் போது எஸ்பிஜி வீரர்களை தன்னுடன் வர அனுமதித்தது இல்லை. இருப்பினும் அவரின் பாதுகாப்பு கருதி எஸ்பிஜி வீரர்கள் அவர் செல்லும் நாட்டில் இந்திய தூதரகத்துக்கு ராகுலின் வருகை குறித்து தெரிவித்துவந்தனர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ஆனால், தனது பயணம் முடித்து எப்போது நாடு திரும்பினாலும் ராகுல் எங்களுக்குத் தகவல் தெரிவித்து விடுவார். 20 நிமிடங்கள் முன்னதாகவே விமான நிலையத்துக்கு வருமாறு ராகுல் கூறிவிடுவார். அதன்படியே எஸ்பிஜி வீரர்கள் ராகுல் காந்தியை அழைத்துச் செல்வார்கள். இனி அப்படிச் செய்ய முடியாது. எஸ்பிஜி விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுவிட்டது. புதிய விதிகள் குறித்து, ராகுலிடமும் அவரது குடும்பத்தினரிடம் விளக்கம் கொடுத்துவிட்டோம்" எனக் கூறியுள்ளனர். புதிய விதிப்படி எஸ்பிஜி பாதுகாப்பு இல்லாமல் ராகுல் செல்லும் கடைசிப் பயணமாக கம்போடியா பயணமாகவே இருக்கும்.

ராஜினாமா இளவரசர் ராகுல்!
பின் செல்ல