Published:Updated:

"அற்புதம்மாளுக்கு அறிவு அண்ணன் மட்டுமல்ல மற்ற ஆறு பேருமே பிள்ளைகள்தாம்!" - சாந்தனின் சகோதரர் மதிசுதா

மதிசுதா

அவர் விடுதலையாவார் என்பதை, என்னைவிட அம்மாதான் உறுதியாக நம்பிக் கொண்டிருந்தார்.

"அற்புதம்மாளுக்கு அறிவு அண்ணன் மட்டுமல்ல மற்ற ஆறு பேருமே பிள்ளைகள்தாம்!" - சாந்தனின் சகோதரர் மதிசுதா

அவர் விடுதலையாவார் என்பதை, என்னைவிட அம்மாதான் உறுதியாக நம்பிக் கொண்டிருந்தார்.

Published:Updated:
மதிசுதா

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடிய பேரறிவாளனுக்கு நேற்று முன் தினம் உச்ச நீதிமன்றம் விடுதலை அளித்து உத்தரவிட்டது. இதே வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் மற்ற 6 தமிழர்களில் ஒருவர் இலங்கையைச் சேர்ந்த சாந்தன். ராஜீவ் காந்தி கொலைக்கு உதவி புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, 1991 ஜூலை 22-ம் தேதி கைது செய்யப்பட்டார். சாந்தனின் இளைய சகோதரர் மதிசுதா, யாழ்ப்பாணத்தில் தனது தாயாருடன் வசித்து வருகிறார். குறும்படம், ஆவணப்படம் என கலைரீதியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். பேரறிவாளனின் விடுதலையானது சாந்தனின் குடும்பத்திற்கு என்ன மாதிரியான நம்பிக்கையையும் தாக்கத்தையும் வழங்கியிருக்கிறது என்பது குறித்து இயக்குனர் மதிசுதா-விடம் பேசினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பேரறிவாளன் விடுதலை என்ற தீர்ப்பை கேட்டவுடன் நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?

பேரறிவாளன் விடுதலை
பேரறிவாளன் விடுதலை

அவர் விடுதலையாவார் என்பதை, என்னை விட அம்மாதான் உறுதியாக நம்பிக் கொண்டிருந்தார். வழக்கு தொடர்பான முன்னேற்றங்களை பல வருடமாகத் தொடர்ச்சியாக அவதானித்துக் கொண்டிருந்தவன் என்ற வகையில் இம்முறை நடந்த அணுகுமுறை எல்லாமே ஒரு பிரகாசமான வெளிச்சத்துடனேயே தெரிந்து கொண்டிருந்தது.
வழக்கம்போல இல்லாமல் நீதிமன்றமும் நீதிபதிகளும் கூறிய வார்த்தைகள் மிக ஆழமானவையாக இருந்தன.
எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக முதல்வரின் அணுகுமுறையும் நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.செங்கொடி அக்காவைத்தான் என் மனது முதலில் நினைத்துக் கொண்டது. இதற்காக குரல் கொடுத்த அனைவருக்கும் இது பெரும் சந்தோசம்தானே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்கள் அம்மாவும் குடும்பமும் என்ன சொன்னார்கள் ?

சாந்தன், பேரறிவாளன்
சாந்தன், பேரறிவாளன்

கடந்த சனிக்கிழமைகூட அம்மா அறிவு அண்ணாவுக்காகத்தான் பூசை செய்தார். காரணம், ஒருவர் வந்தால் தான் ஒரு பாதை திறக்கும் என்பதில் அவர் மிக உறுதியாக இருந்தார். இரண்டு நாட்களாக மிகவும் சந்தோசமாக இருக்கின்றார். விடுதலைக்குப் பின்னர், அறிவு அண்ணன் போன இடங்கள் பற்றி அவருக்கோ அற்புதம்மாவுக்கோ கூட நினைவிருக்குமோ தெரியாது. ஆனால், அவர் போன வரிசையை மட்டுமல்லாது அங்கு அவர்கள் பேசிய விஷயங்களையும் பட்டியலாக கூறிக் கொண்டிருக்கின்றார்.
அறிவு அண்ணனின் விடுதலை என்பது என் ஏழு சகோதரர்களில் ஒரு சகோதரனின் மீட்சியாகும். நிச்சயம் தமிழக முதல்வர் தன் வார்த்தைகளை காப்பாற்றுவார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

அற்புதம்மாளின் போராட்டம் குறித்து?

 அற்புதம்மாள்
அற்புதம்மாள்

அம்மாக்களின் போராட்டங்கள் பற்றி நாங்கள் இலக்கியங்களிலும் திரையிலும்தான் பார்த்திருப்போம் ஆனால், அதை கண்முன் காட்டிய ஒரு தெய்வமாகவே அற்புதம்மாவைப் பார்க்கின்றேன். அவருடன் சேர்ந்து தோள் கொடுக்க முடியவில்லையே என்ற வருத்தம் அம்மாவுக்கு இப்போதும் உண்டு. ஆனால், நாம் இருக்கும் இடமும் பாதுகாப்பு சூழலும் ஏனைய தாய்களுக்கு இடம் கொடுக்கவில்லை. அற்புதம்மாவிற்கு அறிவு அண்ணன் மட்டுமல்ல மற்ற ஆறு பேரும் கூட பிள்ளைகள்தான். 6 பேர் விடுதலை வரைக்கும் அவர் குரல் ஒலிக்கும் என்று அவரே பேட்டிகளில் கூறியிருப்பதால்தான் அந்த தாய்மையை தெய்வமாக விதந்துரைக்கின்றேன்.

இந்த விடுதலை தந்திருக்கும் நம்பிக்கை உங்கள் படைப்புகளிலும் இனி பிரதிபலிக்குமா?

மதிசுதா
மதிசுதா

நிச்சயமாக, மிக முக்கியமாக இனிவரும் காலத்தில் என் படைப்புக்களில் வெளிப்படையான நகைச்சுவைகளும் தூக்கலாக இருக்கும் என நினைக்கின்றேன்.
அண்ணன் வந்து விட்டால் நான் ஒரு சுதந்திரப் பறவை என எப்போதோ அம்மாவுக்கு கூறி விட்டேன். அவர் விடுதலையாவார் என்ற நம்பிக்கையும் தெளிவாகிவிட்டது.
என்னையறியாமல்கூட என் படைப்புக்களில் இந்த மன நெருக்கங்கள் பிரதிபலித்துக்கொண்டு தான் இருந்திருக்கின்றது.
அவர் விடுதலை என்பது ஒரு படைப்பாளியாக எனக்கு முழு மனமாற்றத்தை அளிக்கும் .

அடுத்த படத்திற்கான பணிகள் தொடங்கிவிட்டனவா?

ஈழத்தின் வெந்து தணிந்தது காடு
ஈழத்தின் வெந்து தணிந்தது காடு

தயாரிப்பாளர்களே முன்வராத என் மண்ணில் அடிக்கடி படைப்புகளை உருவாக்குவது என்பது சாத்தியமில்லை. கடந்த மூன்றரை வருடத்திற்கு முன்னர் இருந்து ஒவ்வொருவரிடமும் தனிப்பட்டரீதியில் சிறிது சிறிதாகச் சேர்த்த பணத்தில் இருந்துதான் ”ஈழத்தின் வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தை உருவாக்கி முடித்தேன். இதுவரை 26 சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ள அத்திரைப்படத்தை வெளியிடுவதற்காக காத்துக் கொண்டிருக்கின்றேன். நாட்டின் சூழல் சாதகமாக இன்மையால் இந்தியாவிலாவது ஓடிடி-க்கு விற்று விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கின்றேன். காரணம், அதற்குள் 200 பேரிடம் கடனாகப் பெற்ற பெரும் பணம் ஒன்று முடங்கிப்போயுள்ளது.

இலங்கை பொருளாதார நிலைமையும் அதைத்தொடர்ந்து எழுந்த மக்கள் போராட்டங்களும் தற்போது எப்படி இருக்கிறது?

இலங்கை
இலங்கை
Eranga Jayawardena

நாட்டின் பிரதமர் மாற்றப்பட்டிருக்கின்றார் என்பதால், பொருளாதாரத்தில் மாற்றம் வந்து விடும் என்றில்லை. நாட்டில் இனவாதத்தையும் மதவாதத்தையும் கட்டமைப்பதற்காக இறைக்கப்பட்ட பணத்தில் தென்னை மரங்களை வைத்திருந்தால் கூட நாட்டின் தன்னிறைவுப் பொருளாதாரத்தை தக்க வைத்திருக்க முடியும். நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டுள்ள நாடு ஒன்றில், தகரத்தில் அடைக்கப்பட்ட மீனைத்தான் பயன்படுத்துகிறோம் என்ற உதாரணத்தை வைத்தே நாட்டின் பொருளாதாரம் எப்படி தலைவர்களால் கட்டமைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன். ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டமைப்பதில் முழுமையாக கவனம் செலுத்தும் வரைக்கும் நாட்டில் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை. போராட்டக்களத்தில் தமிழ் மக்களை விட சிங்கள மக்களே அதிகமாக இருப்பதால் எந்தக் கரத்தைக் கொண்டும் அடக்க முடியாத நிலை உள்ளது. இன ஒற்றுமையில் அக்கறை கொண்டு நாட்டின் பொருளாதாரத்தில் அக்கறை கொண்ட ஊழல் அற்ற ஒரு தலைவர் கிடைக்கும் வரை இது தொடரச் சந்தரப்பம் உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism