Published:Updated:

`இப்போதும் நான் பெரியார் கொள்கைவாதிதான்!’ - கமலாலயத்தில் குஷ்பு

குஷ்பு
குஷ்பு

`இப்போதும் நான் பெரியார் கொள்கைவாதிதான். பெண்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளைக் கண்டு, அதற்கு எதிராகப் போராடியவர் பெரியார். தலித் மக்களுக்காகப் போராடியவர். நானும் அதேவழியைத்தான் தொடர்கிறேன்' என்று குஷ்பு பேசினார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்த குஷ்பு, பா.ஜ.க-வில் இணையவிருப்பதாக கடந்த சில வாரங்களாகவே செய்திகள் வெளியாகின. ஆனால், அதைத் திட்டவட்டமாக மறுத்த குஷ்பு, `ரூ.2 வாங்கிக்கொண்டு நான் பா.ஜ.க-வில் இணையவிருப்பதாக வதந்தி பரப்புகிறார்கள்’ என டெல்லியில் கடந்த 6-ம் தேதி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

இந்தநிலையில், திடீரென நேற்று முன்தினம் டெல்லி சென்ற குஷ்பு, பா.ஜ.க தேசியப் பொதுச்செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் அந்தக் கட்சியில் இணைந்தார். பின்னர் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவையும் அவர் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, `நாட்டுக்கு நல்லது என்ன என்பது போகப் போகப் புரிந்தது. கட்சி மாறினாலும் கொள்கை மாறவில்லை’ என்று கருத்து தெரிவித்திருந்தார்.

பா.ஜ.க-வில் இணைந்த குஷ்பு
பா.ஜ.க-வில் இணைந்த குஷ்பு

பா.ஜ.க-வில் இணைந்த பின்னர் குஷ்பு, இன்று சென்னை திரும்பினார். ஆளுயர மாலை, பூக்கள் தூவி வரவேற்பு என குஷ்புவுக்கும் பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகனுக்கும் சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அந்தக் கட்சியின் சார்பில் கொடுக்கப்பட்டது. அங்கு செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, `மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ். நான் நடிகை என்பது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் தெரிந்ததா?’ என்று காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்தார்.

குஷ்புவின் `கதர் டு காவி' அரசியல் வரலாறு!

அதன் பின்னர் தமிழக பா.ஜ .க தலைமை அலுவலகமான கமலாலயம் சென்ற குஷ்புவுக்கு, பூக்கள் தூவி தடபுடலாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கமலாலயத்தில் பத்திரிகையாளர்களை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது, ` `கட்சி மாறினாலும் கொள்கை மாறாது’ என்று கூறியிருந்தீர்கள்; உங்கள் கொள்கை என்ன...’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்கு, `மக்களுக்காக உழைப்பதுதான் என் கொள்கை' என்று பதிலளித்தார்.

`பெரியார் கொள்கையே என் கொள்கை என்று முன்பு கூறியிருந்தீர்கள்... இப்போதும் அதே கொள்கையில்தான் இருக்கிறீர்களா?’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, ``இதே கேள்வியை, நான் காங்கிரஸில் இருந்தபோது யாரும் கேட்கவில்லையே? பெரியார் காங்கிரஸுக்கு எதிராகத்தானே தனியாக இயக்கமே கண்டார்' என்று பதிலளித்த குஷ்பு, தொடர்ந்து, `இப்போதும் நான் பெரியார் கொள்கைவாதிதான். பெண்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளைக் கண்டு, அதற்கு எதிராகப் போராடியவர் பெரியார். தலித் மக்களுக்காக போராடியவர். நானும் அதே வழியைத்தான் தொடர்கிறேன். ஏன், பா.ஜ.க-வும் பெண்கள் பாதுகாப்பு, தலித் மக்களுக்காகத்தான் பாடுபடுகிறது. அதனால் என் பணிகளை இங்கும் தொடர்வேன்’’ என்றார் புன்னகைத்தபடி.

குஷ்பு
குஷ்பு

` `இரண்டு ரூபாய் வாங்கிக்கொண்டு பா.ஜ.க-வில் சேரப்போவதாக ட்வீட் போட்டு வதந்தி பரப்புகிறார்கள்’ என்று கூறினீர்கள். தற்போது பா.ஜ.க-வில் நீங்களே இணைந்துள்ளீர்களே?' என்ற கேள்வியை பத்திரிகையாளர்கள் முன்வைக்க,``இப்போ வதந்தி பரப்பும் வேலையை காங்கிரஸ் தொடங்கிவிட்டார்கள்’’ என்றபடியே அடுத்த கேள்விக்குத் தாவினார் குஷ்பு.

`நாட்டுக்கு எது நல்லது எனப் புரிந்தது; கொள்கை மாறவில்லை!’ - பா.ஜ.க-வில் இணைந்த குஷ்பு

`பெரம்பூரில் கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தீர்கள். தற்போது அப்படியே மாறி பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறீர்களே..?' என்ற கேள்வியை முன்வைக்கும்போதே, `எதிர்க்கட்சியில் இருந்ததால், அவ்வாறு பேசினேன். கட்சிக்கு விசுவாசமாக இருந்ததால் கட்சி சொல்வதை மீறாமல் பேசினேன்' என்றவரிடம், `அப்படியென்றால் மக்களுக்கு விசுவாசமாக இல்லையா... கடந்த வாரம் பேசிய கருத்துகளைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறீர்களா?' என்று பத்திரிகையாளர்கள் சரமாரியாகக் கேள்விகளைத் தொடுத்தனர்.

``நான் முன்பிருந்தே பிரதமர் மோடியைப் பாராட்டியிருக்கிறேன். அதனால்தான் எனக்கு அங்கு (காங்கிரஸ்) நெருக்கடியே ஏற்பட்டது’’ என்றதோடு முடித்துக்கொண்டார்

குஷ்பு
குஷ்பு

``என் கணவர் கொடுத்த அழுத்தத்தால்தான் நான் பா.ஜ.க-வில் இணைந்தேன் என்று சொல்வது தவறானது. அவர், என் அரசியலில் தலையிடுவதில்லை. பதவிக்காக, பணத்துக்காக இங்கே சேரவில்லை. இங்கிருந்து இனி வேறு எந்தக் கட்சிக்கும் செல்ல மாட்டேன். பார்க்கத்தானே போறீங்க...’’ என்று கூறி பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துக்கொண்டார் குஷ்பு. அதன் பிறகு நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கெடுத்து, அவர்கள் கொடுத்த வரவேற்பையும் குஷ்பு ஏற்றுக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு