Published:Updated:

`ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்!' - பா.ஜ.க-வைச் சாடும் ஐ.பெரியசாமி

ஐ.பெரியசாமி

தன் மீது ஆதாரமற்ற குற்றசாட்டுகளை முன்வைத்து, பொதுமக்களையும் விவசாயிகளையும் திசைதிருப்புவதாக ஐ.பெரியசாமி, பா.ஜ.க மீது குற்றம்சாட்டினார்.

`ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்!' - பா.ஜ.க-வைச் சாடும் ஐ.பெரியசாமி

தன் மீது ஆதாரமற்ற குற்றசாட்டுகளை முன்வைத்து, பொதுமக்களையும் விவசாயிகளையும் திசைதிருப்புவதாக ஐ.பெரியசாமி, பா.ஜ.க மீது குற்றம்சாட்டினார்.

Published:Updated:
ஐ.பெரியசாமி

திண்டுக்கல்லில் உள்ள கலைஞர் மாளிகையில், தி.மு.க-வின் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி, பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருப்பதால், மக்கள் திட்டங்களைச் செயல்படுத்த நான் எடுக்கும் முயற்சிகளை ஆளும் அ.தி.மு.க அரசு தவிர்த்துவருகிறது. இருந்தபோதும், சட்டமன்ற உறுப்பினர் நிதி மற்றும் சொந்தப் பணத்தில் வளர்ச்சிப் பணிகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறேன். கொடகனாறு நீர்ப் பங்கீட்டுப் பிரச்னையில், விவசாயிகள் நலனுக்காகவும், பொதுமக்களின் குடிநீர்ப் பிரச்னைக்காகவும் முழுவீச்சில் பணியாற்றிவருகிறேன்.

ஐ.பெரியசாமி
ஐ.பெரியசாமி

முன்னதாக நரசிங்கபுரம் ராஜவாய்க்கால், ஆத்தூர் ராஜவாய்க்கால், குடகனாறு விவசாயிகள் ஆகிய மூன்று தரப்புக்கும் இடையே தண்ணீர் பங்கீட்டில் பிரச்னை இருந்தது. அதைக் களைய மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது. சுமுக முடிவெடுக்கப்பட்டு, கொடகனாற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இனி வரும் காலங்களில் பிரச்னை ஏற்படக் கூடாது என்பதற்காக அரசு வல்லநர்குழுவை அமைத்தது. பிரச்னைக்குரிய இடத்தை ஆய்வுசெய்து முத்தரப்பின் கருத்துகளைக் கேட்டு அரசிடம் வல்லநர்குழு அறிக்கை சமர்ப்பிக்கவிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தநிலையில், நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் மூலம் என்னுடைய விவசாய நிலத்துக்கும், தொழிற்சாலைக்கும் தண்ணீர் கொண்டு செல்வதாகப் புரளியைக் கிளப்பினார்கள். இது பொய்யான தகவல். நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் தண்ணீர், செங்கட்டான்குளத்துடன் முடிவடைகிறது. தண்ணீர் அதிகமாக வரும்போது, அது நிலக்கோட்டைப் பகுதிக்குக் குடிநீர் தேவைக்காகச் செல்லும். இது அனைவரும் அறிந்த உண்மை. அதைத் தாண்டி வத்தலக்குண்டு போவதற்கு எந்த வாய்க்காலும் இல்லை. அதற்கு அடுத்தபடியாக, பிரச்னைகள் முடிந்து கொடனாற்றில் தண்ணீர் திறந்துவிட்டபோது, அனுமந்தராயன் கோட்டைப் பகுதியில் எனக்கு ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் இருப்பதாகவும், அதற்குத் தண்ணீர் கொண்டு செல்வதாகவும் சமூக வலைதளங்களில் சிலர் பரப்பிவருகிறார்கள்.

ஐ.பெரியசாமி
ஐ.பெரியசாமி

கொடகனாறு தண்ணீர் பயன்படும் அனுமந்தராயன் கோட்டைப் பகுதியிலோ, நரசிங்கபுரம் தெற்கு வாய்க்கால் பகுதியிலோ எனக்கு ஒரு சென்ட் நிலம்கூட இல்லை. எனது நிலத்துக்காக தண்ணீரை நான் பயன்படுத்தியதாக யாராவது ஒருவர் நிரூபித்தாலும், அரசியலைவிட்டு விலகிக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். இதை நான் சவாலாகச் சொல்கிறேன். அவதூறுகளையும் பொய்ப் பிரசாரத்தையும் முன்னிறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்களை திசைதிருப்பி அதன் மூலம் ஆதாயம் தேடலாம் என்ற நரித்தனமும் நப்பாசையும் எடுபடாது. இதில் பா.ஜ.க அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறது. இதுவரை எள் முனைகூட மக்களுக்கு நல்லது செய்தது கிடையாது. தற்போது விவசாயிகளிடம் மோதலை உருவாக்கி, லாபம் பார்க்க இருக்கிறது. அது ஒருபோதும் நடக்காது! இனியாவது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றார் காட்டமாக.