Published:Updated:

`இதை நான் விரும்பவில்லை; விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி’-`கூட்டணி விரிசல்’ விவகாரத்தில் ஸ்டாலின்

ஸ்டாலின்
ஸ்டாலின்

சுமுகமாகப் பேசித் தீர்த்திருக்க வேண்டிய மறைமுகத் தேர்தல் இடப் பங்கீடு குறித்து, அறிக்கை மூலம் பொது வெளிக்குக் கொண்டு சென்றது, கடந்த சில நாள்களாக இரு தரப்பிலும் விரும்பத்தகாத கருத்துப் பரிமாற்றத்திற்கு வழி வகுத்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், கூட்டணிகளில் சில சிக்கல்கள் வெளிப்பட்டது. குறிப்பாக தி.மு.க - காங்கிரஸ் இடையேயான வெளிப்படையான கருத்து மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமானது. மறைமுக தேர்தலில் தி.மு.க - காங்கிரஸ் கட்சியைப் புறக்கணித்துவிட்டதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை விட இந்தப் பிரச்னை பூதாகரமானது.

காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி
காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி

அ.தி.மு.க - பா.ஜ.க இடையே இதே மோதல் இருந்தாலும், இந்த விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் கட்சிக்காரர்கள் பேசக் கூடாது என ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ் கூட்டறிக்கை வெளியிட சலசலப்பு ஓய்ந்தது. ஆனால், தி.மு.க - காங்கிரஸ் இடையேயான சிக்கல் நீடித்தது. டெல்லியில் காங்கிரஸ் தலைமையிலான அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்தை தி.மு.க புறக்கணித்தது. பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி தலைமை கே.எஸ்.அழகிரியை அழைத்துப் பேசியது.

`உள்துறை அமைச்சகத்தின் ஏற்பாடு; காஷ்மீர் செல்லும் 36 மத்திய அமைச்சர்கள்!’ - மோடி சொன்ன அட்வைஸ்

இந்த நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் கே.எஸ்.அழகிரி ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். சந்திப்பு முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ``தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் எந்தப் பிளவும் இல்லை. சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி தொடரும். இந்தக் கூட்டணியில் ஆரோக்கிய விவாதங்கள் வந்து செல்லும். தி.மு.க - காங்கிரஸ் இடையேயான பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாகப் பேசியுள்ளோம். காங்கிரஸ் தலைமை எனக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளது. துக்ளக் -உடன் முரசொலியை ரஜினி ஒப்பிட்டுப் பேசியது தவறு” என்றார்.

`இதை நான் விரும்பவில்லை; விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி’-`கூட்டணி விரிசல்’ விவகாரத்தில் ஸ்டாலின்

இந்த நிலையில், இந்தச் சந்திப்பு தொடர்பாக தி.மு.க தலைவர் ஸ்டாலின், ``தமிழகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த, 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மக்களின் ஆதரவைப் பெற்று மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் இடங்கள் குறித்து கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், அவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தி, வெற்றி வாய்ப்புள்ள பகுதிகளின் அடிப்படையில் இடங்களைப் பகிர்ந்துகொள்வது என்று தெரிவிக்கப்பட்டு, அவ்வாறே மாவட்ட அளவில் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று, இடங்கள் ஒதுக்கீடு செய்துகொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் தி.மு.க தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.

மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த இடங்களே வழங்கப்பட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளிப்படையாக ஓர் அறிக்கையை வெளியிட்டார். சுமுகமாகப் பேசித் தீர்த்திருக்க வேண்டிய மறைமுகத் தேர்தல் இடப் பங்கீடு குறித்து, அறிக்கை மூலம் பொது வெளிக்குக் கொண்டு சென்றது, கடந்த சில நாள்களாக இரு தரப்பிலும் விரும்பத்தகாத கருத்துப் பரிமாற்றத்துக்கு வழி வகுத்துள்ளது.

ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி
ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி

தி.மு.க-வின் மனப்பாங்கை உணர்ந்த கே.எஸ்.அழகிரி, ``தி.மு.க. - காங்கிரஸ் இடையே எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது” என்றும், ``மதவாத, பாசிச சக்திகளையும் அவர்களை ஆதரித்து கைப்பாவைகளாகச் செயல்பட்டு வருபவர்களையும் எதிர்த்து தி.மு.கழகம் மேற்கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆதரவளித்து துணை நிற்கும்” என்றும் அறிக்கை வாயிலாகவும், பேட்டிகள் வாயிலாகவும் ஆக்கபூர்வமாகத் தெரிவித்துள்ளார். இன்று அண்ணா அறிவாலயத்தில் என்னை நேரில் சந்தித்து இதுகுறித்து பேசினார்.

ஆகவே, கூட்டணி தொடர்பாக ஏதோ ஒரு சில இடங்களில் இருதரப்புக்கும் ஏற்பட்ட சில நிகழ்வுகளை முன் வைத்து, இரு தரப்புமே இந்த விவாதத்தை மேலும் பொதுவெளியில் நடத்திக் கொண்டிருப்பது, தி.மு.க தலைமையிலான கூட்டணியில் சிறு ஓட்டையாவது விழாதா என்று ஏங்கித் தவிக்கும் குள்ள நரி சக்திகளுக்கும் சில ஊடகங்களுக்கும் மேலும் அசைபோடுவதற்கான செயலாக அமைவதை நான் சிறிதும் விரும்பவில்லை.

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஆகவே விரும்பத்தகாத இத்தகைய விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், இனியும் இவ்வாறு ஏற்பட அனுமதிக்கக் கூடாது என்பதாலும், கூட்டணி குறித்த கருத்துகளை இரு கட்சியினரும் பொது வெளியில் தெரிவிப்பதை கட்டாயம் தவிர்த்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு