Published:Updated:

`அவர் இறக்குமதி வேட்பாளர்; இவர் `மேட் இன் நாங்குநேரி'!'- காங்கிரஸ் வேட்பாளரைக் கலாய்த்த ஜெயக்குமார்!

``தற்போதைய ஆட்சி எடப்பாடி ஆட்சியா அல்லது மணல் கொள்ளையர்களின் ஆட்சியா? என தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளது சாத்தானே வேதம் ஓதுவது போல உள்ளது” என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு என 5 அமைச்சர்களும் சென்னையிலிருந்து ஒரே விமானத்தில் தூத்துக்குடி வந்தனர். அங்கிருந்து காரில் நாங்குநேரிக்குப் புறப்பட்டுச் சென்றனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது பேசிய அவர், ``நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் போலியான நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்து தி.மு.க-வினர் மக்களை ஏமாற்றினார்கள்.

விமான நிலையத்தில் அமைச்சர்கள்
விமான நிலையத்தில் அமைச்சர்கள்

அதுபோன்று தற்போது நடைபெற வாய்ப்பில்லை. நடந்து முடிந்த வேலூர் மக்களவைத் தேர்தலில் 48 சதவிகிதம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று அ.தி.மு.க வளர்ச்சியடைந்துள்ளது. நாங்குநேரி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளரான ரூபி மனோகரன், இந்த மண்ணின் மைந்தர் கிடையாது. அவர் இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர்.

அ.தி.மு.க வேட்பாளர் நாராயணன் இதே தொகுதியைச் சார்ந்தவர். இவர் மேட் இன் இந்தியா என்பது போல மேட் இன் நாங்குநேரி. ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் இறக்குமதி வேட்பாளர்.

தற்போதைய ஆட்சி எடப்பாடி ஆட்சியா அல்லது மணல் கொள்ளையர்களின் ஆட்சியா? என தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளது சாத்தானே வேதம் ஓதுவது போல உள்ளது. பழைய வரலாற்றை அவர் திரும்பிப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டின் வளங்களை எல்லாம் சூறையாடிக் கொள்ளையடித்து கோடி கோடியாகக் குவித்தவர்கள் தி.மு.க-வினர்தான். ஆரம்ப காலத்தில் அவருடைய சொத்து மதிப்பு என்ன? தற்போது அவரின் சொத்து மதிப்பு என்ன? ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரியும். அவர்களின் மொத்த சொத்து மதிப்பைக் கணக்கிட்டால் இமயமலையைத் தாண்டிவிடும்.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

ஏதோ சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு தேவையில்லாதக் குற்றச்சாட்டுகளைச் சொல்லிக்கொண்டிருக்கிறார். அது மக்கள் மத்தியில் எடுபடப் போவதில்லை. முந்தைய நாடாளுமன்றத் தேர்தலின்போது, தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகளுக்கு ரூ.40 கோடி வழங்கியதாக தேர்தல் ஆணையத்தில் தி.மு.க., தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்திலேயே குறிப்பிட்டுள்ளது. கணக்கிலேயே 40 கோடி என்றால், கணக்கில் வராதது ரூ.1,000 கோடிக்கு மேல் இருக்கும்” என்றார்.