Published:Updated:

அதிமுக: `ஸ்பாட்’ தீர்மானம்... எடப்பாடியின் பொதுக்குழு பிளான்!

 எடப்பாடி

ஆலோசனைக் கூட்டத்தில் மாதவரம் மூர்த்தியைவைத்து பிரச்னை கிளப்பியதுபோல, பொதுக்குழு ஸ்பாட்டிலும் ஒற்றைத் தலைமை குறித்து பிரச்னை கிளப்ப எடப்பாடி வியூகம் அமைத்திருக்கிறாராம்.

அதிமுக: `ஸ்பாட்’ தீர்மானம்... எடப்பாடியின் பொதுக்குழு பிளான்!

ஆலோசனைக் கூட்டத்தில் மாதவரம் மூர்த்தியைவைத்து பிரச்னை கிளப்பியதுபோல, பொதுக்குழு ஸ்பாட்டிலும் ஒற்றைத் தலைமை குறித்து பிரச்னை கிளப்ப எடப்பாடி வியூகம் அமைத்திருக்கிறாராம்.

Published:Updated:
 எடப்பாடி

`இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்... இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்கிற எம்.ஜி.ஆரின் பாடல் வரிகள் இன்றைய அ.தி.மு.க-வுக்கு அப்படியே பொருந்துகிறது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அ.தி.மு.க-வைப் பற்றிய பேச்சுதான் ஊரெங்கும் ஒலிக்கிறது. அந்த அளவுக்கு ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் சூடாகியிருக்கிறது. எப்போதும் பிரச்னைகளை மனதுக்குள் போட்டுப் புதைத்துக்கொள்ளும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இந்த முறை வாழ்வா சாவா பிரச்னை என்பதால், பொங்கி எழுந்துவிட்டார். ஜூன் 16-ம் தேதி வெளிப்படையாக மீடியா முன்பு பேட்டி கொடுத்து, அனைத்தையும் உடைத்துவிட்டார் பன்னீர். ஓ.பி.எஸ்-ஸின் கையெழுத்தின்றி ஒற்றைத் தலைமை என்பது சாத்தியமல்ல என்ற நிலை இருக்க, அதையும் சரிக்கட்ட எடப்பாடி தரப்பு பலே வியூகம் வகுத்திருக்கிறதாம்.

பன்னீர் - எடப்பாடி
பன்னீர் - எடப்பாடி

இது பற்றி நம்மிடம் பேசிய எடப்பாடி ஆதரவாளர்கள், “பொதுவாக தேர்தல் சமயத்தில் கூட்டணி குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸிடம் மீடியாக்கள் கேள்வி கேட்கும்போது, ‘பொதுக்குழு கூடி முடிவுசெய்யும்’ என்பார். ஆனால், ‘ராமதாஸும் அன்புமணியும்தான் பொதுக்குழு’ என்பது அந்தக் கட்சியினருக்கு நன்றாகவே தெரியும். அதுபோல, கட்சி என்றால் அதன் தலைமையில் யார் இருக்கிறார்களோ அல்லது நிர்வாகிகளின் ஆதரவு யார் பக்கம் இருக்கிறதோ அவர்கள் நினைப்பது நடக்கும். அப்படித்தான் ஓ.பி.எஸ் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், ஒற்றைத் தலைமை என்பது சாத்தியப்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஏனெனில், சமீபத்தில் உட்கட்சித் தேர்தல் நடந்தபோது பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடைபெற்றது. ஒன்றியம், பகுதி மாவட்டத்திலிருந்து பொதுக்குழுவுக்குச் சுமார் 800 பேர் தேர்வுசெய்யப்பட்டனர். அதுமட்டுமின்றி, நகரம், ஒன்றியம், வட்டம், பகுதி, மாவட்டம் ஆகிய பொறுப்புகளில் இருப்பவர்களும், தலைமைக் கழகப் பொறுப்புகளில் இருப்பவர்களும், எம்.எல்.ஏ-க்களும், எம்.பி-க்களும் தாங்களாக பொதுக்குழு உறுப்பினராக ஆகிவிடுவார்கள். இதன் மூலம் சுமார் 2,500 பேர் ஜூன் 23 பொதுக்குழுவில் பங்கேற்க வாய்ப்பிருக்கிறது. இதைத் தாண்டி, ஒவ்வொரு முறையும் சிறப்பு அழைப்பாளர்கள் என்கிற பெயரில், அணிகளின் நிர்வாகிகள் சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் அழைக்கப்படுவார்கள். இந்த முறை அத்தகைய சிறப்பு அழைப்பாளர்களுக்கு அனுமதியில்லை. அதனால், இருக்கும் பொதுக்குழு உறுப்பினர்களில் 80 சதவிகிதம் பேர் எடப்பாடியை ஆதரிப்பவர்கள்தான்.

பன்னீர் - எடப்பாடி
பன்னீர் - எடப்பாடி

சமீபத்தில் பிரச்னை வெடித்த ஆலோசனைக் கூட்டத்தில், மாதவரம் மூர்த்திதான் முதன்முதலில் ஒற்றைத் தலைமை குறித்துப் பேசினார். எடப்பாடியின் திட்டத்தின்படியே மூர்த்தி பேசினார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுபோல, பொதுக்குழுவில் தீர்மானங்களையெல்லாம் வாசித்து முடித்துவிட்டு, நன்றியுரை கூறுவதற்கு முன்பாக எடப்பாடிக்கு ஆதரவாக ஒருவரைப் பேசவைக்க மூவ் நடந்துவருகிறது. அநேகமாக எடப்பாடியின் நிழல்போல இருக்கும் மாவட்டச் செயலாளர் சேலம் இளங்கோவன் பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை குறித்துப் பேச வாய்ப்பிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுக்குழு தொடங்கும்வரை ஒற்றைத் தலைமை குறித்து எந்தக் கருத்தும் எழாது என்று பன்னீர் தரப்பை ஏமாற்றிவிட்டு, பொதுக்குழு முடிவில் ஒற்றைத் தலைமை குறித்துப் பேசி அங்கேயே ஸ்பாட் தீர்மானத்தையும் நிறைவேற்ற எடப்பாடி தரப்பு காய்நகர்த்திவருகிறதாம். ஏற்கெனவே, முதலமைச்சர் வேட்பாளர் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பன்னீரை ஏமாற்றி அழைத்துவந்து, காரியத்தைச் சாதித்ததை போன்று மீண்டும் நடக்கலாம்.

அதிமுக ஆலோசனைக் கூட்டம்
அதிமுக ஆலோசனைக் கூட்டம்

தொண்டர்கள் கூடித்தான் பொதுச்செயலாளர் பதவிக்கு ஒருவரைத் தேர்வுசெய்ய முடியும் என்கிறார் பன்னீர். பொதுக்குழு உறுப்பினர்களும் தொண்டர்கள்தான் என்பதால், அவர்களை வைத்தே பொதுக்குழு முடிவதற்குள் ஒற்றைத் தலைமை குறித்த முடிவை எட்டிவிட எடப்பாடி தரப்பு மெனக்கெடுகிறது.

பொதுச்செயலாளர் பதவியைத் திரும்ப எடுப்பது ஒன்றும் குதிரைக் கொம்பல்ல, முன்பு கட்சி சட்ட விதிகளைத் திருத்தியதுபோல, இப்போதும் விதிகளைத் திருத்தி எளிதாக பொதுச்செயலாளர் பதவியைக் கொண்டுவந்துவிடலாம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒற்றை ஓட்டு முறையில் தேர்தல் நடந்து மீண்டும் இருவரும் தேர்வுசெய்யப்பட்டபோதும், கடந்த ஆண்டு செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒன்றைத் துருப்புச்சீட்டாக எடப்பாடி தரப்பு வைத்திருக்கிறது. அதாவது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை அவர்கள் இருவர் நினைத்தாலும், பொதுக்குழுவே நினைத்தாலும் நீக்க முடியாது என்பதுதான் அந்தத் தீர்மானம். அதை லாகவமாக செயற்குழுவில் மட்டுமே நிறைவேற்றினார்கள். அடுத்த பொதுக்குழுவில் அதற்கு ஒப்புதல் பெற்றுக்கொள்ளலாம் என்று எடப்பாடி தரப்பு சொல்லிவிட்டதால், அந்தத் தீர்மானம் அப்படியே கிடக்கிறது.

ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான தேர்தலுக்கும் பொதுக்குழு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்பதால் இதையும், மேற்கண்ட தீர்மானத்தையும் நடைபெறவிருக்கும் பொதுக்குழுவில் வைத்து ஒப்புதல் பெற பன்னீர் தரப்பு காய்நகர்த்துகிறது. ஆனால், எடப்பாடி அதற்கு ஒப்புக்கொள்ளாததால், அநேகமாக அந்த இரண்டு ஒப்புதல்களும் இந்தப் பொதுக்குழுவில் இடம்பெற வாய்ப்பில்லை. இதன் மூலம், ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு நடந்த தேர்தலும் ஒப்புதல் பெறாததால் காலாவதியாகிவிடும், செயற்குழுத் தீர்மானமும் அப்படியே நீர்த்துப்போய்விடும். இந்த இரண்டும் இல்லையென்றால், எளிதாகக் கட்சி சட்ட விதிகளைத் திருத்த பொதுக்குழுவிலேயே எடப்பாடி தரப்பு ஒப்புதல் பெற்றுவிடும். அதன்படி, மீண்டும் சட்ட விதிகளைத் திருத்தி, ஒற்றைத் தலைமையாக எடப்பாடி அமரவும் வாய்ப்புகள் இருக்கின்றன” என்று முடித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism