Published:Updated:

ஸ்டாலின் Vs எடப்பாடி: சூடு பிடிக்கும் அறிக்கைப் போர்கள்! #VikatanSpecials

ஸ்டாலின்
News
ஸ்டாலின்

கொரோனா விவகாரத்துக்குப் பிறகு ஸ்டாலினின் அறிக்கைகளும் அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பதில்களுமாக ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன. அது குறித்தும் இரு கட்சியினரின் எண்ணவோட்டங்கள் பற்றியும் அலசுகிறது இந்தக்கட்டுரை.

சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கர் நீண்ட நாள்களுக்குப் பிறகு செய்தியாளர்கள் முன்பு தோன்றினார். ”கொரோனா விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். அதற்கு பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்“ என்று விளக்கம் கொடுத்தார். இதைத்தான் தி.மு.க வினர் ஆச்சர்யத்தோடு பார்க்கிறார்கள். இரண்டு நாள்களுக்கு முன்பாக “அரசு இயங்காவிட்டால் தி.மு.க இந்த அரசை இயங்க வைக்கும்” என்று ஸ்டாலின் சொல்லிய கூற்று உண்மையாகிவருகிறது என்று சிலாகிக்க ஆரம்பித்துள்ளார்கள் உடன்பிறப்புகள்.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

எதிர்கட்சித் தலைவரான ஸ்டாலின் கொரோனா விவகாரத்தில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று சட்டமன்றத்தில் ஆரம்பத்திலேயே குரல் கொடுக்க ஆரம்பித்தார். அவர் மட்டுமன்றி எதிர்கட்சித் துணைத்தலைவரான துரைமுருகனும் இந்த விவகாரத்தில் சட்டமன்றதில் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்திருந்தார்.

மார்ச் மாதம் 17-ம் தேதி அன்று சட்டமன்றத்தில் பேசிய ஸ்டாலின் “கொரோனா உலக நாடுகளுக்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவருகிறது என்பதால் நானும் அதை சவாலாகப் பார்க்கிறேன். கொரோனா விவகாரத்தில் தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை நான் வரவேற்கிறேன்” என்றார்.

அதற்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் “கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு ஏற்கெனவே இறங்கிவிட்டது. அது தொற்று வியாதி என்பதால் உலகம் முழுவதும் மின்னல் வேகத்தில் அந்த நோய் பரவிவருகிறது. தமிழகத்தில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சித் தலைவர் வரவேற்றது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

ஆம்! ஆரம்பத்தில் அரசு செயல்படுத்திய திட்டங்களுக்கு ஆதரவு கொடுத்த அதே ஸ்டாலின்தான் இப்போது அசுரத்தனமான எதிர்ப்புகளைக் கொரோனா விவகாரத்தில் கையாள ஆரம்பித்துள்ளார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதற்குப் பின்னால் நடந்த பிரதான காரியங்களையும் அடுக்குகிறார்கள் உடன்பிறப்புகள். “கொரோனா விவகாரத்தில் முதலில் எதிர்க்கட்சியான தி.மு.க சட்டமன்றத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால், “போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதால் பேரவையை ஒத்திவைக்க வேண்டியதில்லை” என்று பதிலடி கொடுத்தார் முதல்வர். அடுத்த சில நாள்களிலே கொரோனா தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்த நிலையில், வேறு வழியில்லாமல் அவசரமாகச் சட்டமன்றத்தை முடித்தது ஆளும் தரப்பு.

அதேபோல் தி.மு.க தரப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது, அதையும் மறுத்துவிட்டது ஆளும் தரப்பு. இந்த நிலையில் கொரோனா விவகாரத்தில் அரசுக்கு எதிராக எந்தக் கருத்தையும் பதிவிடாமல் இருந்தார் ஸ்டாலின். மாறாக தங்களது கட்சியின் நிர்வாகிகள் மூலம் மக்களுக்குத் தேவையான நிவாரணப்பணிகளை மேற்கொள்ளுமாறு பணித்தார். முதல் வாரம் ஸ்டாலின் வீட்டிலிருந்து வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் கட்சியினரிடம் பேசிவந்தார்.

ஆனால், அதை அ.தி.மு.க விமர்சிக்க ஆரம்பித்தது. எதிர்க்கட்சித் தலைவர் எங்கே, முதல்வரே மக்கள் பணியில் துணிவுடன் களத்தில் இறங்கும் போது, வீடியோ வழியாக விளக்கம் கொடுத்துவருகிறாரா ஸ்டாலின் என்று விமர்சனம் செய்தது. அதற்குப் பிறகுதான் கொளத்துார் தொகுதிக்கு அதிரடியாக விசிட் அடித்த ஸ்டாலின் அங்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அதன்பிறகு தாம்பரம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பயணம் மேற்கொண்டார். அதுவரை அரசைப் பெரிதாக விமர்சிக்காத ஸ்டாலினை சொந்தக் கட்சியினரே கொஞ்சம் ஆச்சர்யத்தோடு பார்த்தனர்.

தி.மு.க தலைவர் ஸ்டாலின்
தி.மு.க தலைவர் ஸ்டாலின்

இந்நிலையில்தான் கடந்த 11-ம் தேதி அன்று தமிழக முதல்வருக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். கருணாநிதி பாணியில் ஆளும்கட்சியைக் குட்டும் வகையில் அந்தக் கடிதம் இருந்தது. அந்தக் கடிதத்தில் “கொரோனா நோய்த்தொற்று இந்திய அளவிலும், தமிழகத்திலும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இன்னும் வரவில்லை. பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதும் துயரமளிக்கிறது. இந்நிலையில் மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கருதி, ஒரு சில கருத்துகளைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.கொரோனா நோய்த் தொற்று சமூகப் பரவலுக்கு உட்பட்டு விட்டதா என்பது குறித்து - தமிழக அரசும், மத்திய அரசும் தெரிவித்து வரும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளன. போதுமான விரைவுப்பரிசோதனைக் கருவிகள் இல்லாததால், பாதிப்பு குறித்து முழுமையாக மதிப்பீடு இன்னமும் செய்யப்படாத நிலையில், மக்கள் மிகுந்த அச்சத்திலும் பதற்றத்திலும் ஆழ்ந்திருக்கிறார்கள்.சோதனை செய்வதற்கான “ரேபிட் டெஸ்ட் கிட்” கொள்முதலில் ஏற்பட்டுள்ள தாமதம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

மாநில அரசே முன்னின்று எடுக்க வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குக்கூட மத்திய அரசின் கண் அசைவிற்காகக் காத்திருக்கும் அவல நிலைமையை இந்த அரசுக்கு ஏற்படுத்தியிருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. ஒரே தேசம் - ஒரே கொரோனா - ஒரே கொள்முதல் என்ற எண்ணம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. இதனால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தமிழகத்தில் மேலும் தாமதமாகி வருகிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது” என்பது உட்பட பல ஆலோசனைகள் மற்றும் அரசு மீதான குற்றச்சாட்டுகளையும் அந்த அறிக்கையில் அவர் பட்டியலிட்டிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இறுதியாக `` `தனிமனித இடைவெளியுடன், தனித்திருத்தல்' மட்டும்தான் மக்களால் செய்ய முடிந்தது. மற்றவை அனைத்தையும் அரசுதான் ஏற்று, செய்து தர வேண்டும். அத்தகைய ஏற்பாட்டுடன் தமிழக அரசு இருக்க வேண்டும். அப்படிச் செயல்படும் அரசுக்கு ஆலோசனைகளைச் சொல்ல, ஒத்துழைக்க, உதவிகள் வழங்க திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் தயாராகவே இருக்கிறது” என்று முடித்திருந்தார். மிகவும் நேர்த்தியாகவும், அரசு தரப்புக்கு செக் வைக்கும் விதத்திலும் தி.மு.க தலைவரின் அறிக்கை இருந்தது. அதற்கு முதல்வர் தரப்பிலும் உடனடியாக எதிர்வினை வந்தது. “அரசு எதுவும் செய்யவில்லை என்பது போல் சித்திரித்து, பரிந்துரை செய்கிறேன் என அரசு மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது சந்தர்ப்பவாத அரசியலையே காட்டுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசை, மத்திய சுகாதாரத் துறை செயலாளரே பாராட்டியுள்ளார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் சொல்லியுள்ள குற்றச்சாட்டுகள், இரவு பகல் பாராது பணியாற்றும் பணியாளர்களைக் கொச்சைப்படுத்துவதாகவே உள்ளது” என்று பதிலடி கொடுத்தார் முதல்வர்.

எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின்

இதோடு அறிக்கைப் போர் ஓய்ந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில்தான் அதற்கு மறுதினமே தி.மு.க தலைவர் ஸ்டாலினிடமிருந்து ‘சில கேள்விகளும் சந்தேகங்களும்’ என்ற ரீதியில் ஓர் அறிக்கை வெளியானது. அதில் “பிற மாநிலங்கள் எல்லாம் ஊரடங்கு குறித்து சுயமாக முடிவெடுக்கும் நிலையில் தமிழகம் மட்டும் பிரதமரின் முடிவுக்குக் காத்திருப்பது ஏன்? யாரைப்பார்த்து பயம்? கொரோனா குறித்து சட்டமன்றத்தில் தி.மு.க கேள்வி எழுப்பியபோது, ”நோய் வருவது இயற்கை என்று சொன்னது முதல்வர்தானே” என்று வரிசையாக சில கேள்விகளை எழுப்பியிருந்தார். மேலும் “மருத்துவர்களின் காப்பாளர் போலப் பேசும் முதல்வரே... போராட்டம் நடத்திய மருத்துவர்களுக்குத் தரப்பட்ட சார்ஜ் மெமோ திரும்பப் பெறப்பட்டதா? அரசியல் செய்ய தி.மு.கவுக்குப் பல களங்கள் உள்ளன. ஆனால், அரசியல் பேசும் நேரமில்லை இது. திரைமறைவு காரியங்கள், புள்ளிவிவரங்கள் திரிப்பு என்று அரசு விளையாடினால் வேடிக்கை பார்க்க முடியாது. தட்டிக்கேட்கும் நேரத்தில் கேட்கிறேன். முதல்வர் பொறுப்புடனும், அரசாங்கம் மக்களுக்காகவும் செயல்பட வேண்டும். அல்லது அரசாங்கத்தை தி.மு.க செயல்பட வைக்கும்” என்று அதிரடியாக வெளியிட்ட ஓர் அறிக்கை சமூகவலைதளங்களில் தி.முக-வினரால் வேகமாகப் பரப்பப்பட்டது.

இந்த அறிக்கை வெளியான அடுத்த சில மணிநேரங்களில் அரசு தரப்பில் மீண்டும் ஓர் அறிக்கை அதிரடியை அரங்கேற்றினார்கள்.

“கொரோனா தொற்றுக்காலத்தில் சில பகுதிகளில் தன்னார்வ அமைப்புகள், சில அரசியல் கட்சிகள் உணவுப்பொருள்களையும், அத்தியாவசியப் பொருள்களையும் நேரடியாக வழங்குவது ஊரடங்கு உத்தரவை மீறுவதாகும். இதைத் தவிர்க்க வேண்டும்” என்று தடைவிதித்து ஒரு செய்தி அறிக்கை வெளியானது. அதை தி.மு.க தங்களுக்கு வைக்கப்பட்ட செக்காகவே பார்த்தது. காரணம், சென்னை, திருச்சி, கோவை எனப் பல மாவட்டங்களில் தி.மு.கவினர் இதுபோன்ற நலத்திட்டங்களை வழங்கிவந்தார்கள். இதற்கு அரசு தடை உத்தரவு போட்டதுமே மறு அறிக்கையை வெளியிட்டார் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். அந்த அறிக்கையில் “தானும் செய்ய மாட்டேன் மற்றவர்களும் செய்யக்கூடாது என்பது இந்த ஆட்சியின் வஞ்சகம். மக்களின் கண்ணீர் துடைக்கத் தமிழ் மக்களின் கரங்கள் நீளும்போது, அதைத் தடுக்க எவராலும் இயலாது. தடுக்க நினைப்பது சர்வாதிகாரத்தனம். கருணையில்லா ஆட்சி கடிந்தொழிக” என்று கடுமையான வார்த்தைகளால் அறிக்கை வெளியிட்டார்.

ஸ்டாலின் அறிக்கை
ஸ்டாலின் அறிக்கை
dmk twitter

அதுமட்டுமன்றி தி.மு.க வழக்கறிஞர் வில்சன் மூலம் தமிழக அரசின் உத்தரவுக்குத் தடைகேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்தது தி.மு.க. மறுதினமே தி.மு.க வின் செயலுக்கு எதிர்வினை அரசு தரப்பிலிருந்து வந்தது. ``அரசு சொன்னது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. சூழ்நிலைகளைப் பயன்படுத்தி உரிய வழிமுறைகளைப் பின்பற்றிச் செயல்படத்தான் அரசு கேட்டுக்கொண்டுள்ளதே தவிர யாருக்கும் தடைவிதிக்கவில்லை” என்று பதில் அளித்தது. மேலும் தி.மு.க தாக்கல் செய்த மனுவிற்குத் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ள உயர்நீதிமன்றம் தி.மு.க தரப்பிடமும் இதுகுறித்து விளக்கத்தையும் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்யச்சொல்லியுள்ளது.

இந்நிலையில் தி.மு.க மூத்த நிர்வாகிகள் நம்மிடம் பேசும்போது கடந்த சில நாள்களாகவே ஸ்டாலின் கொடுக்கும் அறிக்கையும் அதற்கு ஏற்றாற்போல் அரசாங்கம் செயல்படுவதையும் சுட்டிக்காட்டுகிறார்கள். “முதலில் விஜயபாஸ்கர் எங்கே என்று ட்வீட் செய்திருந்தார் ஸ்டாலின். அதேபோல் தமிழகத்தில் போதிய அளவில் கொரோனா தடுப்பு உபகரணங்கள் இல்லை என்று சொல்லியிருந்தார். இரண்டுக்கும் பதிலாக இன்று நீண்ட நாள்களுக்குப் பிறகு விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் முன்பு தோன்றி பதில் அளித்துள்ளார். எந்தக் குற்றச்சாட்டுகளை எல்லாம் எங்கள் தலைவர் எழுப்பியிருந்தாரோ அதற்கெல்லாம் அரைமணிநேரம் நீண்டநெடிய விளக்கத்தைக் கொடுத்தார் விஜயபாஸ்கர். அதேபோல் தலைமைச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்த போது பிரதமர் தரப்பில் ஊரடங்கு குறித்த அறிவிப்பு வந்த பிறகு தமிழக அரசு அறிவிக்கும் என்றார். ஆனால், சுயமாக முடிவு எடுக்க முதல்வருக்கு பயமா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். அதன் தாக்கமாக பிரதமர் அறிவிக்கும் முன்பே தமிழக அரசு ஊரடங்கை அறிவித்தது. தன்னார்வலர்களுக்கு உதவி செய்யத் தடை என்று அறிவித்த அரசு, மறுதினமே அந்த உத்தரவுக்கு விளக்கம் சொன்னதற்கு எங்கள் தலைவர் கடுமையாகச் சாடியதும் ஒருகாரணம். மற்றொரு காரணம் தி.மு.க தாக்கல் செய்த வழக்கு. எனவே கடந்த ஒருவாரமாக கொரோனா விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகளை மறைமுகமாக இயக்கும் நபராக ஸ்டாலின் மாறிவிட்டார். அவர் சொன்னது போலவே அரசு இயங்காவிட்டால், தி.மு.க இயக்கும் என்று சொன்னதைச் செயல்படுத்திவருகிறார்” என்கிறார்கள்.

கருணாநிதி- ஸ்டாலின்
கருணாநிதி- ஸ்டாலின்

அ.தி.மு.க தரப்பும் இதை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது. அ.தி.முக தரப்பில் இது குறித்துப் பேசியபோது “ஸ்டாலின் இத்தனை வீரியமாக மாறி அறிக்கைவிடும் நேரத்தில் நாமும் பதிலடியாக அறிக்கை விடுவதை விட, செயல்பாடுகளில் தன்னை முன்னிலைப்படுத்தவே முதல்வர் நினைக்கிறார். ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை ஆளும்கட்சி கேட்டுக்கொள்ளும். ஆனால் அதிகாரம் செய்து எங்களிடம் அரசியல் செய்ய நினைத்தால் அதற்கு பதிலடி கண்டிப்பாக இருக்கும்.”என்கிறார்கள்.

நேற்றும் தோழமைக் கட்சிகளுடன் வீடியோ கான்ஃப்ரன்ஸில் சந்திப்பு நிகழ்த்தினார் ஸ்டாலின். கொரோனாவில் இறந்த குடும்பங்களுக்கு 1 கோடி கொடுக்க வேண்டும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 5000 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது தீர்மானங்கள் அந்தச் சந்திப்பின்போது போடப்பட்டுள்ளதை காணொளி மூலம் பகிர்ந்துகொண்ட ஸ்டாலின் இந்தச் சந்திப்பு நேரில் நடக்க அனுமதி மறுத்த காவல்துறையை சாடியுள்ளார்.

காலையில் ஸ்டாலின் வீடியோ மூலம் தீர்மானங்களை அறிவிக்க, மாலையே அதற்கும் பதில் தருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. வழக்கமாக 6 மணிக்கு சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்திப்பார். ஆனால், நேற்று மதியமே செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கொரோனா புள்ளிவிபரங்களை ஒவ்வொன்றாக வாசித்தார். அரசின் நடவடிக்கைகளையும் நடுநடுவே விளக்கினார். 134 கோடி ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு கிடைத்த தகவலைப் பகிர்ந்து கொண்டு அதற்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 49 நிமிடம் நீடித்த அந்த சந்திப்பில் 32 நிமிடங்கள் புள்ளிவிபரப்புலியாக கணக்கு கொடுத்தார்.

அதன்பிறகு ஸ்டாலினின் ‘கொரோனாவால் உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு 1 கோடி கொடுக்க வேண்டும்’ என்ற கோரிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. “தி.மு.கவின் ஆட்சி காலத்தில் என்ன நடந்தது? வெள்ளம், புயல் பாதிப்பால் இறந்தவர்களுக்கு 2 லட்சம் கொடுத்தார்கள்” என்று ஒரே வரியில் முடித்துக்கொண்டார். பிறகு “அரசு கொரோனா வைரஸ் விஷயத்தில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு தடை போடுகிறது எதிர்க்கட்சி. ‘நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பிக்கள் என்ன சாதித்தார்கள்’ என்று அம்மா கேட்பார். அதை நானும் கேட்கிறேன். மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிதிக்காக அவர்கள் குரல்கொடுக்கலாமே? கஜா, தானே, சுனாமி என்று எந்த இடரிலும் அரசைக் குறை சொல்வதே ஸ்டாலினின் வேலை. நோயிலும் சில கட்சிகள் அரசியல் செய்வது தமிழகத்தில் மட்டுமே நடக்கிறது. அது வேதனையளிக்கிறது” என்றார்.

எடப்பாடியின் இந்த ரியாக்‌ஷனையும் தங்களுக்கு சாதகமாகவே பார்க்கிறது தி.மு.க தரப்பு. ஸ்டாலினின் அறிக்கை ஒவ்வொன்றுக்கும் எடப்பாடி பதறி விளக்கம் கொடுக்கிறார் என்பது அவர்கள் வாதம்.

கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தை விட எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது அவரது செயல்பாடுகள் வீரியமாக இருக்கும். எம்.ஜி.ஆர் தொடங்கி ஜெயலலிதா காலம் வரை அறிக்கைகளால் ஆளும் கட்சியை அலறவிடும் போக்கும் கருணாநிதியிடம் இருந்தது. ஆனால் ஏனோ அது இத்தனை காலம் ஸ்டாலினுக்குப் பெரிய அளவில் கைகூடவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் கொரோனா விவகாரத்தில் அவர் எடுத்த அறிக்கை அஸ்திரம் தி.மு.க உடன்பிறப்பிகளை மீண்டும் உற்சாகமடையச் செய்துள்ளது.

இரண்டு கட்சிகளும் இப்படி அறிக்கையும் அதன் எதிர்வினையுமாக பாஸிடிவ் பக்கங்களை பார்த்துக் கொண்டிருக்க - ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தவறு செய்யும்போது இடித்துரைத்துக் கொண்டும், மற்ற சமயத்தில் மக்களுக்காக ஒன்று பட்டு செயலாற்றியும் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக உயர்த்தவும் வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.