Published:Updated:

`பிரசாரத்தில் கல்வீச்சு!’ - கொதித்தெழுந்த சந்திரபாபு நாயுடு... திணறிய திருப்பதி

`ஆந்திராவில் எதிர்க்கட்சித் தலைவர் எனக்கே பாதுகாப்பில்லாத சூழல் ஜெகன்மோகன் ஆட்சியில் நிலவிவருகிறது.  Z+ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளபோதிலும் கூட்டத்தில் மர்ம நபர்கள் என்னை எளிதில் அணுகித் தாக்கிவிட்டுச் சென்றிருக்கின்றனர்’ - சந்திரபாபு நாயுடு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆந்திராவில் 2019-ம் ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பல்லி துர்கா பிரசாத் ராவ் என்பவர் திருப்பதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி-யாக ஓராண்டு காலம் மட்டுமே பதவியிலிருந்த பிரசாத் ராவ், கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பல்லி துர்கா பிரசாத் ராவ்
பல்லி துர்கா பிரசாத் ராவ்

அதையடுத்து, திருப்பதி நாடாளுமன்றத் தொகுதியில் இடைத்தேர்தலை, தேர்தல் ஆணையம் அறிவித்தது. திருப்பதி இடைத்தேர்தல் ஏப்ரல் 17-ந் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்ததைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களைத் தொகுதியில் முன்னிறுத்தி பிரசாரம் மேற்கொண்டுவருகின்றன.

திருப்பதி தொகுதி இடைத்தேர்தலில் ஆளும்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் குருமூர்த்தி, எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் சார்பில் பனபாகாலட்சுமி, பாஜக - ஜனசேனா கூட்டணியின் சார்பில்  ரத்தின பிரபா ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் என பிரதான அரசியல் கட்சிகளின் முதற்கட்ட தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து திருப்பதியில் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.

மும்முனைப் போட்டி
மும்முனைப் போட்டி

திருப்பதியில் கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தனது தேர்தல் பரப்புரைகளை ரத்து செய்துவிட்டார். ஆனால், தொகுதியைக் கைப்பற்றுவதில் முனைப்புக் காட்டிவரும் தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா- பாஜக கூட்டணிக் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு பிரசாரம் மேற்கொண்டுவருகின்றன. அதன் காரணமாக, தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவிவருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தநிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர் பனபாகாலட்சுமியை ஆதரித்து ஆந்திர முன்னாள் முதல்வரும், அந்தக் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று மாலை 5 மணியளவில் திருப்பதி ரயில் நிலையம் அருகில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் தலைமையில் கட்சித் தொண்டர்கள் ஊர்வலம் நடத்தினர்.

அதில் சந்திரபாபு நாயுடு நடந்து சென்று மக்களிடம் வாக்குச் சேகரித்தார். அப்போது கூட்டத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த சந்திரபாபு நாயுடு மீது மர்ம நபர்கள் சரமாரியாகக் கற்களை வீசினர். கற்கள் தன்மீது வீசப்படுவதைக் கணடு அதிர்ச்சியடைந்த சந்திரபாபு நாயுடு தன்னை தற்காத்துக்கொள்ளக் கீழே குனிந்துகொண்டார். அதனால், அவருக்குப் பின்னால் நின்றிருந்த தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்கள் மீது கற்கள் பட்டதில் பலருக்குக் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

எதிர்க்கட்சித் தலைவர் மீது தேர்தல் பிரசாரத்தில் கற்கள் வீசப்பட்ட சம்பவம் அந்தக் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து, சந்திரபாபு நாயுடு திடீரெனச் சாலையில் அமர்ந்து தன்மீதும், கட்சித் தொண்டர்கள் மீதும் கற்களை வீசித் தாக்குதல் நடத்திய குற்றவாளிகளைக் கைதுசெய்யக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதன் காரணமாக, திருப்பதி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பதி போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட சந்திரபாபு நாயுடுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், சமரசமாகாத சந்திரபாபு நாயுடு, கூட்டணிக் கட்சியினருடன் சம்பவம் தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றார். அங்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்ரஜா வருவதற்கு தாமதமானதால் அவர் சுமார் அரை மணி நேரம் காவல் நிலைய வளாகத்தில் காத்திருந்தார். பின்னர், சுப்ரஜாவிடம் புகாரளித்த சந்திரபாபு நாயுடு, ஆந்திராவில் எதிர்க்கட்சித் தலைவருக்கே பாதுகாப்பில்லாத சூழல் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் நிலவிவருவதாகவும், தனக்கு ஆந்திர அரசால் Z+ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளபோதிலும் மர்ம நபர்கள் எளிதில் அணுகித் தாக்கிவிட்டுச் சென்றுள்ளதாகவும் கூறி புகார் மனுவை அளித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் பொதுவெளியில் பிரசாரத்தின்போது தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு