Published:Updated:

”இது நம்ம கெளரவப் பிரச்னை...” ஆலோசனைக் கூட்டத்தில் கர்ஜித்த ஸ்டாலின்!

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்வைத்து, தி.மு.க தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்பது மாவட்டச் செயலாளர்களிடமும் ‘100 சதவிகித வெற்றி வேண்டும்’ என்றிருக்கிறாராம் ஸ்டாலின்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

செப்டம்பர் 15-ம் தேதிக்குள், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்திட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த ஒன்பது மாவட்டங்களின் கழகச் செயலாளர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் ஸ்டாலின். இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து மாவட்டச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். “கூட்டத்தில் மைக் பிடித்தவுடனேயே, ‘இந்தத் தேர்தல் நமக்கு கவுரவப் பிரச்னை. நூறு சதவிகிதம் ஜெயிச்சாகணும்’ என்றுதான் பேச்சையே தொடங்கினார் ஸ்டாலின்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

’தேர்தலை எதிர்கொள்ளும் இந்த ஒன்பது மாவட்டங்களில் ஏழு மாவட்டங்கள் வட தமிழ்நாட்டில் வருகின்றன. வன்னியர் உள் இட ஒதுக்கீட்டிற்கு அரசாணை வெளியிட்டிருப்பதால், இந்த மாவட்டங்களில் நமக்கு பலம் கூடும். தவிர, இந்த மாவட்டங்களிலுள்ள பெரும்பாலான சட்டமன்றத் தொகுதிகளை நாம்தான் கைப்பற்றியிருக்கிறோம். ரவுடியிஸம், கட்டப்பஞ்சாயத்து, மணல் கடத்தல் புகார்களால்தான் கடந்த ஆட்சியில் நமக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது. இந்த முறை அதுபோன்ற எந்த புகாரும் நம்மீது சுமத்தப்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.

3-ம் ஆண்டு நினைவுநாள்: கருணாநிதியின் கனவுகளை நோக்கி ஸ்டாலின் ஆட்சி..!

உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கும் நிலையில் நீங்களும் கவனமாக இருங்கள். உங்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் தி.மு.க-வினர் யாராவது சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால், உடனடியாக நடவடிக்கை எடுங்கள். இப்போது நமக்கு கிடைத்திருக்கும் நல்ல பெயரை நாம் இழந்துவிடக்கூடாது. என்ன செய்தாவது, இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவிகித வெற்றியை நாம் அடைந்தாக வேண்டும்’ என்றார் ஸ்டாலின். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தல் கண்காணிப்புக் குழு அமைக்கவும் பரிசீலிக்கப்பட்டது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம்” என்றனர். சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை தி.மு.க அளித்திருந்தது. அதில் பலவற்றை நிதிநிலை காரணமாக நிறைவேற்ற முடியாத நெருக்கடியில் தத்தளிக்கிறது தி.மு.க அரசு. வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தேர்தலைச் சந்தித்தால், அதனால் ஏற்படக்கூடிய இடர்பாடுகள் குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதித்திருக்கிறார்கள்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

100 சதவிகித வெற்றியை ஸ்டாலின் எதிர்பார்ப்பதால், அதற்கான அனைத்து வழிமுறைகளையும் கையில் எடுக்க தீவிரமாகிறதாம் தி.மு.க தரப்பு. பஞ்சாய்த்து தேர்தல் கட்சி, சின்னம் அடையாளத்துடன் நடத்தப்படுவதில்லை. வேட்பாளர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் சுயேட்சையாகத்தான் போட்டியிட வேண்டும். இதன்படி, எந்தெந்த பஞ்சாயத்துகளில் தி.மு.க-வுக்கு பெரும்பான்மை கிடைக்காவில்லையோ, அங்கேயெல்லாம் எதிர்கட்சியில் ஜெயித்த பஞ்சாயத்து கவுன்சிலர்களை தங்கள் வசமாக்கி பஞ்சாயத்தைக் கைப்பிடிக்க முடிவெடுத்திருக்கிறதாம் தி.மு.க தரப்பு. இந்த உள்ளாட்சித் தேர்தலில் சர்வ அதிகாரத்தைக் களமிறக்கவும் தீவிரமாகி இருக்கிறது அறிவாலயம். சட்டமன்றத் தேர்தல் முடிந்த கையோடு நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் என்பதால், ‘'இதில் அதிக பஞ்சாயத்துகளைக் கைப்பிடித்தால் மட்டுமே மக்களின் நன்மதிப்பு ஆட்சிக்கு தொடர்வதாக கருத முடியும். சோர்வடையாமல் உழையுங்கள்’' என்று மாவட்டச் செயலாளர்களிடம் சொல்லி அனுப்பியிருக்கிறார் ஸ்டாலின்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு