Published:Updated:

சேலம்: `விவசாயிகள் டெல்லியை நோக்கிப் போர் தொடுத்திருக்கிறார்கள்!’ - ஸ்டாலின்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தி.மு.க தலைவர் ஸ்டாலின்
தி.மு.க தலைவர் ஸ்டாலின் ( எம். விஜயகுமார். )

``விவசாயிகள் டெல்லியை நோக்கிப் போர் தொடுத்திருக்கிறார்கள். பிரதமர் தன்னை ஒரு ஏழைத் தாயின் மகன் என்று சொல்கிறார். அந்த ஏழைத் தாயின் மகனுக்கு வீதியில் இறங்கிப் போராடும் விவசாயிகளைப் பற்றித் தெரியவில்லை.''

டெல்லியில் வேளாண் மசோதாவுக்கு எதிராகப் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சேலம் மாவட்டம் எருமாபாளையத்திலுள்ள எஸ்.ஆர்.பி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்தப் போராட்டத்தில் கே.என்.நேரு, கிழக்கு மாவட்டச் செயலாளர் சிவலிங்கம், மேற்கு மாவட்டச் செயலாளர் செல்வகணபதி, எம்.பி பார்த்திபன், தேர்தல் பணிக்குழுச் செயலாளர் ராஜா உட்பட ஏராளமான கட்சிக்காரர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டார்கள்.

கூட்டம்
கூட்டம்

போராட்டத்துக்கு முன்னதாக ஸ்டாலின் பூலாவரியிலுள்ள வீரபாண்டியாரின் நினைவு இல்லத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்திவந்தார். இந்தப் போராட்டத்துக்கு வந்த கட்சிக்காரர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவர்களைக் கைதுசெய்தார்கள். சேலம் மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளின் தொலைக்காட்சி சிக்னல் துண்டிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

போராட்டத்தில் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், ``இந்தப் போராட்டம் என்பது அரசியல் நோக்கத்துக்கு அல்ல. இந்த நாட்டின் முதுகெலும்பாக விளங்கக்கூடிய விவசாயப் பெருங்குடி மக்களுக்கானது என்பதை ஆளுங்கட்சி புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. நாம் எழுப்புகின்ற குரல் டெல்லியில் போராடும் விவசாயிகளின் காதுகளில் ஒலித்தாக வேண்டும்.

மண்ணையும் மக்களையும் காக்கின்ற பணியில் தி.மு.க என்றைக்கும் துணை நிற்கும். இந்தியாவிலுள்ள அனைத்துச் சாலைகளும் டெல்லியை நோக்கியே இருக்கின்றன. லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் குவிந்திருக்கிறார்கள். சுதந்திர இந்தியாவில் இப்படி ஒரு போராட்டம் நடத்தியதில்லை. அந்த விவசாயிகளுக்கு சல்யூட் தெரிவித்துக்கொள்கிறேன்.

பஞ்சாப், ஹரியனா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா எனப் பல்வேறு மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டிருக்கிறார்கள். இதில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் அதிகம். அவர்கள்தான் அசைக்க முடியாத பி.ஜே.பி-யை அசைத்துக்கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளை மதிக்காமல், விவசாயத்தைப் பற்றிக் கவலைப்படாமல், ஜனநாயகத்தை மதிக்காமல், நாடாளுமன்றத்தில் கருத்து கேட்காமல் அரசு மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது.

விவசாயிகள் டெல்லியை நோக்கிப் போர் தொடுத்திருக்கிறார்கள். பிரதமர் தன்னை ஓர் ஏழைத் தாயின் மகன் என்று சொல்கிறார். அந்த ஏழைத் தாயின் மகனுக்கு வீதியில் இறங்கிப் போராடும் விவசாயிகளைப் பற்றித் தெரியவில்லை. மோடி ஆட்சிக்கு வந்தால் வருமானத்தைப் பெருக்குவதாகக் கூறினார். வருமானம் பெருகியிருக்கிறதா... அதேபோல விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுப்பதாகக் கூறினார். ஆனால் ஒவ்வொரு வருடமும் 10,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

போராட்டம்
போராட்டம்

இங்கு பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி. இந்தச் சட்டத்தால் யார் பாதித்திருக்கிறார் என்று விஞ்ஞானியைப்போல கேள்வி கேட்கிறார். இந்தச் சட்டம் அமலுக்கு வந்த பிறகுதான் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். இந்தச் சட்டத்தால் விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை இருக்கிறதா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி ஒரு விவசாயி அல்ல, ஒரு வேடதாரி.

இந்தச் சட்டங்களை எதிர்த்து கேரளா, பஞ்சாப் போன்ற மாநில முதல்வர்கள் நீதிமன்றம் சென்றார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி மிச்சர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். இவரால் விவசாயிகளுக்கும் மக்களுக்கும் பயனில்லை. இவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இந்தச் சட்டங்களை திரும்பப் பெறும் வரை தி.மு.க தொடர்ந்து போராடும்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு