Published:Updated:

தமிழக அமைச்சரவை பட்டியல்: டெல்டாவை தவிர்த்த ஸ்டாலின்! - வேதனையில் நிர்வாகிகள்

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

தஞ்சாவூரில் கும்பகோணம் தொகுதி எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன், திருவையாறு தொகுதி துரை.சந்திரசேகரன் ஆகிய இருவரில் ஒருவருக்கு ஸ்டாலின் நிச்சயம் அமைச்சர் பதவி கொடுப்பார் என தி.மு.கவை சேர்ந்தவர்களே பேசி கொண்டனர்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் நாளை முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் இன்று மாலை அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த ஒருவர் கூட அமைச்சர் பட்டியலில் இடம் பெறவில்லை.

ஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு
ஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற்றது. இதன் வாக்கு என்ணிக்கை மே மாதம் 2-ம் தேதி நடைபெற்றது. இதில் தி.மு.க கூட்டணி கட்சி அமோக வெற்றி பெற்றது. குறிப்பாக தி.மு.க மட்டும் 125 இடங்களில் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. மு.க.ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளதை தி.மு.க தொண்டர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

நாளை காலை ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள நிலையில், யார் யாரெல்லாம் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளார்கள்? அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறை என்ன போன்ற விவரங்கள் அடங்கிய பட்டியல் தற்போது வெளியானது. இதில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஒருவர் கூட அமைச்சர் பட்டியலில் இடம் பெறாதது ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளதாக தி.மு.க நிர்வாகிகள் முதற்கொண்டு பலரும் புலம்பி வருகின்றனர்.

M.K. Stalin
M.K. Stalin
Photo: Vikatan / Vijay.T

இது குறித்து தி.மு.கவை சேர்ந்த சிலரிடம் பேசினோம், ``தஞ்சாவூர் மாவட்டத்தில் 7 தொகுதிகள், திருவாரூர் மாவட்டத்தில் 3 தொகுதிகள், மயிலாடுதுறையில் 3 தொகுதிகள், நாகை மாவட்டத்தில் கூட்டணி கட்சி இரண்டு தொகுதிகள் வெற்றி பெற்றதன் மூலம் டெல்டா மாவட்டத்தில் தி.மு.க-வுக்குஅமோக வெற்றியை பெற்றிருக்கிறது. இதே போல் நாடாளுமன்ற தேர்தலிலும் தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை என மூன்று தொகுதிகளும் தி.மு.க வெற்றி பெற்றதும் குறிப்பிடதக்கது. ஆரம்பம் முதலே டெல்டா தான் தி.மு.கவுக்கு சாதகமாக இருந்தன.

இந்த முறையும் எதிர்பார்த்தது போலவே பெரும்பான்மையான தொகுதிகளையும் இந்த மாவட்டங்களில் கைபற்றியது. இந்நிலையில் இந்த மாவட்டங்களில் தி.மு.கவில் வெற்றி பெற்றவர்களில் யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என பெரிய பட்டிமன்றத்தையே நடத்தி வந்தனர் அக்கட்சியினர். குறிப்பாக தஞ்சாவூரில் கும்பகோணம் தொகுதி எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன், திருவையாறு தொகுதி துரை.சந்திரசேகரன் ஆகிய இருவரில் ஒருவருக்கு நிச்சயம் அமைச்சர் பதவி கிடைக்கும் என பேசப்பட்டது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஆனால் தற்போது வெளியான அமைச்சர் பட்டியலில் இந்த மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் கூட இடம் பெற வில்லை. இது பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது என பலரும் அதிருப்தியோடு கூறி வருகின்றனர். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் உணவுத்துறை, வேளாண்மைதுறை, ஜவுளித்துறை ஆகியவற்றுக்கு இந்த மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

ஸ்டாலின் முதல் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரை... யாருக்கு என்ன துறை?! -வெளியானது அமைச்சரவை பட்டியல்

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த ஊர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை. அவர் எப்போதும் ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டத்திற்கு உரிய முக்கியதுவத்தை கொடுத்தவர் என்பது எல்லோரும் அறிந்ததே. அவரது மகனான ஸ்டாலின் முதல்முறையாக முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில் இந்த மாவட்டங்களை சேர்ந்த ஒருவரும் அமைச்சர் பட்டியலில் இடம் பெறவில்லை. ஸ்டாலின் ஏன் இந்த மாவட்டங்களை புறக்கணிக்கிறார் எனவும் தெரியவில்லை. அமைச்சரவை பட்டியலை மறுபரிசீலனை செய்து அதில் மாற்றம் கொண்டு வந்து இந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களையும் அமைச்சர்களாக அறிவிக்க வேண்டும். எங்களை ஏமாற்ற மாட்டார், நிச்சயம் செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது” தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு