Published:Updated:

``சீமானுடன் இருப்பதைக் காட்டி ராணுவத்தினர் அடித்தார்கள்!’’ - மு.களஞ்சியம்

`எங்கே, நடுவழியில் கீழே தள்ளி விட்டுவிடுவார்களோ எனப் பயந்து, வர மாட்டேன் என மறுத்தேன். எனக்கு மரணபயத்தைக் காட்டிவிட்டார்கள்’

மு.களஞ்சியம்
மு.களஞ்சியம்

''சீமானின் புகைப்படத்தைக் காட்டி, உன் தலைவன் உன்னை எதற்காக இங்கே அனுப்பியிருக்கிறான்? உண்மையைச் சொல் எனக் கேட்டு இலங்கை ராணுவத்தினர் என்னை சரமாரியாகத் தாக்கினார்கள்'' என இயக்குநரும் தமிழர் நலப் பேரியக்கம் எனும் அமைப்பின் தலைவருமான மு.களஞ்சியம் அதிர்ச்சியைக் கிளப்புகிறார்.

மாவீரர் நிகழ்ச்சியில் மு.களஞ்சியம்
மாவீரர் நிகழ்ச்சியில் மு.களஞ்சியம்

விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பாக, ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27-ம் தேதி, இறந்த வீரர்களுக்கு நினைவு தினம் அனுசரிப்பது வழக்கம். அந்த நாளை 'மாவீரர் நாள்' என்கிற பெயரில் உலகம் முழுவதும் உள்ள ஈழத் தமிழர்கள் கடைபிடிப்பார்கள். விடுதலைப் புலிகள் அமைப்பு செயல்பட்ட காலத்தில், அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரன் அந்த நாளில்தான் உரை நிகழ்த்துவார். மாவீரர் தின உரைக்காக உலகம் முழுவதும் உள்ள ஈழத் தமிழர்கள், ஈழ ஆதரவாளர்கள் காத்திருப்பார்கள்.

2009-ம் ஆண்டு இலங்கையில் போர் ஒய்ந்த பிறகும், உலகம் முழுவதுமுள்ள ஈழத்தமிழர்கள் தொடர்ந்து அந்த தினத்தை கடைபிடித்துவருகிறார்கள். ஈழம், தமிழ்நாடு மட்டுமல்ல, லண்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சுவிஸ், கனடா என உலகம் முழுவதும் இந்த நாள் கடைபிடிக்கப்படும். தமிழகத்திலிருந்து அரசியல் தலைவர்கள் வெளிநாடுகளில் நடக்கும் நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்வார்கள். பழ.நெடுமாறன், பெ.மணியரசன், கொளத்தூர் மணி, பண்ருட்டி வேல்முருகன் எனப் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

மருத்துவமனையில் மு.களஞ்சியம்
மருத்துவமனையில் மு.களஞ்சியம்

அந்த வகையில், இந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதி, மாவீரர் தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஈழம் சென்றிருக்கிறார், இயக்குநர் களஞ்சியம். அப்படி கலந்துகொண்டு திரும்பும்போது, இலங்கை ராணுவத்தினரால் கடும் தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளானதாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவருகிறார், இயக்குநர் களஞ்சியம்.

அவரைச் சந்தித்து, அங்கு என்ன நடந்தது எனக் கேட்டோம்.

''கடந்த பத்தாண்டுகளாக உலகம் முழுவதும் நடக்கும் மாவீரர் தின நிகழ்ச்சியில் தமிழகத் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். ஆனால், பக்கத்தில் இருக்கும் ஈழத்துக்கு யாரும் போனதில்லை. அதனால், நாம் ஏன் ஈழத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது என அங்கு சென்றேன். யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடிவெடுத்தேன். ஆனால், பல்கலைக்கழக மாணவர்களே உள்ளே செல்ல தடை விதித்திருந்தது இலங்கை ராணுவம். பிறகு, அங்கு வேண்டாம் என முடிவெடுத்து, கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.

மு.களஞ்சியம்
மு.களஞ்சியம்

தொடர்ந்து, முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு, நந்திக்கடல் ஆகிய இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டேன். ஒவ்வொரு இடத்திலும் நான் கடுமையான சோதனைக்கு ஆளாக்கப்பட்டேன். சுற்றுலாவுக்கு வந்திருக்கிறேன், நான் ஒரு இயக்குநர் என்று சொன்னபிறகுதான் என்னை அனுமதித்தார்கள்.

போரின்போது, 'நோ ஃபயர் ஸோனா'க இருந்த இடத்தை பார்வையிட வேண்டும் என அங்கிருந்த மாணவர்களிடம் சொன்னேன். அவர்கள் அங்கு போக வேண்டாம் என மறுத்தார்கள். ஆனாலும், நான் பார்த்தே ஆகவேண்டும் என அங்கு சென்றேன். உடனடியாக அங்கு வந்த ராணுவ அதிகாரிகள், என்னை விசாரித்து எச்சரித்து அனுப்பினார்கள்.

`காதல்; சூட்கேஸில் மகள் உடல்; நீண்ட பயணம்!’ - ஆட்டோ ஓட்டுநரால் சிக்கிய தந்தை

தமிழ்நாடுக்கு வருவதற்காக, பலாலி விமான நிலையத்திலிருந்து கொழும்பு விமான நிலையத்துக்குச் செல்ல முடிவெடுத்து, உள்நாட்டு விமானத்தில் ஏறினேன். அது, திரிகோண மலையில் நின்றது. அங்கு விமான நிலைய அதிகாரிகள், விமானத்தில் இருந்து என்னை மட்டும் இறக்கி, அங்கிருந்த ஒரு தனி அறைக்கு அழைத்துச்சென்றார்கள். அங்கு, ஒரு மணி நேரம் காத்திருந்தேன். பிறகு, ராணுவ அதிகாரிகள் வந்து என்னை விசாரிக்கத் தொடங்கினார்கள்.

மு.களஞ்சியம்
மு.களஞ்சியம்

விசா விதிமுறைகளை ஏன் மீறினாய் எனக் கேள்வி எழுப்பினார்கள். ''நான் என்ன விதியை மீறினேன் எனக் கேட்டேன்.'' ''சுற்றுலாவுக்கு அனுமதி கேட்டு இங்கு வந்துவிட்டு, இங்கு நடந்த அரசியல் நிகழ்ச்சிகளில் ஏன் கலந்துகொண்டாய்'' என அவர்கள் எடுத்துவைத்திருந்த புகைப்படங்களைக் காட்டி கடுமையாகத் தாக்க ஆரம்பித்தார்கள். இரண்டு தோள்பட்டையிலும் துப்பாக்கியைக் கொண்டு அடித்தார்கள். கீழே தள்ளி மிதித்தார்கள்.

பிறகு, சிறிய விமானத்தில் ஏற்றி, இரவு ஒரு மணிக்கு கொழும்புக்கு கொண்டுசெல்ல முடிவெடுத்தார்கள். எங்கே நடுவழியில் கீழே தள்ளிவிடுவார்களோ எனப் பயந்து, வரமாட்டேன் என மறுத்தேன். அதோடு, அவர்கள் கொடுத்த ஜூஸையும் குடிக்க மறுத்தேன். உடனே, அங்கிருந்த ராணுவ அதிகாரி ஒருவர்,''ஜூஸில் எதையும் கலந்து கொடுத்து உன்னைக் கொல்ல நாங்கள் கோழையல்ல. எங்கள் ஜனாதிபதி உங்கள் நாட்டில்தான் இருக்கிறார். அதனால்தான் உன்னை சும்மா விடுகிறோம். கொல்ல வேண்டும் என முடிவெடுத்துவிட்டால் துப்பாக்கியை வைத்து சுட்டுத்தான் கொல்வோமே ஒழிய ஆண்மையற்ற தன்மையில் நடந்துகொள்ள மாட்டோம்'' என்று சொல்லிச் சிரித்தார்.

சீமானுடன் மு.களஞ்சியம்
சீமானுடன் மு.களஞ்சியம்

''நானும் தோழர் சீமானும் இருந்த புகைப்படத்தைக் காட்டி, உன் தலைவன் உன்னை எதற்காக இங்கு அனுப்பியிருக்கிறான். சொல்'' எனக் கேட்டுத்தான் முதலில் அடிக்கவே ஆரம்பித்தார்கள். அவர் எனக்குத் தலைவர் இல்லை, நானே ஒரு அமைப்பின் தலைவர் என விளக்கிச் சொன்னேன்.

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் எவ்வளவு பேர் இருக்கிறீர்கள் எனக் கேட்டார்கள். அங்கு யாரும் இல்லை எனச் சொன்னேன். பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா எனக் கேட்டார்கள். தெரியாது என்று சொன்னேன். அதற்கும் என்னை கடுமையாகத் தாக்கினார்கள்.

பிறகு, பத்து பேர் அமரக்கூடிய ராணுவ விமானத்தில் இரவு இரண்டு மணிக்கு கொழும்பு விமான நிலையத்தில் இறக்கிவிட்டார்கள். பிறகு, நான் அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு வந்துசேர்ந்தேன். தற்போது, இங்கு சிகிச்சை எடுத்துவருகிறேன்'' என்றவரிடம், அங்குள்ள ஈழத் தமிழர்களுக்கும் உங்களுக்கும் ஏதோ தகராறு என்று சொல்லப்படுகிறதே எனக் கேட்டபோது ''கண்டிப்பாக இல்லை'' என மறுத்தார்.

நீங்கள், அங்கு பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, கோத்தபய ராஜபக்சேவை ஆதரித்துப் பேசியதாகவும் ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்று சொல்லாமல் உள்நாட்டுப் போர் என்று சொன்னதாவும் உங்கள்மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறதே?

மு.களஞ்சியம்
மு.களஞ்சியம்

''ஈழத்துக்கு வெளியில் இருந்து பேசுபவர்களின் திமிர்த்தனமானபேச்சு அது. என்னை யார் ஈழத்துக்கு அனுப்பி வைத்தார்களோ அவர்கள் சொன்னபடிதான் நான் நடந்துகொண்டேன். ஈழத்தில் இருந்துகொண்டு இலங்கை அரசாங்கத்தையோ கோத்தபய ராஜபக்சேவையோ விமர்சித்துப் பேசிவிடாதீர்கள்.கோத்தபய அரசு எதற்கெடுத்தாலும் சுடத்தான் செய்வார்கள். உங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. உங்களை ஈழத்துக்கு வரவழைத்த குற்றத்துக்கு எங்களை வாழ்நாள் முழுவதும் கவலைப்பட வைத்துவிடாதீர்கள் எனக் கேட்டுக்கொண்டார்கள். அதனால்தான் அப்படிப் பேசினேன்.

அதுமட்டுமல்ல, அங்கு இருக்கக்கூடிய மக்கள் அச்சத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள். கோத்தபய வெற்றிபெற்ற பிறகு, ராணுவத்தின் மீதான பயம் காரணமாக, தங்களின் மகள்களைக் கல்லூரியிலிருந்து படிப்பை நிறுத்திய அம்மாக்கள் அங்கு இருக்கிறார்கள். அதனால்தான், மக்கள் வேறு, புலிகள் வேறு என்று பேசினேன். மக்களை தேவையில்லாமல் அச்சுறுத்தாதீர்கள் என இலங்கை அரசுக்கு கோரிக்கை வைத்தேன். வேறு எந்த உள்நோக்கமும் இல்லை'' என்றார்.