Published:Updated:

`கரடிபொம்மையின் விலை கேட்ட நகைச்சுவைபோல இருக்கிறது!’ - அமித் ஷாவுக்கு ஸ்டாலின் பதில்

ஸ்டாலின்
ஸ்டாலின்

தி.மு.க வெற்றி மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து உறுதி செய்யப்பட்டிருப்பதை, நம்மைவிட அதிகமாக ஆள்வோர்கள் அறிந்துவைத்திருக்கிறார்கள். அதனால்தான், நம் மீது அவதூறுகளைப் பரப்ப நினைக்கிறார்கள். திசைதிருப்பும் வேலைகளை மேற்கொள்கிறார்கள். - ஸ்டாலின்

அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தி.மு.க-வைக் கடுமையாக விமர்சித்திருந்தார். கடந்தகால ஊழல் குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்ட அமித் ஷா, வாரிசு அரசியல் குறித்தும் கடுமையாகப் பேசினார். இந்தநிலையில் அமித் ஷாவின் பேச்சுக்கு தி.மு.க பதிலடி கொடுத்துவருகிறது.

வேலூர்: `எந்த ஊரில் வாரிசு அரசியல் இல்லை?’  - அமித் ஷாவுக்கு துரைமுருகன் பதிலடி

வேலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், ``‘வாரிசு அரசியல் இருக்கக் கூடாது. வடமாநிலத்தில் ஒழித்துவிட்டோம். தென்நாட்டிலும் வாரிசு அரசியலையும் ஒழிப்போம்’ என்றாராம் அமித் ஷா. அவர் அப்படிப் பேசும்போது, பக்கத்திலிருந்த ஓ.பி.எஸ்-ஸும், ஜெயக்குமாரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்களாம். ஓ.பி.எஸ்-ஸின் மகன் எம்.பி-யாக இல்லையா... ஜெயக்குமார் மகன் எம்.பி-யாக இருந்தாரே... அது வாரிசு அரசியல் இல்லையா?’’ என்றார்.

இந்தநிலையில் இன்று ஸ்டாலின், ``அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கியதால், அவர்களின் பெற்றோர் படும்பாட்டை உணர்ந்து, அத்தகைய மாணவர்களின் கல்விக் கட்டணத்தை தி.மு.க ஏற்கும் என உங்களில் ஒருவனான நான் அறிவிப்பு வெளியிட்டு, அது ஊடகங்களில் வெளியாகி, மக்களின் மனதில் பதிவாகி, வரவேற்பைப் பெற்ற பிறகே, கட்டணத்தை அரசு ஏற்கும் என ஆட்சியாளர்களிடமிருந்து திடீர் அறிவிப்பு வருகிறது’’ என்றார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தொடர்ந்து, முதல்வரின் செயல்பாடுகள் குறித்து குறிப்பிட்ட ஸ்டாலின், ``மக்களின் ஆதரவின்றி, மக்களுக்குத் தொடர்பே இன்றி, தத்தித் தவழ்ந்து முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்த எடப்பாடி பழனிசாமி, இத்தனை ஆண்டுகளாக மக்கள்மீது எவ்வித அக்கறையுமின்றி செயல்பட்ட நிலையில், தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் அதிகாரிகளைச் சந்திப்பதும், வரவேற்பு என்ற பெயரில் சொந்தக் கட்சிக்காரர்களைத் திரட்டிவருவதும், மக்கள் வரிப்பணத்தில் அரசு விழாக்களை நடத்தி, அதில் அரசியல் செய்து தேர்தல் பிரசாரம் நடத்திக்கொண்டிருப்பதையும் மக்கள் அனைவரும் உணர்ந்தே இருக்கிறார்கள். மாவட்டவாரியாக அவர் மேற்கொள்ளும் பயணங்களுக்காகத் திரட்டப்படும் கூட்டங்களையும், அதில் கொரோனா பேரிடர் காலத்துக்குரிய எவ்விதப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாததையும், பொதுமக்களும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்” என்றார்.

அமித் ஷாவின் குற்றச்சாட்டுகள் குறித்து ஸ்டாலின் குறிப்பிடுகையில், ``தி.மு.க வெற்றி மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்து உறுதி செய்யப்பட்டிருப்பதை, நம்மைவிட அதிகமாக ஆள்வோர்கள் அறிந்துவைத்திருக்கிறார்கள். அதனால்தான், நம் மீது அவதூறுகளைப் பரப்ப நினைக்கிறார்கள். திசைதிருப்பும் வேலைகளை மேற்கொள்கிறார்கள்.

அமித் ஷா
அமித் ஷா

நாளொரு ஊழலும், பொழுதொரு கொள்ளையுமாக அதிலும் தங்கள் குடும்பத்தினரை, உறவினர்களை, பினாமிகளைக் கொண்டு அரசு கஜானாவைச் சுரண்டிக் கொழுத்து, நான்காண்டுகள் ஆட்சிசெய்த இரட்டையர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு டெல்லி சாணக்கியர்கள், மேடையில் பேசும்போது, எதிர்க்கட்சிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டும், வாரிசு அரசியல் விமர்சனமும் வைப்பது, கண்ணாடி முன் நின்று கரடிபொம்மையின் விலை கேட்ட நகைச்சுவைபோல இருக்கிறது” என்றவர், ``காணொலி வாயிலாக மக்களைச் சந்தித்து உரையாடிவரும் உங்களில் ஒருவனான நானும், தைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் பொழுதில் நேரடியாகப் பரப்புரையை மேற்கொள்ளவிருக்கிறேன்’’ என்றார்.

அமித் ஷா: 40 தொகுதிகள் முதல் ரஜினியின் முடிவு வரை... நள்ளிரவைத் தாண்டி நீடித்த ஆலோசனை!
அடுத்த கட்டுரைக்கு