Published:Updated:

பாமக உருவாக்கப்பட்டது ஏன்? - அன்புமணியின் புதிய விளக்கமும் 'இலக்கு'களும்!

``உண்மையிலேயே 2026 தேர்தலுக்கான வேலைகளை நாங்கள் இப்போதே தொடங்கிவிட்டோம். அதற்காக எங்கள் ஐயா மருத்துவர் ராமதாஸ் பல்வேறு திட்டங்களை வைத்திருக்கிறார். நேரம் வரும்போது ஒவ்வொன்றாக வெளியில் வரும்'' என்கிறார்கள் பா.ம.க-வினர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``தமிழகத்தில் கடந்த 54 ஆண்டுக்காலமாக இரு பெரும் கட்சிகள் மாறி மாறி ஆட்சி புரிந்தது போதும். இனி பாமக ஆட்சி செய்ய வேண்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது. வேறு யாரோ ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகவா மருத்துவர் ஐயா கட்சி தொடங்கினார்? நாம் ஆட்சிக்கு வரவேண்டும் என்றுதான் கட்சி தொடங்கியிருக்கிறார்''

ஊரக உள்ளாட்சித் தேர்தலில், விழுப்புரம் மாவட்டத்தில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில், அந்தக் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி பேசிய வார்த்தைகள் இவை. தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் பேசிய அன்புமணி

``தமிழகத்தில் நாம் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். அதற்கு பாமக ஆட்சி அமைய வேண்டும். எம்.பி., எம்.எல்.ஏ-க்களைவிட ஊராட்சி மன்றங்களின் தலைவர்களுக்குத்தான் அதிகாரம் அதிகம் இருக்கிறது. பத்து தம்பிகள் ஒன்றுகூடி கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றினால், அந்தப் பணியை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முடித்தாக வேண்டும்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

இந்த உள்ளாட்சித் தேர்தலிலிருந்து மாற்றத்தைத் தொடங்குவோம். கடந்த 54 ஆண்டுகளாக அனைத்துக் கட்சிகளும் ஆட்சி செய்துவிட்டன. ஸ்டாலின்கூட அவரின் கட்சியில் நீண்டகாலமாக உழைத்தவர். இப்போது, அவருடைய முதலமைச்சர் கனவும் நிறைவேறிவிட்டது. அடுத்து நாம்தான் இருக்கிறோம். நம்முடைய ஆட்சி அமைவதுதான் நியாயம், நீதி. அனைவரும் தயாராக இருங்கள்'' எனக் கொட்டும் மழையில் உணர்ச்சி பொங்கப் பேசினார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த மே மாதம்தான் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்த தேர்தலுக்கு இன்னும் நான்காண்டுகளுக்கும் மேலாகும். இந்த நிலையில், அன்புமணி ராமதாஸ் இப்படிப் பேசிவருவது, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தவா என்கிற கேள்வியோடு பா.ம.க-வின் முன்னணித் தலைவர் ஒருவரிடம் பேசினோம்.

`` நீங்கள் கேட்பது முற்றிலும் தவறு. உண்மையிலேயே 2026 தேர்தலுக்கான வேலைகளை நாங்கள் இப்போதே தொடங்கிவிட்டோம். அதற்காக எங்கள் ஐயா மருத்துவர் ராமதாஸ் பல்வேறு திட்டங்களை வைத்திருக்கிறார். நேரம் வரும்போது ஒவ்வொன்றாக வெளியில் வரும்'' என்றவாறே பேசத் தொடங்கினார்.

''பா.ம.க உருவாக்கப்பட்டு 33 ஆண்டுகள் ஆகிவிட்டன. 40 ஆண்டுக்கால இட ஒதுக்கீட்டுப் போராட்டத்திலும் ஓரளவுக்கு வெற்றிபெற்றிருக்கிறோம். அதேவேளையில், கட்சி ஆரம்பிக்கப்பட்டது, தமிழகத்திலுள்ள அனைத்துப் பாட்டாளி மக்களின் நலனுக்காகத்தான். ஆனால், கடந்த காலங்களில் அரசியல் சூழ்நிலைகளின் காரணமாக, மாறி மாறி கூட்டணி வைக்கும் நிலை உருவாகிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் இரண்டு கட்சிகளுக்கும் நாங்கள் தேவைப்பட்டோம் என்பதுதான் உண்மை.

ராமதாஸ், ஜி.கே.மணி, அன்புமணி
ராமதாஸ், ஜி.கே.மணி, அன்புமணி

இனியும் காலம் தாழ்த்த முடியாது, கண்டிப்பாக தமிழகத்தில் பா.ம.க-வின் ஆட்சியைக் கொண்டுவந்தே தீர வேண்டும் என முடிவெடுத்துவிட்டார் ஐயா ராமதாஸ். இதற்காகப் பல்வேறு திட்டங்களை வகுத்திருக்கிறார். முதற்கட்டமாக, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க சார்பில் வெற்றிபெறும் நிர்வாகிகளின் மீது தனிக்கவனம் செலுத்தவிருக்கிறார். அவர்களைவைத்து மக்கள் பணிகளை மிகச்சிறப்பாக எடுத்துச் செல்லும் பட்சத்தில் சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் மக்களை நாம் எளிமையாக அணுக முடியும். மற்ற நிர்வாகிகளின் பொறுப்பில் விடாமல் ஐயாவே நேரடியாக அவர்களுடன் தொடர்பில் இருந்து அவர்களைக் கண்காணிக்கப்போகிறார். அடுத்ததாக, பா.ம.க-வில் வன்னியர் அல்லாத மற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்கள், மாநிலப் பொறுப்புகளிலும் இதர நிர்வாகிகளாகவும் இருந்தபோதும் இது வன்னியர்களுக்கான கட்சி, அவர்கள் பொறுப்புக்கு வந்தால் மற்ற சமூகங்களை ஒதுக்கிவிடுவார்கள் என்கிற தவறான பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

`உள்ளாட்சிக்கு உரம் போடும் பா.ம.க!’ - அ.தி.மு.க-வுடனான மோதல் பின்னணி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதை உடைக்க வேண்டுமென்றால் மாவட்ட அளவில், ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பொறுப்பு கொடுத்து அனைத்து சமூகங்களுக்கான கட்சி பா.ம.க என்கிற நம்பிக்கையை உருவாக்க வேண்டும். அதற்கான வேலைகளும் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டன. பல்வேறு மாவட்டங்களில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுவருகிறார்கள். அடுத்துவரும், நகர்புற உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் கூட்டணி வைத்தாலும்கூட சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக தனியாகத்தான் போட்டியிடுவோம். கர்நாடகாவைப்போல, குறைவான எம்.எல்.ஏ-க்களைப் பெற்றாலும் நாங்கள்தான் 2026-ல் ஆட்சி அமைப்போம்'' என்கிறார் உறுதியாக.

ராமதாஸ், அன்புமணி
ராமதாஸ், அன்புமணி
விகடன்

பா.ம.க-வின் இந்த முயற்சி எந்த அளவுக்குச் சாத்தியப்படும் என அரசியல் விமர்சகர்களிடம் பேசியபோது,

`` 2016 தேர்தலில் பா.ம.க தனித்து நின்றது உண்மையிலேயே துணிச்சலான முடிவுதான். மக்கள் மத்தியில் அவர்கள்மீது ஓரளவுக்கு நம்பிக்கை பிறந்தது. படித்த இளைஞர்கள், பெண்கள் அன்புமணியை கவனித்தார்கள். ஆனால், அதற்கடுத்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக-வுடன் கூட்டணி வைத்தபோதே அந்த நம்பிக்கை தகர்ந்துவிட்டது. 2026 தேர்தல் இலக்கு என்றால் குறைந்தபட்சம் 2021 சட்டமன்றத் தேர்தலிலாவது அவர்கள் தனித்து நின்றிருக்கலாம். ஆனால், அதையும் செய்யவில்லை. அடுத்ததாக, 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வன்னிய மக்களுக்கான நியாயமாக கோரிக்கையாக இருந்தாலும்கூட, பொதுவெளியில் மற்ற சமூக மக்களிடத்தில் அந்த நியாயம் எந்த அளவுக்குப் புரியவைக்கப்பட்டிருக்கிறது? கடைசி நேரத்தில் எடப்பாடி பழனிசாமியை நிர்பந்தப்படுத்தி பெறப்பட்டதாகவே புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. அதை மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. அதேபோல, பரந்துபட்ட மக்களின் ஆதரவைப் பெற வேண்டுமென்றால், இனிவரும் ஐந்தாண்டுகள் பா.ம.க கடுமையாக உழைக்க வேண்டும். முதன்மையாக, தனித்துப் போட்டி என்கிற முடிவில் முதலில் அவர்கள் உறுதியாக இருக்க வேண்டும்'' என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு