Published:Updated:

மயிலாடுதுறை:`முதல்வரால் இந்த ஒரு கேள்வியை மோடியிடம் கேட்க முடியுமா?!’ - ஸ்டாலின் காட்டம்

ஸ்டாலின்
ஸ்டாலின்

``ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தம் நாடகத்தால் முதலமைச்சர் ஆக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி’’ - ஸ்டாலின்.

தூத்துக்குடி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம் பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று காலை 8 மணி அளவில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருக்கடையூரில் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, ``இன்று மோடி சென்னைக்கு வந்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமியால் இந்த ஒரு கேள்வியை மோடியிடமோ, பா.ஜ.க-விடமோ கேட்க முடியுமா?" என்று காட்டமாக உரையாற்றினார்.

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்றத் தொகுதி, திருக்கடையூரில், `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் தொகுதிகளின் குறைகளைக் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்து, மனுக்களை பெற்றுக்கொண்ட ஸ்டாலின், ``பூம்புகார் தொடங்கி கூடல் நகரம் வரையிலான சிறப்புகளை `பூம்புகார்’ திரைப்படம் மூலம் கண்முன்னே நிறுத்தியவர் கருணாநிதி. சிலப்பதிகாரத்தில், தவறு செய்தவன் மன்னன் ஆனாலும், துணிச்சலாகக் கேள்வி கேட்டவர் கண்ணகி. அதுபோல், இன்று நீங்களும் துணிச்சலாக கேள்வி கேட்டீர்கள். பாண்டிய மன்னன் தவறை உணர்ந்தான். இன்றைய ஆட்சியாளர்களான பழனிசாமியாக இருந்தாலும் சரி, அவரது சகாக்களும் சரி , தெரிந்தே தவறு செய்வார்கள்" என்றார்.

மயிலாடுதுறை:`முதல்வரால் இந்த ஒரு கேள்வியை மோடியிடம் கேட்க முடியுமா?!’ - ஸ்டாலின் காட்டம்

தொடர்ந்து மக்களிடம் பெற்ற மனுக்கள் அடங்கிய பெட்டியைப் பூட்டி, சாவியை தனது சட்டைப்பையில் போட்டுக்கொண்ட ஸ்டாலின், மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, ``ஊனமுற்றோர்களை மாற்றுத்திறனாளிகள் என்றழைத்தவர் கருணாநிதி. 1990-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் பணியமார்த்தப்பட்ட மக்கள்நலப் பணியாளர்களை அ.தி.மு.க அரசு வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது. கழக ஆட்சி அமைந்தவுடன் அவர்களுக்கு மீண்டும் நல்வாழ்வு அமையும். புயல், கனமழை காரணமாக ஏற்பட்ட பயிர்ச் சேதங்களுக்கு எடப்பாடி அரசு சரிவர நிவாரணம் வழங்கவில்லை’ என்று குற்றம்சாட்டினார்.

மேலும், ``ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு, பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தம் நாடகத்தால் முதலமைச்சர் ஆக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடிக்கு இது அதிர்ஷ்டப் பரிசு, லாட்டரி சீட்டுபோல. அ.தி.மு.க-வினர் ஊழல் செய்வதற்காகத் தலைமைச் செயலகம் வந்தவர்கள். பினாமி நிறுவனங்கள் மூலம் கொள்ளையடித்து, கமிஷன் அடித்து தமிழகத்தை 5 லட்சம் கோடி கடன் மாநிலமாக்கிவிட்டனர். பழனிசாமி, தன் நான்கு ஆண்டுகள் முதல்வர் பதவியை வீணடித்துவிட்டார். தனது பதவி மூலம் தமிழகத்துக்கு குண்டூசி அளவுகூட நன்மை செய்யவில்லை" என்றார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

``தேர்வுக்கு முந்தைய நாள் மாணவர்கள் படிப்பதுபோல, தேர்தலுக்கு முன்பு நாட்டுக்கு நன்மை செய்வதுபோல் நடித்துக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவரது நடிப்பு தமிழக மக்களுக்குத் தெரியும். எடப்பாடி பழனிசாமி இப்போதுதான் தனக்கு ரோஷம் இருப்பதுபோல், பா.ஜ.க-விடம் அ.தி.மு.க அடிமையாகவில்லை' எனப் பேசிவருகிறார். அவர் அப்படிப் பேசுவது பதவிக்காலம் முடியப்போகிறது என்பதால்தான்’’ என்று எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாகச் சாடினார் மு.க.ஸ்டாலின்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

பிரதமர் மோடி ஷோ காட்டுவதற்காக தமிழகம் வருகை தந்துள்ளார் எனப் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், "தமிழகத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனைக்கு இதுநாள் வரை ஒரு செங்கல்கூட வைக்காதது ஏன்? என்ற இந்த ஒரு கேள்வியை மட்டும் எடப்பாடி பழனிசாமியால் மோடியிடமோ, பா.ஜ.க-விடமோ கேட்க முடியுமா?

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம், ஏழு பேர் விடுதலை தமிழக அரசு தீர்மானம், காவிரி ஆணையத்தை மத்திய ஜல்சக்தி துறையில் இணைத்து காவிரி உரிமையை மூடிவைத்துவிட்டு தமிழகத்தின் பல்வேறு உரிமைகள் குறித்து மத்திய அரசிடம் பழனிசாமியால் கேள்வி கேட்க முடியுமா?’’ என்றார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தைரியம் இல்லாத முதல்வர் பழனிசாமியும், அமைச்சர்களும் கொத்தடிமைகள். அவர்களால் எந்த ஒரு நன்மையையும் செய்ய முடியாது! அப்படிச் செய்தால், அவர்கள்மீது அமலாகத்துறை, சி.பி.ஐ விசாரணை நடைபெறும். என்மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை கலைஞர் மீது ஆணையாகக் காப்பாற்றுவேன். உங்கள் கோரிக்கைகளை, எதிர்பார்ப்புகளை என்னிடம் ஒப்படைத்திருக்கிறீர்கள். இனி இது என்னுடைய பிரச்னை. என்னுடைய கோரிக்கை. ஆட்சி அமைந்த 100 நாள்களில் தீர்வு காணப்படும்” என்றார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

விழுப்புரம்: `படார் படார்னு சத்தம்; கண்ணை மூடிக்கொண்டே இது பழனிசாமி ஆட்சி எனலாம்..!’ - ஸ்டாலின்
அடுத்த கட்டுரைக்கு