Published:Updated:

`14 மா.செ-க்களில் 7 பேர் டார்கெட்?' -கொதிப்பில் ஸ்டாலின்; புதுப்பட்டியல் தயாரித்த அறிவாலயம்

தி.மு.க ஜெயித்துவிடும் என்கிற மிதப்பிலேயே சில மாவட்டச் செயலாளர்கள் களத்துக்குச் செல்லாமல் ஓய்வெடுத்ததும் அவர் காதுக்கு வந்துவிட்டது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தி.மு.க பொதுக்குழுக் கூட்டம், அண்மையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ``தேர்தல் நேரத்தில் மட்டும் நாம் கடுமையாக உழைக்கிறோம். தேர்தல் நேரத்தில் மட்டும் உழைத்தால் போதாது, எப்போதும் உழைப்பதற்கு கட்சி நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும். இன்றும் நான் என்னுடைய சக்தியைத் தாண்டி உழைத்துக்கொண்டிருக்கிறேன். வெற்றி சாதாரணமாகக் கிடைக்காது. கிடைக்கவும் விடமாட்டார்கள்.

தி.மு.க பொதுக்குழு
தி.மு.க பொதுக்குழு

யாரும் நம்மைக் கட்டுப்படுத்த முடியாது என தி.மு.க-வினர் நினைக்கக் கூடாது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது முழுமையான நடவடிக்கை அல்ல. விமர்சனங்களை சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் கேட்டு திருத்திக் கொள்ள வேண்டும். கட்சியின் வளர்ச்சிக்காக சர்வாதிகாரியாக மாறுவேன். இது தனிப்பட்ட எனக்காக அல்ல. தங்களை திருத்திக் கொள்ளாத தி.மு.க நிர்வாகிகள் திருத்தப்படுவார்கள். இது தொடரும்” என கொதித்தெழ, சீனியர்கள் பலருக்கும் ஆட்டம் கண்டுவிட்டது.

பொதுக்குழு கூட்டத்தில் பேசியது குறித்து, விளக்கம் கொடுத்த ஸ்டாலின், `அண்ணாவைப்போல் தான் சர்வாதிகாரியாக இருப்பேன்’ எனத் தெரிவித்தார். பொதுக்குழுவில் அவர் பேசிய வார்த்தைகள் இன்னும் கட்சி நிர்வாகிகளின் மனதைவிட்டு அகலவில்லை. `ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?' என தி.மு.க நிர்வாகிகளிடம் கேட்டோம்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

``நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி, மத்திய அரசு மீதான எதிர்ப்பலை ஆகியவைதான் தி.மு.க-வுக்குச் சாதகமாக வந்துள்ளதாக ஸ்டாலின் கருதுகிறார். இதில், கட்சி நிர்வாகிகளின் பங்கு மிகச் சொற்பம் என்பது அவர் கணக்கு. தி.மு.க ஜெயித்துவிடும் என்கிற மிதப்பிலேயே சில மாவட்டச் செயலாளர்கள் களத்துக்குச் செல்லாமல் ஓய்வெடுத்ததும் அவர் காதுக்கு வந்துவிட்டது. இந்த மிதப்பு, நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க 24 தொகுதிகளில் வெற்றி பெற்றவுடன் கூடியிருக்கிறது.

இதேநிலை எதிர்வரும் உள்ளாட்சி, சட்டமன்றத் தேர்தல்களிலும் தொடர்ந்தால் தேறுவது கடினம் எனத் தலைவர் கருதுகிறார். சில மாவட்டச் செயலாளர்கள், `கூட்டம் நடத்துவதற்கும் கட்சியை நிர்வகிப்பதற்கும் பணமில்லை' எனத் தலைவரிடமே கூறுகின்றனர். இதுவும் அவரை எரிச்சலடைய வைத்துள்ளது.

இவர்களை அப்புறப்படுத்துவதுதான் ஸ்டாலினின் முக்கிய டார்கெட்டாக உள்ளது. அதனையொட்டி, பதினான்கு மாவட்டச் செயலாளர்களின் பட்டியல் முதலில் தயாரானது. அவர்களில் இருந்து 7 பேரின் பெயரை வடிகட்டி, புதுப்பட்டியல் ஒன்றைத் தயாரித்துள்ளதாகவும் சொல்கிறார்கள்" என விவரித்தவர்கள்,

ஸ்டாலின்
ஸ்டாலின்

``திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர். கோவை, வேலூர், நாமக்கல், நாகப்பட்டினம், திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவர் எனப் பட்டியலில் சிலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு தள்ளிப்போனால், விரைவிலேயே இந்த 7 மாவட்டச் செயலாளர்கள் நீக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம்” என்றனர்.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகி, அதன்பின்னர் மாவட்டச் செயலாளர்களை நீக்கினால், தேர்தல் பணியில் தொய்வு ஏற்படும் என ஸ்டாலின் கருதுகிறாராம்.