Published:Updated:

`அண்ணி' அரசியல்... இணையும் கரங்கள்... தகிக்கும் நாமக்கல் தி.மு.க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காந்திசெல்வன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், பார் இளங்கோவன்
காந்திசெல்வன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், பார் இளங்கோவன்

அடுத்தடுத்து நகர்த்தப்படும் அரசியல் சதுரங்கக் காய்களால், நாமக்கல் தி.மு.க-வில் பரபரப்பு எகிறியுள்ளது.

பிரசாந்த் கிஷோரின் வரவு, அடுத்தடுத்து நடைபெறும் மாவட்டச் செயலாளர் மாற்றங்கள் எனப் பரபரத்துக்கிடக்கிறது அறிவாலயம். தி.மு.க உட்கட்சித் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், சீனியர் தலைவர்களுக்கு `சலாம்' வைக்கவே ஒருகூட்டம் அறிவாலயத்தில் கூடுகிறது. ஒருமாலை நேரத்தில் நாமும் கூட்டத்தோடு கூட்டமாக அறிவாலயத்தில் அமர்ந்தோம்.

நாமக்கல்
நாமக்கல்

நாமக்கல் கிழக்கு மாவட்டத்திலிருந்து வந்திருந்த உடன்பிறப்புகள் சிலர், சமீபத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர் மாற்றம் குறித்து நம்மிடம் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர். ``நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக கே.ஆர்.என்.ராஜேஷ் குமார் நியமிக்கப்பட்டிருப்பது, மாவட்டத்திற்குள் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஶ்ரீராம் சிட் ஃபண்ட்ஸ் நிறுவனத்தில் 3,000 ரூபாய் சம்பளத்தில் தன் வாழ்க்கையைத் தொடங்கிய ராஜேஷ் குமாரின் அரசியல் அத்தியாயம் பெரியது.

`அவருடன் பகையா... நடிகர் விஜய்யை நான் நேசிக்கிறேன்!'- கோவையில் பொன்னார்

`அண்ணி' அரசியல்

தி.மு.க பொதுச் செயலாளர், பேராசிரியர் அன்பழகனுக்கு ராஜேஷ் குமாரின் தந்தை மிக நெருங்கிய நண்பர். இந்த முகவரியில் கட்சிக்குள் அடியெடுத்துவைத்த ராஜேஷ்குமார், இளைஞரணிப் பொறுப்பு தருமாறு கோரிக்கை வைத்தார். அப்போது மத்திய இணை அமைச்சராக இருந்த காந்திசெல்வன், இந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. மாவட்டச் செயலாளராக இருந்த பார் இளங்கோவன்தான், பேராசிரியரின் பரிந்துரை என அழுத்தம்கொடுத்து மாவட்ட இளைஞரணியில் ராஜேஷ் குமாருக்கு பொறுப்பு வாங்கிக்கொடுத்தார்.

உதயநிதி ஸ்டாலினுடன் கே.ஆர்.என்.ராஜேஷ் குமார்
உதயநிதி ஸ்டாலினுடன் கே.ஆர்.என்.ராஜேஷ் குமார்

தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா, அவ்வப்போது நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர், நரசிம்மர், தத்தகிரி முருகன் கோயிலுக்கு வருவது வழக்கம். அப்படி வரும் பொழுதெல்லாம், துர்காவுக்குத் தேவையான உதவிகளை ராஜேஷ்குமார் தான் முன்னின்று செய்துகொடுப்பார். `அண்ணி, அண்ணி' என அவர் உருகுவதைப் பார்த்து, துர்காவே பல சமயங்களில் நெகிழ்ந்து போய்விடுவார். நாமக்கல் மாவட்டத்தில் காந்திசெல்வன், பார் இளங்கோவனை மீறி வளர்வது கடினம் என்பதால், துர்கா மூலமாக தன் அரசியல் அத்தியாயத்தை ராஜேஷ் குமார் கச்சிதமாக எழுதத் தொடங்கினார். அவர் எதிர்பார்த்தது போலவே, மாவட்ட இளைஞரணி பொறுப்பும் அவரைத் தேடிவந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தூக்கிவிட்ட நாமக்கல் நிறுவனம்

துர்கா மூலமாக ஸ்டாலினுக்கு அறிமுகமான ராஜேஷ்குமார், அவர் மருமகன் சபரீசனுக்கும் நெருக்கமானார். 1996-2001 காலகட்டத்தில், சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திரகுமாரி மூலமாக, நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு சர்ச்சைக்குரிய நிறுவனம் ஸ்டாலின் குடும்பத்துக்கு அறிமுகமானது. இடையில் தொடர்பற்றுப் போயிருந்த இந்த இணக்கம், ராஜேஷ் குமாரால் மீண்டும் புத்துயிர்பெற்றது. அந்த நிறுவனத்துக்கும் ஸ்டாலின் குடும்பத்திற்கும் ஒருபாலமாக ராஜேஷ்குமார் மாறியவுடன், கட்சியில் அவரது ஏற்றம் கிடுகிடுவென உயர்ந்தது.

காந்திசெல்வன்
காந்திசெல்வன்

16 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளராக உள்ள காந்திசெல்வன் மீது ஏகப்பட்ட புகார்கள் உள்ளன. கட்சிக்காரர்களுக்கு எதுவும் செய்வதில்லை, கட்சியையும் வளர்ப்பதில்லை, அமைச்சர் தங்கமணியோடு ஏற்படுத்திக்கொண்ட நெருக்கம் என பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். இதையெல்லாம் மனதில் வைத்துதான், காந்திசெல்வன் வசமிருந்த நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்து, அவரது எதிர்த்தரப்பான கழக தேர்தல் பணிக்குழு உறுப்பினராக இருந்த பார் இளங்கோவனிடம் அளித்தனர்.

இரண்டே ஆண்டுகளில் கட்சித் தலைமையைச் சரிகட்டிய காந்திசெல்வன், மாவட்டச் செயலாளராக மீண்டும் வந்தமர்ந்தார். இதைத் தொடர்ந்து, மாவட்ட தி.மு.க-வில் கோஷ்டிப் பூசல் உச்சத்தைத் தொட்டது. தற்போது, துர்கா ஸ்டாலின் ஆதரவாளரான கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் வசம் மாவட்டச் செயலாளர் பொறுப்பை ஒப்படைத்துள்ளனர்.

`ராஜேந்திர பாலாஜி மட்டும்தான் மதிப்பதில்லை!'- கொடிக் கம்ப நிகழ்ச்சியில் கொந்தளித்த பிரேமலதா

பலே ப்ளான்!

நாமக்கல் கிழக்கு மாவட்டத்தின் வசம் ராசிபுரம், சேந்தமங்களம், நாமக்கல் தொகுதிகள் வருகின்றன. இதில் ராசிபுரம், சேந்தமங்களம் தொகுதிகள் பட்டியலின மக்களுக்கு என ஒதுக்கப்பட்டது. நாட்டுக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவரான ராஜேஷ்குமார், இவ்விரு தொகுதிகளிலும் போட்டியிட முடியாது. மீதமிருக்கும் நாமக்கல் தொகுதியை பார் இளங்கோவன், காந்திசெல்வன் இருவரும் குறிவைத்துள்ளனர். இங்கு போட்டியிட்டால் கடும் உள்ளடி வேலையைச் சந்திக்க வேண்டியதிருக்கும். ஆக, தன் கட்டுப்பாட்டிற்குள் வரும் மூன்று தொகுதிகளிலும் போட்டியிட முடியாத சூழல்தான் ராஜேஷ் குமாருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதற்காக, ஒருமாற்று ஏற்பாட்டைத் திட்டமிட்டுள்ளார்.

பார் இளங்கோவன்
பார் இளங்கோவன்

தற்போது, நாமக்கல் மேற்கு மாவட்டம் வசம் பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய தொகுதிகள் வருகின்றன. பரமத்தி வேலூர் தி.மு.க எம்.எல்.ஏ-வான கே.எஸ்.மூர்த்தி, மீண்டும் இத்தொகுதியில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார். அவர், இத்தொகுதியை விட்டுத்தர மாட்டார். குமாரபாளையம் எம்.எல்.ஏ-வான அமைச்சர் தங்கமணியை எதிர்த்து ஜெயிப்பது கடினம். சுலபமாக இருப்பது திருச்செங்கோடு தொகுதி மட்டும்தான்.

நாமக்கல் கிழக்கு, மேற்கு என்பதை தெற்கு, வடக்கு என மாற்றிவிட்டால், மாவட்ட அமைப்பில் தொகுதிகள் மாற்றியமைக்கப்படும். இப்படி மாற்றப்படும் நாமக்கல் தெற்கு மாவட்டம் வசம் திருச்செங்கோடு தொகுதியைக் கொண்டுவந்து, அதில் போட்டியிடுவதற்கு ராஜேஷ் குமார் திட்டமிட்டுள்ளார். இதற்கான வேலையையும் சபரீசன் மூலமாக ஆரம்பித்துவிட்டார். இத்திட்டம் மட்டும் நிறைவேறிவிட்டால், காந்திசெல்வன், பார் இளங்கோவனின் அரசியல் எதிர்காலம் அஸ்தமனமாகிவிடும்.

இணையும் கரங்கள்

இத்திட்டத்தை மோப்பம்பிடித்த காந்திசெல்வனும் பார் இளங்கோவனும், ராஜேஷ் குமாருக்கு எதிராகக் கரம் கோத்துள்ளனர். காந்திசெல்வன் மீது ஆயிரம் விமர்சனம் இருக்கிறது. தலைவர் குடும்பத்துக்கு உதவிகள் செய்து கட்சியில் வளர்ந்தவரை மாவட்டச் செயலாளராக ஏற்றுக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை. காந்திசெல்வனும் பார் இளங்கோவனும் இணைந்து செயல்படும் பட்சத்தில், நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் பல வெடிகள் வெடிக்கக் காத்திருக்கிறது" என்றனர்.

`ரஜினி குறித்த கேள்வி; நழுவிய ராமதாஸ்!' -பா.ம.க, தே.மு.தி.க-வைத் தயார்படுத்துகிறதா டெல்லி?

இதுகுறித்து, ராஜேஷ்குமார் தரப்பில் பேசினோம். ``16 வருடங்கள் இம்மாவட்டத்தைக் கட்டியாண்ட காந்திசெல்வனால், 2016 சட்டமன்றத் தேர்தலில் பரமத்தி வேலூர் தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளில் வெற்றிபெற்றுத் தர முடியவில்லை. பார் இளங்கோவனும் காந்திசெல்வனும் மட்டுமே நாமக்கல் தி.மு.க கிடையாது. இளைஞர்களுக்கும் பொறுப்பு அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான், திருச்சியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாமக்கல்லில் ராஜேஷ் குமார் ஆகியோருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. கட்சியில் படிப்படியாக முன்னேறி மாவட்ட பொறுப்புக்கு வந்தவர் ராஜேஷ்குமார்.

கே.ஆர்.என்.ராஜேஷ் குமார்
கே.ஆர்.என்.ராஜேஷ் குமார்

தங்களது அதிகாரத்தைப் பறிகொடுத்தவர்கள், வாய்க்குவந்ததை உளறிக் கொட்டுவதற்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. மாவட்ட பொறுப்பில் இருந்து காந்திசெல்வனை நீக்குவதற்கு முன்பு, பலமுறை யோசித்துதான் கட்சித் தலைமை முடிவெடுத்தது. மாவட்ட அமைப்பை மாற்றி அமைப்பதுகுறித்து தலைமைதான் முடிவுசெய்யும். இதில், மாவட்டச் செயலாளர் என்ன செய்ய முடியும்? இப்படி மாற்றி அமைத்துவிட்டால், நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ்.மூர்த்தி விட்டுவிடுவாரா?" என்றனர்.

இந்த மாவட்டச் செயலாளர் மாற்றம், நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பது மட்டும் உண்மை. ஏற்கெனவே, நாமக்கல் தி.மு.க முழுவதும் அமைச்சர் தங்கமணியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக வந்த தகவலால்தான், இந்த மாவட்டச் செயலாளர் மாற்றத்தையே தி.மு.க தலைமை செய்ததாம். கே.ஆர்.என். ராஜேஷ்குமாரும் அமைச்சர் தங்கமணி பக்கம் சென்றுவிடுவாரோ... என்கிற பரபரப்பு நாமக்கல் தி.மு.க-வில் எழுந்துள்ளது. எந்தப் பக்கம் பிரச்னை வெடிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு