Published:Updated:

இலங்கைத் தமிழர்களின் பிரச்னைகளை இந்துக்களின் பிரச்னைகள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்!

விக்னேஸ்வரன் அதிரடி

பிரீமியம் ஸ்டோரி

ந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளுக்குத் தேவை, இந்தியக் குடியுரிமையா, இரட்டைக் குடியுரிமையா என்ற வாதம் வலுபெற்றிருக்கும் நிலையில், தமிழகம் வந்திருக்கிறார் இலங்கையின் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன். தமிழர் திருநாள் நிகழ்வுகளில் பங்கேற்க வந்த அவரை சென்னையில் சந்தித்துப் பேசினோம்...

‘‘ ‘இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் மீண்டும் தாய்நாட்டுக்குத் திரும்பவேண்டும்’ என்று சொல்லியிருக் கிறீர்கள்... அப்படியென்றால் அங்கே நிலைமை சீராகிவிட்டதா?’’

‘‘எந்த விதத்திலும் சூழல் மாறவில்லை. ஆனால், இந்த விஷயத்தில் கொள்கைரீதியாக சில முடிவுகளை நாங்கள் எடுக்க வேண்டியிருக்கிறது. அதன் காரணமாக, இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழ் மக்கள் அங்கே திரும்பிவர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் தமிழர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவருகிறது. பத்து லட்சம் பேர் எங்கள் மாகாணங்களில் இருந்து வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து விட்டனர். இந்தியாவில் வசிக்கும் மக்களும் அங்கு வரவில்லை என்றால், அந்த எண்ணிக்கை மேலும் குறைந்துபோகும். ஆனால், அவர்கள் அங்கே வருவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன என்பதும் எனக்குத் தெரியும். அதன் காரணமாகத்தான் அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை கொடுக்கவேண்டும் என இந்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றோம். எங்களின் கோரிக்கையை இந்திய அரசாங்கம் கனிவோடு பரிசீலிக்க வேண்டுகிறோம்.”

“இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு இந்தியச் சட்டத்தில் இடமில்லை என்கிறார்களே?”

‘‘சட்டத்தில் இடம் இருக்கிறதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. சட்டத்தில் இடம் இருந்தால் நல்லது. அப்படி இல்லாவிட்டால், இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு ஏற்றவாறு சட்டத் திருத்தம் கொண்டுவருவதற்கு இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. அதுதான் எல்லோருக்கும் நன்மை தரக்கூடியது. அப்படிச் செய்தால், ஒரு லட்சம் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இருக்காது. எங்கள் தாயகத்திலும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.’’

‘‘முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் இந்தியக் குடியுரிமை வேண்டும் என்ற கோரிக்கையைத்தானே முன்வைக்கின்றனர்?”

‘‘தாய்நாட்டுக்குத் திரும்புவதற்கு எங்கள் மக்கள் நிச்சயம் விரும்புவார்கள். ஆனால், இங்கு கிடைக்கக் கூடிய வாழ்வாதாரம், குழந்தைகளின் கல்விக்கான உதவிகள் அங்கு வந்தால் கிடைக்குமா என்கிற பயம்தான் அவர்கள் இலங்கை வருதவதைத் தடுக்கிறது. அதை உறுதிசெய்தால் நிச்சயமாக அவர்கள் தாய்நாட்டுக்குத் திரும்புவார்கள். ஆனால், எங்கள் ஆட்சியாளர்கள் அதைச் செய்ய மாட்டார்கள். தமிழர்கள் திரும்பி வராவிட்டால் நல்லது என்று இருப்பார்கள். எங்கள் வடக்கு, கிழக்கு மாகாணப் பிரச்னைகளை இந்தியா சரிசெய்ய முன்வந்தால், இலங்கைக்குத் திரும்பும் தமிழக மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவுவதாக இந்தியா உத்தரவாதம் கொடுத்தால், நிச்சயமாக எங்கள் மக்கள் தாய்நாட்டுக்குத் திரும்புவார்கள் என்பது எங்கள் எதிர்பார்ப்பு.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘ ‘நாங்கள் இலங்கைக்கு திரும்பிச் சென்றால் அங்குள்ள தமிழர்களின் ஒத்துழைப்புகூட எங்களுக்குக் கிடைக்காது’ என்பது இங்குள்ள தமிழர்கள் பலரது கருத்தாக இருக்கிறதே?’’

‘‘ஆம்! அந்த மாதிரியான பிரச்னைகள் இருப்பது உண்மைதான். அதனால்தான் அவர்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்துதர முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய அரசிடம் முன்வைக்கிறோம்.’’

“இலங்கையில் நிலவிவந்த தமிழர்-சிங்களவர் எனும் இனப் பிரச்னை, இப்போது இந்து-பௌத்தம் என மதப் பிரச்னையாகத் திசைதிருப்பப்படுகிறதே?”

‘‘அதற்குக் காரணம் இருக்கிறது. அண்மைக்காலங்களில் பௌத்தச் சின்னங்களை வடக்கு, கிழக்கில் பலவந்தமாகத் திணிக்கின்றனர். அதற்கான எதிர்ப்பலைதான் அப்படித் தோற்றமளிக்கிறது. ஆனால், அங்கே முதன்மையான பிரச்னையாக இருப்பது, தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமான இனப் பிரச்னைதான்.”

விக்னேஸ்வரன்
விக்னேஸ்வரன்

‘‘தமிழகத்தில் வசிக்கும் ஈழக்கவிஞர் காசி ஆனந்தன் உள்பட பல ஈழ எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள் இங்குள்ள இந்து அமைப்புகளுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்களே?’’

“இலங்கைத் தமிழர்களின் பிரச்னைகளை இந்துக்களின் பிரச்னைகள் என்றும் எடுத்துக்கொள்ளலாம். அந்த வகையில் இங்கிருக்கும் சில அமைப்புகளுடன் சேர்ந்து அவர்கள் செயல்படுவதாக நான் நினைக்கிறேன்.”

‘‘குடியுரிமை திருத்தச் சட்டத்திலும் சரி, இதற்கு முன்பும் சரி, இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக இங்கிருக்கும் இந்து அமைப்புகளோ, பா.ஜ.க அரசாங்கமோ எதுவும் செய்ததில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறதே?’’

‘‘பா.ஜ.க தலைவர்கள் சிலருடன் எனக்கும் தொடர்பு இருக்கிறது. அவர்கள் என்னிடம், ‘பௌத்தர்களும் இந்துக்கள்தானே, புத்தர்கூட இந்துதானே, பிறகு ஏன் அங்கே பிரச்னை வருகிறது. அவர்களுடன் இணைந்து இணக்கமாக வாழலாமே’ என்று சொல்லியிருக்கின்றனர். அவர்களிடம், ‘பௌத்தர்களுக்கும் எங்களுக்கும் பிரச்னை இல்லை. சிங்களவர்களுக்கும் எங்களுக்கும் தான் பிரச்னை. அங்கு இருப்பது மதப்பாகுபாடு இல்லை; இனப் பாகுபாடு. ஆகவே, எங்களை மத ரீதியாக அவர்களுடன் சேரச் சொல்வதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது’ என்பதை நான் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு