Published:Updated:

மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதை: 14 வயதில் பிரசாரம் முதல் 2021 தேர்தல் வரை!-எப்படிச் செயல்படுகிறார்?

இன்று 69-வது பிறந்தநாள் காணும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வென்று, முதல்வர் நாற்காலியைப் பிடிக்க வேண்டுமானால் பல சவால்களை வென்றாக வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கருணாநிதிக்குப் பிறகு...

தி.மு.க தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, 2019-ல் வந்த தன் பிறந்தநாளை அவர் கொண்டாடவில்லை. காரணம், அண்ணாவுக்குப் பிறகு தி.மு.க-வின் தலைவராக நீண்டகாலம் செயல்பட்ட கருணாநிதியின் மறைவால் தி.மு.க-வினர் பெரும் சோகத்திலும் வேதனையிலும் இருந்தனர். தந்தை என்கிற வகையில் கருணாநிதியின் மறைவு ஸ்டாலினுக்குக் கூடுதலான இழப்பு.

``நம்மை ஆளாக்கி, நெறிப்படுத்தி, பொதுவாழ்வுப் பணியில் நல்வழிப்படுத்திய தலைவர் கலைஞர் நம்முடன் இல்லாத நிலையில், என் பிறந்தநாளைக் கொண்டாடுவதில்லை என்பதே என் எண்ணம். பிறந்தநாள் விழா என்ற பெயரில் ஆடம்பர விழாக்கள் நடத்துவதைக் கைவிட்டுவிட்டு, ஏழை - எளிய மக்கள் பயன்பெறும் வகையிலான நலத்திட்ட உதவிகளை இயன்றவரை வழங்கிட வேண்டுகிறேன்” என்று அறிக்கையின் வாயிலாகத் தி.மு.க தொண்டர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தி.மு.க தலைவராகப் பொறுப்பேற்றது முதல் அரசியல்ரீதியிலும் கட்சியின் அமைப்புரீதியிலும் தீர்க்கமான முடிவுகளை எடுத்து, தன் அரசியல் பாதையில் உறுதியுடன் பயணித்துவருகிறார் ஸ்டாலின். பா.ஜ.க எதிர்ப்பு, மோடி எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டில் தீவிரத்தன்மையுடன் செயல்பட்டுவருகிறார்.

இளைஞரணித் தலைவராக...

தி.மு.க இளைஞரணி என்று சொன்னாலே அனைவர் மனதிலும் ஸ்டாலின் முகம்தான் தோன்றும். அந்த அளவுக்கு நீண்டகாலமாக அந்தப் பொறுப்பை வகித்தவர் ஸ்டாலின். தற்போது அவரின் மகன் உதயநிதி அந்தப் பொறுப்புக்கு வந்திருக்கிறார். தி.மு.க-வுக்கு அப்பால் இருக்கும் பலர் இதை விமர்சித்தபோதிலும், தி.மு.க-வுக்குள் சிறு முணுமுணுப்புகூட இல்லை. ஆனால், தி.மு.க-வில் ஸ்டாலின் முன்னிறுத்தப்படுகிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, தி.மு.க-விலிருந்து விலகி ம.தி.மு.க என்ற புதிய கட்சியையே ஆரம்பித்தார் வைகோ. அந்த அளவுக்கு வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தைக் கருணாநிதி தலைமையிலான தி.மு.க எதிர்கொண்டது. கருணாநிதியின் மகன் என்பதாலேயே இந்த இடத்துக்கு ஸ்டாலின் வந்திருக்கிறார் என்ற விமர்சனம் தவிர்க்க முடியாதது என்றாலும், இந்த உயரத்தை ஸ்டாலின் எட்டியதற்கு அவரது உழைப்பும் தியாகமும் முக்கியம் என்பதையும் யாரும் மறுத்துவிட முடியாது.

பதினான்கு வயதில் தொடங்கிய பயணம்

1967-ல் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது ஸ்டாலினுக்கு 14 வயது. அந்த வயதிலேயே தி.மு.க-வுக்காக தேர்தல் பிரசாரம் செய்தவர் ஸ்டாலின். 1966-ம் ஆண்டு `இளைஞர் தி.மு.க கழகம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் அவர். தி.மு.க-வுக்கு தொழிற்சங்கம், மாணவர் அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் இருந்தபோதிலும், அந்தக் கட்சிக்கு நீண்டகாலமாக இளைஞர் அமைப்பு இருக்கவில்லை. 1980-ம் ஆண்டுதான் தி.மு.க இளைஞரணி உதயமானது. 1980-ம் ஆண்டு, ஜூலை 20-ம் தேதி மதுரை ஜான்சிராணி பூங்காவில் தி.மு.க இளைஞர் அணியைக் கருணாநிதி தொடங்கிவைத்தார். அதற்கு உடனடியாக நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. 1982-ம் ஆண்டு இளைஞரணியின் அமைப்பாளராகத் தேர்வானார் ஸ்டாலின்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மிகவும் தாமதமாக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்றபோதிலும், தி.மு.க-வில் கூடுதலான செல்வாக்கையும் முக்கியத்துவத்தையும் கொண்ட அமைப்பாக அன்று முதல் இன்றுவரை இருந்துவருவது இளைஞரணி மட்டும்தான். அதன் செயலாளராக நீண்டகாலம் இருந்தவர் ஸ்டாலின். 1984-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் தோல்வியைத் தழுவினார். அதே தொகுதியில் 1989-ம் ஆண்டு போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாகத் தேர்வானார். 1990-ம் ஆண்டு தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டதால், ஐந்து ஆண்டுகள் முழுமையாக எம்.எல்.ஏ பதவியை அவர் வகிக்க முடியாமல் போனது.

1991-ம் ஆண்டு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், வெற்றிபெறவில்லை. 1996 சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதியில் வெற்றிபெற்றார். அதே ஆண்டில், சென்னை மாநகராட்சி மேயராகவும் தேர்வானார். 2003-ல் தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளராகத் தேர்வான ஸ்டாலின், 2006 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று முதன்முறையாக அமைச்சர் பொறுப்பை ஏற்றார். உள்ளாட்சித்துறையை அவர் கவனித்தார். 2009-ம் ஆண்டு தமிழ்நாட்டின் துணை முதல்வர் ஆனார்.

மிசா நாள்கள்...

பலமுறை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின், முதன்முறையாக 2011-ம் ஆண்டு கொளத்தூர் தொகுதிக்கு மாறினார். 2011, 2016 ஆகிய இரண்டு முறையும் கொளத்தூர் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ-வாகத் தேர்வுசெய்யப்பட்டார். வயோதிகம் காரணமாக, கருணாநிதி உடல் நலிவுற்று ஓய்வெடுத்துவந்த நிலையில், 2017-ம் ஆண்டு தி.மு.க-வின் செயல் தலைவர் ஆக்கப்பட்டார் ஸ்டாலின். 2018-ல் கருணாநிதி மறைந்த பிறகு, தி.மு.க-வின் தலைவராக ஸ்டாலின் ஆனார். தற்போது, தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிறார்.

தற்போது 69 வயதாகும் ஸ்டாலின், தன் அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களை எதிர்கொண்டிருந்தாலும், எத்தனையோ தியாகங்களைச் செய்திருந்தாலும், மிசா கைதியாக சிறையில் அனுபவித்த கொடுமைகள்தான் அவரது அரசியல் வாழ்க்கையின் அடித்தளமாகப் பார்க்கப்படுகின்றன.

ஸ்டாலின்
ஸ்டாலின்

1975-ம் ஆண்டு. தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சி நடைபெற்ற காலம். மத்தியில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. முதல்வரின் மகனாக ஸ்டாலின் வலம்வந்துகொண்டிருந்தார். 1975-ம் ஆண்டு ஜூன் 26-ம் நாள் இந்தியாவில் அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டது. அதையடுத்து, டிசம்பர் 31-ம் தேதி கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை வேட்டையாட ஆயத்தமானது காவல்துறை.

சிறை செல்வதற்குத் தயாராக இரு!

கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டுக்கு போலீஸ் போனது. அங்கு ஸ்டாலின் இல்லை. வீடு முழுவதும் போலீஸார் சோதனையிட்டார்கள். ஆனால், ஸ்டாலின் இல்லை. அவர், மதுராந்தகத்தில் `முரசே முழங்கு’ என்ற நாடகத்தில் நடிப்பதற்காகச் சென்றிருந்தார். ஆனால், தி.மு.க ஆட்சியை டிஸ்மிஸ் செய்துவிட்டார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு நாடகத்தை ரத்துசெய்துவிட்டார்கள். அன்றைய இரவு மதுராந்தகத்தில் தங்கிவிட்டு, மறுநாள் கோபாலபுரத்துக்குப் புறப்பட்டுவந்தார் ஸ்டாலின்.

வீடு திரும்பிய ஸ்டாலினைப் பார்த்து, ``சிறை செல்வதற்குத் தயாராக இரு” என்றார் தந்தையும் தலைவருமான கருணாநிதி. அவரே, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தைத் தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு, ``ஸ்டாலின் வந்துவிட்டார்’’ என்று தகவல் தெரிவித்தார். ஸ்டாலின் கைதாகப்போகிறார் என்ற தகவல் தி.மு.க-வினரிடையே பரவியது. தி.மு.க-வினர் கோபாலபுரத்துக்குப் படையெடுத்தனர். ஸ்டாலினைக் கைதுசெய்து வாகனத்தில் ஏற்றிய போலீஸாரால், கோபாலபுரத்தைக் கடந்துசெல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதை: 14 வயதில் பிரசாரம் முதல் 2021 தேர்தல் வரை!-எப்படிச் செயல்படுகிறார்?

சென்னை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். ஒன்பதாம் பிளாக்கில் இருந்த இரண்டாம் எண் அறைக்குள் அவர் நுழைந்தபோது, கும்மிருட்டாக இருந்தது. அங்கு படுத்திருந்த ஒருவரின் கால்களை ஸ்டாலின் தெரியாமல் மிதித்துவிட்டார். ``யாரது?” என்று அந்த நபர் கேட்டார். ``ஸ்டாலின்” என்றார் இவர். ``தம்பி” என்று பதறியடித்து எழுந்தார் அந்த நபர். அவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. தி.மு.க., தி.க., சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகளின் முன்னணித் தலைவர்களுடன் சிறை வாழ்க்கையைக் கழித்தார் ஸ்டாலின்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடி, உதை என ஓராண்டுக் காலம் சிறையில் பல சித்ரவதைகளை அவர் அனுபவித்தார். அதைத்தான், ``மிசாவில் ஸ்டாலின் சிறை செல்லவில்லை” என்று சர்ச்சையாக்கினார் அமைச்சர் பாண்டியராஜன். ஆனால், மிசாவில்தான் ஸ்டாலின் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதற்கான ஆதாரங்களையும் முன்வைத்து, அந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு.

ஸ்டாலின்
ஸ்டாலின்

``மிசாவில் நான் ஒரு வருடம் சிறையில் அனுபவித்த கொடுமைகளையும் சித்ரவதைகளையும் நினைத்துக்கூடக் கவலைப்படவில்லை. இவர்களால், நான் படும் அவலங்களை நினைத்துத்தான் கவலைப்படுகிறேன்” என்ற குமுறலுடன் அந்த விமர்சனத்தைக் கடந்துபோனார் ஸ்டாலின்.

கடந்த ஆண்டு, தன் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என்று தி.மு.க தொண்டர்களை அறிவுறுத்திய ஸ்டாலின், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நாம்தான் வெற்றிபெற வேண்டும் என்றும், அதை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள் என்றும் கூறினார். நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையில் வெற்றிகரமான கூட்டணி அமைக்கப்பட்டு, அந்தக் கூட்டணி 38 தொகுதிகளை வென்றது. கருணாநிதி மறைந்துவிட்ட நிலையில், அவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றதன் மூலம் தன்னை நிரூபித்துக்காண்பித்தார் ஸ்டாலின்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

2021-ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க கூட்டணி எளிதாக வெற்றிபெறும் என்ற எண்ணம் பொதுவாக அப்போது ஏற்பட்டது. ஆனால், இப்போதைய நிலை மாறியிருக்கிறது. இந்தத் தேர்தல் தி.மு.க-வுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம். 2019-ல் சாதித்த ஸ்டாலின், 2021-ல் சாதிப்பாரா?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு