Published:Updated:

மக்கள் போராட்டத்தை ஒருங்கிணைக்க வசீகரமான ஒரு தலைவர்கூட இல்லை!

விக்னேஸ்வரன்
பிரீமியம் ஸ்டோரி
விக்னேஸ்வரன்

- வருந்தும் இலங்கை எம்.பி விக்னேஸ்வரன்

மக்கள் போராட்டத்தை ஒருங்கிணைக்க வசீகரமான ஒரு தலைவர்கூட இல்லை!

- வருந்தும் இலங்கை எம்.பி விக்னேஸ்வரன்

Published:Updated:
விக்னேஸ்வரன்
பிரீமியம் ஸ்டோரி
விக்னேஸ்வரன்

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியைச் சந்தித்திருக்கிறது நம் அண்டை நாடான இலங்கை. நாளுக்கு நாள் மக்களின் போராட்டம் தீவிரமாகிக்கொண்டேயிருக்கிறது. `அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும்’ என எதிர்க்கட்சிகளும், மக்களும் போர்க்கொடி உயர்த்திவருகின்றனர். ஆனால், ‘பெரும்பான்மை இருந்தால் எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைத்துக்கொள்ளுங்கள்’ எனச் சவால் விடுத்திருக்கிறார் அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே. இந்த நிலையில், வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரனைத் தொடர்புகொண்டு சில கேள்விகளை முன்வைத்தோம்...

“இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?”

“இலங்கையில் நடந்த முப்பது ஆண்டுக்காலப் போரின்போது, எமது அந்நியச் செலாவணி பெரும்பாலும் ஆயுதம் வாங்கப் பயன்படுத்தப்பட்டது. தவிர, ஆயுதங்களுக்காகச் செலவழிக்கிறோம் என்கிற பெயரில் வளங்களையெல்லாம் விற்று, தங்கள் குடும்பத்துக்கு வெளிநாடுகளில் ஏராளமான சொத்துகளை வாங்கிக் குவித்தார்கள் எமது சிங்களத் தலைவர்கள். போர், போர் என இல்லாமல், தமிழ்த் தலைவர்களுடன் சுமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால், இலங்கை இப்படியொரு நிலையை இன்று அடைந்திருக்காது. அதுமட்டுமல்லாமல், ஜனாதிபதி பதவிக்கு வந்ததும், தனது பணக்கார நண்பர்களுக்கு ஏராளமான வரிச்சலுகைகளை வாரி வழங்கினார்கள். எமது வருமானம் வெகுவாக பாதிக்கப்பட்டது. 8,000 பில்லியனிலிருந்து 2,000 பில்லியனாக அந்நியச் செலாவணி குறைந்தது. நாட்டின் சேமிப்பு இருப்பிலிருந்து உலக நாடுகளிடம் வாங்கிய கடனை அடைத்தால், இந்த நிலைதான் வரும்!’’

மக்கள் போராட்டத்தை ஒருங்கிணைக்க வசீகரமான ஒரு தலைவர்கூட இல்லை!

“கொரோனா பாதிப்பு, சுற்றுலா குறைந்தது, இயற்கை விவசாயப் பாதை ஆகியவைதான் இந்தப் பாதிப்புக்குக் காரணங்கள் எனச் சொல்லப்படுகிறதே?”

“அப்படிப் பார்த்தால் அதற்கும் இந்த ஆட்சியாளர்கள்தானே பொறுப்பேற்க வேண்டும்... இயற்கை விவசாயப் பாதையை விரும்பி நல்ல எண்ணத்திலெல்லாம் இந்த அரசாங்கம் தேர்வுசெய்யவில்லை. கையில் இருப்பு எதுவும் இல்லாமல் இருந்ததால்தான், இயற்கை விவசாயம் பக்கம் அரசாங்கம் திரும்பியது. அதுதான் உண்மை. கொரோனா, சுற்றுலா குறைந்தமை போன்றவை எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்!”

“இலங்கை இந்த நிலைமையிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்?’’

“அந்நியச் செலாவணி இருப்பை அதிகப்படுத்த வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தைக்கொண்டு கடன்களை மீள் அட்டவணைக்கு உட்படுத்த வேண்டும். கடன்களை மீளக் கட்டு வதற்கான கால அவகாசத்தை நீட்டித்துக் கேட்க வேண்டும். ஆனால், நிதியம் இதற்கான சில கட்டுப்பாடுகளை விதிக்கும். உதாரணமாக, மானியச் சலுகைகள் கூடாது எனச் சொல்வார்கள். அந்தக் கட்டுப்பாடுகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும். அதேவேளையில், சலுகைகளை முடக்கினால் மக்களின் எதிர்ப்பு வளரும். அந்த எதிர்ப்புதான் இப்போது இலங்கையில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்போதைக்கு இந்தியா எங்களுக்கு உதவி செய்திருக்கிறது. அந்த உதவி எந்த அளவுக்குப் பயன்படும் எனத் தெரியவில்லை. ஆனால், பட்டினிச் சாவிலிருந்து எங்களைத் தற்போதைக்குக் காப்பாற்றும். மருந்துகள் திரும்பவும் எமக்குக் கிடைக்கக்கூடும். ஆனால் சில காலத்துக்குப் பிறகு..?”

“இப்போதும்கூட எதிர்க்கட்சிகள் ஓரணியில் ஒன்று திரள்வதில் சிக்கல்கள் இருக்கின்றனவா?”

“ஆம். எதிர்க்கட்சிகளுக்குள் போட்டித்தன்மை இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர்களில் ரணிலுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் வித்தியாசமான எண்ணங்கள் இருக்கின்றன. ரணில், சஜித்தை டாமினேட் செய்ய நினைக்கிறார். அதனால், எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஆளும் தரப்புக்கு ஆதரவாகப் பேசிக்கொண்டிருக்கிறார். தவிர, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் வசீகரத்தன்மை சஜித் பிரேமதாசவிடமோ ரணிலிடமோ இல்லை. ஜே.வி.பி-யின் தலைவருக்கு அது இருக்கிறது. ஆனால், இடதுசாரிக் கொள்கைகளில் அனைவருக்கும் உடன்பாடு இல்லை. அதனால்தான் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள முடியவில்லை!’’

“ `மக்கள் போராடத் தயாராகிவிட்டார்கள். ஆனால், அவர்களை முறையாக வழிநடத்தத் தலைவர்கள் இல்லை’ என்று சொல்லப்படுகிறதே?”

“அது உண்மைதான்... நான் ஏற்கெனவே சொன்னபடி, வசீகரமான தலைவர் ஒருவர்கூட இல்லை. அதுதான் காரணம். ஒருவேளை இந்த முரண்பட்ட நிலையிலிருந்து ஒருவர் வெளிப்படுவாரோ தெரியாது!”

“எதிர்க்கட்சிகள் ஆட்சியமைக்க வாய்ப்பிருக்கிறதா?”

“இல்லை என்பதே என்னுடைய கருத்து. தற்போது எதிர்க்கட்சித் தலைவர்களாக இருப்பவர்களில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தலைவர் என்று ஒருவரும் இல்லை. ஆனால், ஒரு தலைவர் நினைத்தால் வாய்ப்பிருக்கிறது. அவர் சந்திரிகா அம்மையார். அவர் தற்போது எம்.பி-யாக இல்லை. ஆனால், 2015-ல் அவர்தான் திரைமறைவில் இருந்துகொண்டு அனைவரையும் ஒருங்கிணைத்து மைத்திரிபால சிறிசேனாவை அதிபராக்கினார். இப்போதிருக்கும் தலைவர்களில் அவர் சற்று மேம்பட்டவர். பழைய ஜனாதிபதி. பண்டாரநாயக குடும்பத்தவர், ராஜபக்சேவுக்கு எதிரானவர் என்கிற முறையில் மக்களும் அவரை ஏற்றுக்கொள்வார்கள்”

“தற்போது இந்தியத் தலைவர்களைத் தொடர்புகொண்டு நீங்கள் ஏதும் உதவி கேட்டீர்களா?”

“இல்லை. நான் மாகாண முதல்வராக இருந்திருந்தால் கேட்டிருப்பேன். நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால், ஒட்டுமொத்தமாக அனைத்துத் தலைவர்களுடன் இணைந்துதான் செயல்படவேண்டியிருக்கிறது!’’

“ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்று சேர்ந்து, 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்தக் கோரி, பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதினீர்களே, அதற்கு பதில் வந்ததா?”

“இன்னும் வரவில்லை. ஆனால், ‘கடிதம் பிரதமர் மோடிக்குக் கிடைத்துவிட்டது’ என்கிற தகவல் வந்தது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இங்கு வந்திருந்தபோது, ‘13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த வேண்டும்’ என இலங்கை அரசாங்கத்திடம் கடுமையாகச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். நான் ஒரு விடயத்தை மீண்டும் அழுத்தமாக இங்கே சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். இந்திய மத்திய அரசாங்கம், சிங்கள மத்திய அரசாங்கத்துடன் நல்ல உறவில் இருக்க வேண்டும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், நெருக்கடி நிலைமையில் இந்தியா உதவி செய்தாலும்கூட, சீனாதான் எமது சிங்களத் தலைவர்களின் உண்மையான நண்பர்கள். இந்தியாவுக்கு இலங்கையின் வடகிழக்கு மக்கள்தான் எப்போதும் உண்மையான நண்பர்கள். அதை இந்தியா தெரிந்துவைத்திருக்க வேண்டும்!”

மக்கள் போராட்டத்தை ஒருங்கிணைக்க வசீகரமான ஒரு தலைவர்கூட இல்லை!

“இலங்கையில் தமிழ் மக்களின் நிலை இப்போது எப்படி இருக்கிறது?”

“விலையேற்றம், எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு, மருந்துத் தட்டுப்பாடு போன்ற சிங்கள மக்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச்னைகளையும் தமிழ் மக்களும் சந்திக்கிறார்கள். ஆனால், இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் தொல்பொருள் ஆராய்ச்சி என்கிற பெயரில் தமிழர் பகுதிகளில் நில அபகரிப்பு தொடர்ந்து நடந்துகொண்டிருப்பதுதான் வேதனை. பௌத்த வணக்க ஸ்தலங்கள் இருந்ததாகச் சொல்லி அதைச் செய்கிறார்கள். அது உண்மை என்று வைத்துக்கொண்டாலும், அது தமிழ் பௌத்த அடையாளங்கள்தானே ஒழிய, சிங்கள பௌத்த அடையாளங்கள் அல்ல. ஆனால், ராணுவ பலத்தோடு நில அபகரிப்புகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். தவிர, வனத்துறைக்குச் சொந்தமானது என இங்கிருந்து இந்தியா போன்ற இடங்களுக்குச் சென்ற மக்களின் நிலங்களைக் கையகப்படுத்துகிறார்கள். முல்லைத்தீவு வரை சிங்கள மக்களை அங்கு குடியமர்த்தி வருகிறார்கள்.”

“ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், தமிழ் மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படுமா?”

“நிச்சயமாகத் தீர்க்கப்படாது. எந்தவொரு சிங்கள ஆட்சியாளரும் அதைச் செய்ய மாட்டார்கள். இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடிகள் கொடுத்தால் மட்டுமே தமிழ் மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும். அதற்கு இந்தியாவின் உதவி, புலம்பெயர் மக்களின் உதவி எங்களுக்குத் தேவைப்படுகிறது. இலங்கை அரசாங்கத்துக்குத் தற்போது பணம் தேவை. வடக்கு கிழக்கு மக்களுக்கு சுயநிர்ணய உரிமை தேவை. அதனால், பணம் கொடுத்து ஒரே நாட்டுக்குள் சுயநிர்ணய உரிமையை வாங்கலாமா என்பது பற்றிக்கூட இப்போது ஆராயப்பட்டுவருகிறது!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism