Published:Updated:

`7-ம் தேதி வந்தாலே மொட்டை போட்ருவேன்!' - ஸ்டாலின் பாராட்டிய நெல்லை காசமுத்து

தன் வண்டி முழுவதையும் தி.மு.க கொடி மற்றும் தலைவர்களின் புகைப்படங்களால் நிரப்பி ஸ்டாலினின் கவனம் ஈர்த்து அவரது பாராட்டைப் பெற்றுள்ளார் காசமுத்து என்ற தொண்டர்.

kasamuthu With Stalin
kasamuthu With Stalin

விரைப்பான மீசை, வழுக்கைத் தலை, தோலில் தி.மு.க துண்டு, சட்டைப்பையில் கலைஞர் புகைப்படம் என ஒரு பக்கா தி.மு.க தொண்டர் இன்று காலை சென்னை வந்து ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பாராட்டு பெற்றுள்ளார். தன் இருசக்கர வாகனத்தில் எங்கு பார்த்தாலும் கருணாநிதி, ஸ்டாலின் புகைப்படம், கட்சிக் கொடி ஆகிய அனைத்தும் வைத்துக்கொண்டு தமிழகத்தின் எல்லா மூலைக்கும் பறக்கும் 71 வயதான காசமுத்துவின் செயலை கண்டு வியந்து அவரை நேரில் வரவழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.

kasamuthu
kasamuthu

ஸ்டாலின் பாராட்டைப் பெற்ற காசமுத்துவை போனில் தொடர்புகொண்டு பேசினோம். காசமுத்துவின் பேச்சிலேயே திருநெல்வேலி மண்ணின் மனம். இருந்தும் அவர் விவரங்களை அவரே சொல்லக் கேட்டோம். ``நான் காசமுத்து, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவன். நெய்வேலி தொ.மு.ச உறுப்பினராக இருந்து ஓய்வு பெற்றவன். தற்போது விவசாயம் செய்து வருகிறேன். என் மொத்தக் குடும்பமும் தி.மு.க உறுப்பினர்கள்தான். தலைமுறை தலைமுறையாக என் குடும்பம் தி.மு.கவுக்குதான் வாக்களித்து வருகிறது.

பெரியார், அண்ணா, இருந்த காலத்திலிருந்தே நாங்கள் தி.மு.கவில் உள்ளோம். நானும் பல கூட்டங்களில் இவர்களை நேரில் பார்த்துள்ளேன். ஆனால் கருணாநிதியிடம் மட்டுமே பேசியுள்ளேன். நான் 2002-ம் ஆண்டு முதல் இரு சக்கர வாகனத்தில் சுற்றி வருகிறேன். தமிழகத்தின் அனைத்து மூலைக்கும் சென்றுள்ளேன். அதிலும் தி.மு.க தலைமை கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தில் முதல் ஆளாக இருப்பேன். கருணாநிதி இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தப்பட்டேன். அப்போதும் என் இரு சக்கர வாகனத்திலேயே சென்னைக்கு வந்தேன்.

karunanidhi memorial
karunanidhi memorial

நான் வந்த தினம் மெரினாவில் நிறைய கூட்டம் இருந்தது. அதனால் மறுநாள் வரை தங்கியிருந்து என் முன்னோர்கள் இறந்தால் என்ன சடங்கு செய்வார்களோ அதை கருணாநிதிக்கும் செய்துவிட்டு மொட்டையடித்துக்கொண்டேன். அன்றிலிருந்து மாத மாதம் 7-ம் தேதியானால் சென்னை வந்துவிடுவேன். முதல் நாள் பிற்பகல் 2:30 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டால் மறுநாள் காலை 6 மணிக்கு கருணாநிதி நினைவிடம் வந்துவிடுவேன். 7-ம் தேதி முழுக்க அங்கு உண்ணாவிரதம் இருந்துவிட்டு மொட்டை போட்டுக்கொள்வேன். இதுவரை 12 முறை மொட்டையடித்துள்ளேன்.

`பள்ளிப் படிப்பு முதல் மெரினா வரை போராட்டம்தான்!’ - கருணாநிதி சிலைத்திறப்பு விழாவில் உருகிய ஸ்டாலின்

மாலை 6 மணிக்கு குளித்துவிட்டுதான் உணவு உண்பேன். என்னைப் பார்க்கும் தி.மு.க நிர்வாகிகள் பலர் எனக்குப் பணம் கொடுப்பார்கள். ஆனால் நான் வாங்க மாட்டேன். வண்டிக்கு பெட்ரோல் போட்டால் மட்டும் ஏற்றுக்கொள்வேன். என் நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் தி.மு.க மீது விஸ்வாசமாக இருந்து வருகிறேன். இனிமேலும் அப்படியே இருப்பேன். சமீபத்தில் நடந்த திருவண்ணாமலை கூட்டத்திலும் நான் கலந்துகொண்டேன். அப்போது என்னைப் பற்றிக் கேள்விப்பட்ட ஸ்டாலின் என்னை நேரில் பார்க்க வேண்டும் எனக் கூறி அழைப்பு விடுத்தார். அதனால் இன்று குடும்பத்துடன் வந்து அவரை சந்தித்தோம்.

karunanidhi memorial
karunanidhi memorial

காலையில் ஸ்டாலின் வெளியில் புறப்பட்டுக் கொண்டிருந்தார் அந்த நேரத்தில் நாங்கள் சென்றதால் சரியாகப் பேசமுடியவில்லை. இருந்தும் என்னை அழைத்துப் பாராட்டி சால்வை போர்த்தினார். எப்படி தி.மு.க மீது இவ்வளவு அபிமானம் வந்தது போன்ற அனைத்தையும் கேட்டுத் தெரிந்துகொண்டு புகைப்படம் எடுத்தார். இதற்கு முன்னால் பல பொதுக்கூட்டங்களிலும் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியுள்ளேன். அவர் எப்போது என்னைப் பார்த்தாலும் நலம் விசாரிப்பார்.

எனக்கு 71 - வயதாகிறது. இதுவரை காபி, டீ, இறைச்சி ஆகியவை உண்ணும் பழக்கம் கிடையாது. என் உடல் இன்னும் ஆரோக்கியமாக உள்ளது. அதனால்தான் நீண்ட தூரம் வண்டியில் பயணிக்க முடிகிறது. அதிலும் 50 கி.மீ வேகத்தைத் தாண்டி நான் சென்றதில்லை. என்னைப் பார்க்கும் அனைத்து நிர்வாகிகளும் வெகுவாக பாராட்டுவார்கள்.

எதிர்க்கட்சி நிர்வாகிகள் பலரும் பாராட்டியுள்ளனர். எனக்குப் பின்னால் கேலி, கிண்டலும் செய்துள்ளனர். ஆனால் பாராட்டியவர்களே அதிகம். இதுவரை ஸ்டாலின் என் வண்டியைப் பார்த்ததில்லை. ஒரே ஒரு முறை அவரை என் வண்டிக்கு அருகில் நிற்கவைத்து புகைப்படம் எடுத்தால் பிறகு வண்டியைத் தொட மாட்டேன். இறுதி வரை தி.மு.கவுக்காக தொடர்ந்து உழைப்பேன்” என உற்சாகமாகக் கூறி முடித்தார்.