Published:Updated:

துபாய் செல்லும் ஸ்டாலின்... வெண்மைத்துறை அமைச்சருக்கு ஃபைலில் கண்டம்! - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
News
கழுகார் அப்டேட்ஸ்

``சில எக்ஸ்க்ளூசிவ் தகவல்களை அனுப்பியிருக்கிறேன்... உடனடியாக வாசகர்களுக்குத் தெரிவிக்கவும்” என்று வாட்ஸ் அப் அனுப்பியிருந்தார் கழுகார். இதோ அவர் அனுப்பிய தகவல்கள்..

வணிகவரி சங்கங்களின் போராட்டம்...
டார்ச்சர் கொடுக்கும் உயரதிகாரிகள்!

தென்மாவட்டங்களில் தி.மு.க-வினர் நடத்தும் வணிக நிறுவனங்களில் வரி ஏய்ப்பைக் கண்டுபிடித்த வணிகவரித் துறை அதிகாரிகள் உட்பட 101 அதிகாரிகள் ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. இதைக் கண்டித்து வணிகவரித்துறை சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சூழலில், இடமாற்றம் செய்யப்பட்ட மதி, துரைய்யா, ராஜதுரை ஆகிய நெல்லையில் பணியாற்றும் மூன்று அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இடமாற்றத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இந்த வழக்கில் ஆஜராக வணிகவரித் துறையில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரும், அரசுத் தரப்பு வழக்கறிஞரும் சென்னையிலிருந்து மதுரைக்குச் சென்றிருக்கிறார்கள். இதற்கிடையில், போராட்டத்தை முன்னெடுத்து நடத்தும் நிர்வாகி ஒருவருக்கு துறை அதிகாரிகள் மூலம் டார்ச்சரும் ஆரம்பித்துவிட்டதாம்.

ஆடியோவில் ரிலீஸான லஞ்சப் பட்டியல்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தாம்பரம் பகுதியில் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றும் போக்குவரத்து அதிகாரிகள் தினமும் எவ்வளவு கல்லா கட்டுகிறார்கள் என்ற பட்டியலுடன் ஆடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அந்த ஆடியோவில் ஆயுதம் பெயர்கொண்ட இன்ஸ்பெக்டர், எப்படியெல்லாம் வசூல் வேட்டை நடத்துகிறார் என்று விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

லஞ்சம்
லஞ்சம்

ஆடியோவைக் கேட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகள், ஒரு இன்ஸ்பெக்டரால் இவ்வளவு சம்பாதிக்க முடியுமா என வாயடைத்து போயிருக்கிறார்களாம். அந்த ஆடியோவில் யார் யாருக்கு எவ்வளவு மாமூலை இன்ஸ்பெக்டர் கொடுக்கிறார் என்ற விவரமும் இருக்கிறது. விரைவில் நடவடிக்கை பாயலாம் என்கிறது காவல்துறை தரப்பு.

துபாய் செல்லும் ஸ்டாலின்... குவியுமா வெளிநாட்டு முதலீடுகள்?

ஏற்கெனவே முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தை, ‘ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்தவுடன் பார்த்துக்கொள்ளலாம்’ என்று முடிவு செய்யப்பட்ட நிலையில், இப்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே வெளிநாடு செல்ல திட்டமிட்டிருக்கிறார் ஸ்டாலின். துபாய்க்கு ஸ்டாலின் அரசு முறை பயணம் மேற்கொள்ளும்போது, சில தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்படுமாம்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

இதையடுத்து, “கடந்த ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி துபாய் சென்று இதேபோன்ற ஒப்பந்தங்கள் போட்டதற்கு பெரிதாக ஒன்றும் ரெஸ்பான்ஸ் இல்லை. இந்தமுறை தமிழகத்துக்கு பல நூறு கோடி ரூபாய் தொழில் திட்டங்களைக் கொண்டுவந்தே தீருவோம்” என்கிறார்கள் அதிகாரிகள் தரப்பில்!

சூரியன் அதிகாரியின் ஃபைல்கள்...
வெண்மைத்துறை அமைச்சருக்கும் சிக்கல்!

வெண்மைத்துறை அமைச்சரின் தொகுதியிலிருக்கும் மாநகராட்சியில் சூரியனின் பெயரைக்கொண்ட மாநகராட்சி அதிகாரி ஒருவர் சில வாரங்களுக்கு முன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். அவர் அப்ரூவல் கொடுத்த ஃபைல்கள் தொடர்பான தகவல்கள் அனைத்தும் தலைமை அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறதாம். அந்த ஃபைல்களை ஆய்வு செய்தால், மாவட்ட அமைச்சருக்கும் சிக்கல் வரும் என்கிறார்கள்.

ஏற்கெனவே கடந்த அ.தி.மு.க ஆட்சியில் இதே சூரியன் அதிகாரி, திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு நகராட்சியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டபோது, அப்போதைய அமைச்சர் ஒருவர் மூலம் மீண்டும் பழைய இடத்துக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சூரியன் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதன் பின்னணியில், ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரும் இருக்கிறாராம்.

சுற்றுலா அமைச்சரின் ஊட்டி விசிட்... வரிசைகட்டும் சந்தேகங்கள்!

சுற்றுலாத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட மதிவேந்தன், சமீபத்தில் ஊட்டிக்கு விசிட் அடித்தார். குடும்பத்துடன் வந்திருந்த அமைச்சர் குறும்பட விழா, அரசு நிகழ்வுகளில் பங்கேற்க வந்திருப்பதாகச் சொல்லப்பட்டாலும், பர்சனல் விஷயத்துக்காகதான் வந்ததாக கிசுகிசுக்கிறார்கள். அதற்கு ஆதாரமாக, ஊட்டி ஃபெர்ன் ஹில் பகுதியில் அவரின் நெருங்கிய நண்பர் ஒருவரின் காட்டேஜ் திறப்பு விழாவில் பங்கேற்றதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

துபாய் செல்லும் ஸ்டாலின்... வெண்மைத்துறை அமைச்சருக்கு ஃபைலில் கண்டம்! - கழுகார் அப்டேட்ஸ்

அது மட்டுமல்லாமல், ஊட்டியிலிருக்கும் தனியார் பொழுதுப்போக்கு பூங்கா ஒன்றை விளம்பரப்படுத்தும் வகையில், அங்கு விசிட் அடித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஊட்டி பயணத்தை முடித்துவிட்டு சென்னை கிளம்புவதாக மாலையில் கோவை சென்ற சுற்றுலாத்துறை அமைச்சர், அன்று இரவு 2 மணியளவில் மீண்டும் ஊட்டிக்குத் திரும்பி மேலும் ஒருநாள் கூடுதலாக தங்கியிருந்ததும் பலரது புருவங்களை உயர்த்தியிருக்கிறது.

முதுகுளத்தூர் மாணவர் மர்ம மரணம்...
ஸ்டாலினுக்குக் குடைச்சல் கொடுக்கும் பா.ஜ.க!

தமிழகத்தில் கடந்த காலங்களில் நடந்த காவல்துறை அத்துமீறல், லாக்கப் மரண சம்பவங்களில் அமைதியாக இருந்த பா.ஜ.க., முதுகுளத்தூர் மாணவர் மணிகண்டனின் மர்ம மரணத்தை கையிலெடுத்து போராட்டங்களை நடத்திவருகிறது. மணிகண்டனின் உடலை மறு உடற்கூராய்வு செய்யும்போது, பா.ஜ.க-வைச் சேர்ந்த மதுரை டாக்டர் சரவணன் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் சார்பில் பார்வையாளராகச் சென்றிருக்கிறார். ‘மறு உடற்கூராய்வு முடிவுகள் சந்தேகமில்லாமல் வரவேண்டுமென்றால், உடல் உறுப்பு மாதிரிகளை தேசிய அளவிலான லேபுக்கு சோதனைக்கு அனுப்ப வேண்டும்’ என்று டாக்டர் சரவணன் வலியுறுத்தியிருக்கிறார்.

டாக்டர் சரவணன்
டாக்டர் சரவணன்

அத்துடன், நயினார் நாகேந்திரன் தலைமையில் உண்மை அறியும் குழுவையும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருக்கிறார். அவர்களும் விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள். தவிர, ‘சாத்தான்குளம் வழக்கின்போது தொடர்ந்து குரல் கொடுத்த மு.க.ஸ்டாலின், இந்த சம்பவத்தில் மௌனமாக இருக்கிறார்’ என்று பா.ஜ.க-வினர் சோஷியல் மீடியாவிலும் பரப்பிவருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செந்தில் பாலாஜிக்கு எதிராக செந்தில்நாதன்!
அனல் பறக்கும் கரூர் அரசியல்

கரூர் மாவட்ட பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் செந்தில்நாதன், அ.தி.மு.க-விலிருந்து கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்புதான் பா.ஜ.க-வுக்குத் தாவினார். செந்தில்பாலாஜிக்கு எதிராக தீவிர அரசியல் செய்வார் என்றே இவருக்கு மாவட்டத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறதாம். பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘கடந்த தேர்தலில் தான் தோற்றதற்குக் காரணம் செந்தில் பாலாஜிதான்’ என்று கொதிப்பில் இருக்கிறார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இதுவும், செந்தில்நாதனுக்கு கரூர் மாவட்டத் தலைவர் பதவி கிடைக்க ஒரு காரணம். இரண்டு முறை அ.தி.மு.க சார்பில் சீட் கிடைத்து தேர்தலில் போட்டியிட்டபோதும், தன்னைத் தோற்கடித்து, தனது அரசியல் வாழ்வுக்கு குழித்தோண்டியது செந்தில் பாலாஜிதான் என்ற கோபத்தில் இருக்கும் செந்தில்நாதன், பா.ஜ.க-வில் பதவிக்கு வந்ததும் அதை வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கிறார். சமீபத்தில், கரூரில் பள்ளி மாணவிகளுக்கு எதிராக பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகமாகவே... ஒரு நிகழ்ச்சியில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்ததுடன், செந்தில்பாலாஜியையும் தாக்கிப் பேசியிருக்கிறார் செந்தில்நாதன். இதையடுத்து, கரூர் மாவட்ட அரசியலில் அனல் பறக்கத் தொடங்கியிருக்கிறது.

பின்னுக்குத் தள்ளப்பட்ட ஓ.பி.எஸ் பெயர்...
நிலைப்பாட்டைத் தெரிவித்தாரா ஆர்.காமராஜ்?

திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில், மக்கள் பிரச்னைகளைக் கண்டுகொள்ளாத தி.மு.க அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான நோட்டீஸ் வெளியானது. அந்தக் கட்சியின் சார்பில் நடத்தப்படும் எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும், அதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் முதலாவதாகவும், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியின் பெயர் இரண்டாவதாகவும் இடம்பெறுவது வழக்கம்.

காமராஜ்
காமராஜ்

ஆனால், திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க நோட்டீஸில், எடப்பாடியின் பெயர்தான் முதலில் இருக்கிறது. ‘எடப்பாடியிடம் இருந்து காமராஜ் ஒதுங்கியே இருக்கிறார். சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்துடன் நெருக்கமான நட்பில் இருக்கிறார்’ என்றெல்லாம் பேச்சு அடிபட்டுவந்த நிலையில், எடப்பாடி மீதான தனது விசுவாசத்தை இந்த நோட்டீஸ் மூலம் காமராஜ் வெளிப்படுத்திவிட்டதாக திருவாரூர் அ.தி.மு.க-வினர் பேசுகிறார்கள்.

`கல்யாணத்துக்கு போனது குத்தமாப்பா!’
கடுப்பான அ.தி.மு.க மாஜி எம்.எல்.ஏ...

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதியின் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வான வி.பி.சிவசுப்பிரமணி, கட்சி நிர்வாகிகள் சிலருடன் தொகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சமீபத்தில் சென்றிருக்கிறார். அந்த நேரம் பார்த்து மாவட்ட அமைச்சரான முத்துசாமியும் அங்கு வந்திருக்கிறார். திருமண மேடையிலேயே அமைச்சர் முத்துசாமியும் சிவசுப்பிரமணியும் பரஸ்பரம் நெருக்கமாக நின்று பேசியிருக்கின்றனர்.

அமைச்சர் முத்துசாமி - சிவசுப்பிரமணி
அமைச்சர் முத்துசாமி - சிவசுப்பிரமணி

இதனை போட்டோவாக கிளிக்கித் தள்ளிய உடன்பிறப்புகள், ‘விரைவில் சிவசுப்பிரமணி தி.மு.க-வில் ஐக்கியமாகிறார்’ என சமூக வலைதளங்களில் கொளுத்திப்போட்டனர். இதில் கடுப்பான சிவசுப்பிரமணி, ‘ஏற்கெனவே தேர்தல்ல சீட் கொடுக்கலைன்னு நான் கோவத்துல இருக்கேன்னு சொல்லிட்டு இருக்காங்க. போதாதுன்னு இப்போ இப்படி வேற கிளப்பிவிட்டா என்ன அர்த்தம்? ஒரு கல்யாணத்துக்கு போனது குத்தமாப்பா!’ எனக் கொதிக்கிறார்.

``ஆரம்பமே அதிரடியா இருக்கே!’’

சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட பா.ம.க-வின் காரைக்கால் மாவட்டச் செயலாளர் தேவமணியின் மகன் தேவமணி பிரபாகரனுக்கு, ‘புதுவை மாநில அரசியல் உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்’ என்ற பதவியை வழங்கி அரசியலுக்குக் கொண்டுவந்திருக்கிறது பா.ம.க தலைமை. காரைக்கால் குளோரேட்ஸ் நிறுவன தொழிற்சங்க கௌரவத் தலைவராக இருந்தார் தேவமணி. அந்தப் பதவியை, என்.ஆர் காங்கிரஸைச் சேர்ந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா துணையுடன் என்.ஆர் காங்கிரஸ் கைப்பற்ற முயன்றிருக்கிறது. இந்தத் தகவல் தேவமணி பிரபாகரனுக்கு தெரிந்ததும், உடனடியாக அமைச்சர் சந்திர பிரியங்காவுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்த கையோடு, தந்தை வகித்த கௌரவத் தலைவர் பதவியையும் பெற்றிருக்கிறார். இதையடுத்து, ‘ஆரம்பமே அதிரடியா இருக்கே...’ என்கிறார்கள் பா.ம.க தொண்டர்கள்.