Published:Updated:

``உள்ளாட்சித் தேர்தலைத் தடுக்க வழி தேடுகிறார் ஸ்டாலின்!” - அமைச்சர் கடம்பூர் ராஜு

``தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் தடுத்து நிறுத்துவதற்கு ஸ்டாலின் திட்டமிடுகிறார்” எனச் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ
அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தகத் திருவிழாவை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது, தமிழகத்தில் நடைபெறுவது பா.ஜ.க ஆட்சிதான், அ.தி.மு.க ஆட்சி கிடையாது எனத் தி.மு.க தலைவர் ஸ்டாலின் விமர்சித்தது குறித்து கேட்கப்பட்டது. அவர் அதற்குப் பதிலளித்துப் பேசுகையில், “அ.தி.மு.க ஆட்சியில் பா.ஜ.க-வுக்கு என்ன பங்களிப்பு உள்ளதென்று தெரியவில்லை. ஸ்டாலின் தன்னிலை அறிந்துதான் பேசுகிறாரா அல்லது தன்னிலை அறியாமல் பேசுகிறாரா என்பது தெரியவில்லை.

நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜு
நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜு

அவரது பேச்சு நகைச்சுவையாக இருக்கிறது. கடந்த தேர்தலில் 10 கட்சிகளுடன் கூட்டணி வைத்துதான் தி.மு.க 90 இடங்களுக்கு மேல் பிடித்துள்ளது. ஆனால், அ.தி.மு.க எந்தக் கட்சியின் ஒத்துழைப்பும் கூட்டணியும் இல்லாமல் தனித்துப் போட்டியிட்டு பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சர் பதவி ஒன்றுதான் லட்சியம் என்ற கனவோடு ஸ்டாலின் சுற்றிக்கொண்டிருந்தார். அந்தக் கனவு நனவாகாத வெறியில் தற்போது என்ன பேசுகிறோம் எனத் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்.

இந்த ஆட்சியில் யாருடைய பங்களிப்பும் இல்லை என்பது ஸ்டாலினுக்குத் தெரியவில்லை என்றால் அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கவே தகுதி இல்லை என்றுதான் அர்த்தம். நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் தீர்ப்பு வேறாக அமைந்தாலும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க அரசு தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மக்கள் வாக்களித்துள்ளார்கள். அதை ஸ்டாலினால் ஏற்றுக்கொள்ள முடியாததால் பிதற்றி வருகிறார்.

மாணவர்களுடன் ஆட்சியர், அமைச்சர்
மாணவர்களுடன் ஆட்சியர், அமைச்சர்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் மீண்டும் நடைபெறக் கூடாது என்றும் உள்ளாட்சித் தேர்தல் வருவதற்கு முன்பு அதைத் தடுத்து நிறுத்துவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா எனவும் ஸ்டாலின் திட்டமிடுகிறார். அவர் என்ன திட்டமிட்டிருந்தாலும் அதை எல்லாம் தவிடு பொடியாக்கி தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தும்” என்றார்.