Published:Updated:

“ஈழத்தமிழர்களுடன் மலையகத் தமிழர்களை ஒப்பிடாதீர்கள்!”

 ஜீவன் தொண்டமான்
பிரீமியம் ஸ்டோரி
ஜீவன் தொண்டமான்

- ஜீவன் தொண்டமான்!

“ஈழத்தமிழர்களுடன் மலையகத் தமிழர்களை ஒப்பிடாதீர்கள்!”

- ஜீவன் தொண்டமான்!

Published:Updated:
 ஜீவன் தொண்டமான்
பிரீமியம் ஸ்டோரி
ஜீவன் தொண்டமான்

இலங்கையின் அரசியல் வரலாற்றிலேயே `மிகக்குறைந்த வயதில் அமைச்சரானவர்’ என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார், 25 வயது தமிழரான ஜீவன் தொண்டமான். இலங்கை மலையகத்தில் வசிக்கும் இவர், தமிழ்நாட்டின் சிவகங்கையைப் பூர்வீகமாகக்கொண்டவர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், தமிழக அரசியல் தலைவர்களுடன் மிக நெருக்கமாக இருந்தவருமான ஆறுமுகன் தொண்டமானின் புதல்வர். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘இவ்வளவு சிறிய வயதில் எம்.பி-யாகவும் அமைச்சராகவும் ஆகியிருக்கிறீர்கள். எப்படி உணர்கிறீர்கள்?’’

‘‘இலங்கைப் பாராளுமன்றத்துக்குள் தேசியப் பட்டியல்வழியாக (இந்தியாவின் ராஜ்யசபா போல) இளைஞர்கள் பலர் எம்.பி ஆகியிருக்கிறார்கள். அதற்கு மாறாக, தேர்தலில் போட்டியிட்டு ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று இவ்வளவு இளம் வயதில் எம்.பி ஆகியிருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. அதே அளவு பொறுப்புகளும் எனக்கு இருக்கின்றன.’’

‘‘தெற்காசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்சங்கம், ‘இலங்கை மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சங்கம்.’ ஆனால், அந்த மக்களின் நிலை இன்னும் அதளபாதாளத்தில் இருக்கிறதே?’’

‘‘கடந்த 35 ஆண்டுகளாகத்தான் எங்களுக்கான உரிமைகளைப் பெற்றுவருகிறோம். அதுவரை, நாங்கள் கம்பெனிகளின் (தேயிலைத் தோட்ட நிறுவனங்கள்) கட்டுப்பாட்டில்தான் முழுமையாக இருந்தோம். குடியுரிமை கிடைத்த பிறகுதான், எங்களுக்கான உரிமைகளுக்காகப் போராட ஆரம்பித்து, பல விஷயங்களை அடைந்திருக் கிறோம். அதேவேளை, முழுமையான வளர்ச்சியை நாங்கள் அடையவில்லை என்பதும் உண்மை. இனிவரும் காலங்களில் மிக வேகமான வளர்ச்சியை நோக்கிச் செல்வோம்’’

“ஈழத்தமிழர்களுடன் மலையகத் தமிழர்களை ஒப்பிடாதீர்கள்!”

‘‘ `மலையக மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை’ என உங்கள் தந்தையான, மறைந்த ஆறுமுகன் தொண்டமான்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘2003-ம் ஆண்டில், கிட்டத்தட்ட மூன்று லட்சம் மக்களுக்கு பிரஜாவுரிமை வாங்கித்தந்தது என் தந்தைதான். மலையகத்திலுள்ள கலாசார நிலையம், ட்ரெயினிங் சென்டர், ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ் என அனைத்தும் அவர் கொண்டுவந்தவைதான். இன்று இலங்கை அரசு வேலைகளில் மலையக மக்கள் பணியாற்றிவருவது, அவரின் முயற்சியால் நிகழ்ந்ததுதான்.’’

‘‘நாடாளுமன்றத்தில் உங்களின் கன்னி உரையின்போது, ‘நாம் அடிமையாக இருக்கிறோம் என யாரும் பேசாதீர்கள்... நாம் இலங்கையர்கள் என்பதில் பெருமைகொள்வோம்’ எனப் பேசியிருக்கிறீர்கள். வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் இனரீதியாக ஒடுக்குமுறைக்கு ஆளாவது உங்களுக்குத் தெரியாதா?’’

‘‘என் தந்தை மீள்குடியேற்ற அமைச்சராக இருந்தபோது, அவருடன் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்குப் போயிருக்கிறேன். அரசியல் ரீதியாக அந்த மக்களுக்கு நடக்க வேண்டிய அபிவிருத்தி வேலைகள் எதுவுமே நடக்கவில்லை. மக்கள் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறார்கள். அரசியல் தீர்வுக்காகப் போராடுவது ஒருபக்கம் இருந்தாலும், மக்களுக்குத் தேவையான விஷயங்களையும் கொண்டுவர வேண்டும். கலாசாரரீதியாக நாங்கள் தமிழர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதை விட்டுக்கொடுக்கவும் முடியாது. ஆனால், சட்டரீதியாக நாங்கள் இலங்கையர்கள்தானே!’’

‘‘வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு எந்த அதிகாரங்களும் இல்லாமல், இனரீதியான ஒடுக்கு முறைக்கு ஆளானதால்தானே அந்த மக்கள் அரசியல் தீர்வுக்காகப் போராட ஆரம்பித்தார்கள், போராடுகிறார்கள்?’’

‘‘வடக்கு கிழக்கு மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்குப் போராடியதுபோல்தான் மலையக மக்களும் போராடினோம். அவர்கள் ஆயுதமேந்திப் போராடினார்கள்; நாங்கள் அஹிம்சை வழியில் போராடினோம். அதனால்தான் எங்களுக்குக் குடியுரிமை கிடைத்தது. நாங்கள் தனிநாடு கேட்டுப் போராடவில்லை. சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாட்டில், சிறுபான்மையாக இருந்துகொண்டு அவர்களுடன் சண்டைபோட்டு அடிப்படை உரிமைகளைப் பெற முடியாது.’’

‘‘மலையக மக்கள் இந்தியாவிலிருந்து சென்றவர்கள் என்கிற அடிப்படையில், உங்களுடைய போராட்டங்கள் சரி. ஆனால், வடக்கு கிழக்கை பூர்வீகமாகக்கொண்ட தமிழர்கள் தங்களின் அரசியல் உரிமைக்காகப் போராடுவது தவறா?’’

‘‘நீங்கள் கேட்பது நியாயமான கேள்விதான். ஆனால், வடக்கு கிழக்கில் வாழும் மக்களுக்குத் தண்ணீர் வசதி, ரோடு வசதி, வீட்டு வசதி என எந்த அடிப்படை வசதியும் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் நம்பி வாக்களித்தார்கள். ஆனால், அவர்கள் அந்த மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இலங்கையில் மகிந்த ராஜபக்சே மட்டுமல்ல, யார் அதிபராக வந்தாலும் வடக்கு கிழக்கு மக்களை ஒடுக்கத்தான் செய்வார்கள். மகிந்த ராஜபக்சே போரை நடத்தியதால், அவரைக் கெட்டவர் எனச் சொல்கிறார்கள். அவர் ஆட்சியில்தான் அம்மக்களுக்கு அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள் நடந்திருக்கின்றன என்பதே உண்மை.’’

“ஈழத்தமிழர்களுடன் மலையகத் தமிழர்களை ஒப்பிடாதீர்கள்!”

‘‘தமிழர்களை இனப்படுகொலை செய்தவர் ராஜபக்சே. ஆனால், உங்கள் தந்தையும் அவரின் அமைச்சரவையில் இருந்தார். தற்போது நீங்களும் அவரின் அமைச்சரைவில் பங்கேற்றிருக்கிறீர்கள்..?’’

‘‘ஆளும் தரப்புக்கு ஆதரவு கொடுத்ததால் மட்டுமே எங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். ஜனாதிபதி தேர்தலில் கோத்தபய ராஜபக்சே மொத்தம் 16 லட்சம் வாக்குகள் வாங்கினார். எங்களுடைய வாக்கு வெறும் ஒரு லட்சம்தான். இந்த வாக்கை வைத்துக்கொண்டு தனியாக எதுவும் செய்ய முடியாது. அதேவேளையில் அவர்களை ஆதரித்தால் எங்கள் மக்களுக்குத் தேவையான விஷயங்களைச் செய்ய முடியும். எங்கள் மக்களின் பாதுகாப்புதான் எங்களுக்கு முதன்மையானது.

தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், எங்களை ஈழத்தமிழர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. ஈழத்தமிழர்கள், அரசாங்கச் சட்ட திட்டத்துக்குக் கட்டுப்பட்டால்போதும். நாங்களோ, அரசாங்கச் சட்டங்களைவிட கம்பெனிகளின் சட்ட திட்டத்துக்குக் கட்டுப்பட்டு அடிமைச் சாசனத்துக்குக் கீழ்தான் வாழ்ந்துவருகிறோம். எங்களால் அரசாங்கத்தை எதிர்த்து நிற்க முடியாது. ஆளுங்கட்சி ஆதரவோடு மட்டுமே எங்களால் இங்கே வாழ முடியும். இந்தியாவிலுள்ள அரசியல் தலைவர்கள் எங்களுக்கு ஆதரவு தந்தால் மட்டுமே எங்களுடைய அடையாளங்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism