Published:Updated:

'நாம் தமிழர் கட்சி இனி என்னவாகும்?' - நிர்வாகிகள் நீக்கம்; தம்பிகள் கலக்கம்!

சீமான் - ராஜீவ் காந்தி - கல்யாணசுந்தரம்
சீமான் - ராஜீவ் காந்தி - கல்யாணசுந்தரம்

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நிர்வாகிகளான கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி ஆகியோர் விலகியிருப்பது, அந்தக் கட்சியின் தம்பிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது, நாம் தமிழர் கட்சியின் போக்கில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

``என் சாவை எதிர்நோக்கிக் காத்திருந்தவர்கள் கல்யாணசுந்தரமும் ராஜிவ் காந்தியும்...’’' என்ற சீமானின் காத்திரமான குற்றச்சாட்டு நாம் தமிழர் கட்சியினரையும் தாண்டி தமிழக அரசியல் வட்டாரத்தை அதிரவைத்திருக்கிறது.

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர் கல்யாணசுந்தரம், வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ஆகியோர் தொடர்ந்து கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு வந்ததாகக் கூறி ஆவேசப் பேட்டியளித்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான்.

சீமான்
சீமான்

கடந்த சில மாதங்களாகக் கட்சிக்குள் குமுறலாக இருந்துவந்த இந்தவிவகாரம், அண்மையில் இருதரப்பினரின் அடுத்தடுத்த பேட்டிகளால் வெடித்துச் சிதறிக்கொண்டிருக்கிறது. சீமானின் அதிரடி நேர்காணலை அடுத்து, `நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக' வெளிப்படையாக அறிவித்திருக்கிறார் ராஜீவ் காந்தி. கட்சித் தலைமையோடு தனக்கு ஏற்பட்ட முரண்பாடுகள் குறித்து கல்யாணசுந்தரமும் வெளிப்படையாகப் பேசிவருகிறார்.

என்னதான் நடக்கிறது, நாம் தமிழர் கட்சியில்?

தேசியத் தலைவர் பிரபாகரனைத் தலைவராகக்கொண்டு, கடந்த 10 ஆண்டுகளாக `தமிழ்த் தேசியம்' பேசிவரும் `நாம் தமிழர் கட்சி'க்கு இந்த விலகல் புதிதல்ல... கடந்த காலங்களில் கட்சியின் மூத்த தலைவர்களாக வலம்வந்த பலரும்கூட, `தலைமையால் ஏன் ஒதுக்கப்படுகிறோம்...' என்ற கேள்விக்கு விடை தெரியாமலேயே விலகிச் சென்ற வரலாறு அந்தக் கட்சிக்கு உண்டு.

நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி

அப்போதெல்லாம், `கட்சியில், தனக்குப் போட்டியாக யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்து களையெடுப்பார் அண்ணன் சீமான்' என்ற விமர்சனம் மட்டுமே வெளிவரும். மற்றபடி கட்சித் தரப்பிலிருந்து `விலக்கப்பட்டதற்கான' எந்த விளக்கமும் கொடுக்கப்படாது. ஆனால், இந்தமுறை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான அண்ணன் சீமானே, தன் தம்பிகளின் துரோகங்கள் என்று வெளிப்படையாகப் பேட்டி கொடுத்திருப்பதுதான் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

``என் வாழ்க்கையிலேயே இப்படியொரு துரோகத்தை, நயவஞ்சகத்தைக் கண்டதில்லை. எதிரிகளால் வெட்டப்பட்டு சாவேனே தவிர, துரோகிகளின் சிறு கீறலைக்கூட ஏற்க முடியாது. சவால் விடுகிறேன்... கட்சியை இரண்டாக உடைத்துப்பாருங்கள்'' என்பது போன்ற வன்மையான, வலி நிறைந்த வார்த்தைகளால் நேர்காணல் முழுக்க வெடித்திருக்கிறார் சீமான். இந்த உணர்ச்சிமிகு நேர்காணலைப் பார்த்த அவருடைய தம்பிகள் கலக்கமடைந்துள்ளனர்.

சீமான்
சீமான்

1993-ம் ஆண்டு, `தலைவரைக் கொல்ல சதி செய்தார்' என்ற துரோகிப் பட்டம் சுமத்தப்பட்டு, தி.மு.க-விலிருந்து கருணாநிதியால் வெளியேற்றப்பட்டவர் இன்றைய ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ. தமிழக அரசியல் களத்தில், கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்படியான ஒரு குற்றச்சாட்டு நாம் தமிழர் கட்சியிலிருந்து வெளிவந்திருக்கிறது.

'ஈழ விடுதலைக்கான இறுதிப்போரில், விடுதலைப்புலிகள் இயக்கத்தை வேரடி மண்ணோடு பிடுங்கியெறிந்த சிங்கள எதிரிகளுக்குத் துணைபோனவர்கள் அன்றைய மத்திய ஆட்சிப் பொறுப்பிலிருந்த காங்கிரஸ்-தி.மு.க-வினர்’ என்ற ஆற்றாமையிலும் கோபத்திலும் உருவான இயக்கம் நாம் தமிழர் கட்சி.

தமிழினத்துக்கு எதிரான துரோகங்களால் துயரமாகிப்போன ஈழப் போராட்டங்கள் குறித்து, மேடைதோறும் நரம்பு புடைக்க சீமான் கொந்தளித்த உணர்ச்சிமிகு பேச்சுகள், இளைஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. திராவிட அரசியலில் ஊறிப்போயிருந்த தமிழர்களை `தமிழ்த் தேசிய' உணர்வுகளால் தட்டியெழுப்பியதுதான் சீமானின் ஆகப்பெரும் சாதனை.

நாம் தமிழர் கட்சிக்கான இந்தத் தனித்தன்மையை இழக்க விரும்பாத சீமான், தேர்தல் களத்திலும் துணிச்சலுடன் தனித்துப் போட்டியிட்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 'கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டு, கூட்டணி தேவையில்லை' என்ற ஒற்றைச் சிந்தனையில், இன்றளவிலும் உறுதியோடிருந்து களமாடிவருகிறது கட்சி.

சீமான் - பிரபாகரன்
சீமான் - பிரபாகரன்

தமிழக அரசியலில் ஆழ வேரூன்றியிருக்கும் திராவிட சித்தாந்தத்தை வீழ்த்தும் ஆயுதமாக தமிழ்த் தேசியத்தை தூக்கிப்பிடிக்கும் நாம் தமிழர் கட்சியின் கடந்த பத்தாண்டுகால வளர்ச்சி, தமிழகத்தின் இரு பெரும் திராவிடக் கட்சிகளையே மிரளவைத்திருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால், சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியின் அரசியல் செயல்பாடுகளில் உறுதித்தன்மை குறைந்திருப்பதாகவும், ஆளும்கட்சிக்கு ஆதரவான, சார்புநிலை அரசியலை சீமான் விரும்புவதாகவும் கட்சிக்குள்ளிருந்தே பேச்சுகள் கிளம்புகின்றன.

இது குறித்துப் பேசும் சிலர், ``கொள்கை, கோட்பாடுகள் பற்றி தன் தம்பிகளோடு மணிக்கணக்கில் அளவளாவுகிற அண்ணன் சீமானை இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை. அவரைச் சுற்றியிருப்பவர்கள் எல்லோருமே அவரைப் புகழ் பாடுகிறவர்கள் மட்டும்தான். அண்ணனும் அதைத்தான் விரும்புகிறார். இந்த பலவீனத்தைப் புரிந்துகொண்ட இவர்களும் அண்ணனை எப்போதும் துதிபாடுவதோடு, வெளியுலகில் தங்கள் காரியங்களைச் சாதிப்பதற்கு வசதியாக அண்ணன் சீமான் பெயரைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

கல்யாணசுந்தரம்
கல்யாணசுந்தரம்

அண்ணன் சீமான், இயக்கத்தில் எண்ணற்ற தம்பிகளை வளர்த்துவிட்டவர். ஆனாலும்கூட அவருக்குக் கல்யாணசுந்தரம் மீது தனிப்பட்ட பாசம் உண்டு. குடும்ப விஷயங்களையும்கூட அண்ணனோடு பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு இருவருமே நல்ல நட்பில்தான் இருந்தனர். ஆனால், அவரைச் சுற்றியிருப்பவர்கள்தான், கட்சியில் கொள்கைப் பிடிப்புடன் இருப்பவர்களை அண்ணனை நெருங்கவிடாமல் பார்த்துக்கொள்கின்றனர்.

இதற்காக, இவர்கள் செய்கிற தில்லுமுல்லு வேலைகளும் அதிரடியானவை. `அண்ணனை நெருங்க முடியவில்லையே...’ என்ற ஆதங்கத்தில், மனம்விட்டுப் பேசும் வார்த்தைகளைக்கூட ஆடியோ பதிவுகளாக்கி, அப்படியே அண்ணனின் காதில் போட்டுவிடுகின்றனர். `எங்கள்மீது என்ன தவறு என்ற விளக்கத்தை சீமானிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதற்குக்கூட வாய்ப்பு கிடைக்கவில்லை' என்பதுதான் கடந்த காலங்களில் கட்சியைவிட்டுச் சென்றவர்களின் குமுறலாக இருந்தது. இப்போதும் அதே மனத்தாங்கலோடுதான் தம்பிகள் இருவரையும் அண்ணன் பிரிந்திருக்கிறார். இப்படியொரு பிரிவு வருமென்று யாருமே நினைக்கவில்லை'' என்கின்றனர் வருத்தத்துடன்.

சீமான் ஆதரவாளர்களோ, ``தன் தம்பிகளே இப்படி துரோகிகளாக மாறிவிட்டார்களே என்று அண்ணன் நேர்காணலில் வருத்தத்தோடு கூறியிருந்த விஷயத்தை மட்டும்தான் மக்கள் அறிவார்கள். சொல்லப்படாத துரோகங்கள் ஆயிரம் அவர் மனதுக்குள் அமிழ்ந்துகிடக்கின்றன.

கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி இருவரும் அண்ணனைப் பற்றி விமர்சித்திருந்த உண்மைகளையெல்லாம் அண்ணன் இதுவரை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவில்லை. குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக சீமான் செயல்படுகிறார் என்று குற்றச்சாட்டும் இவர்களே, தி.மு.க-வோடு உறவில் இருப்பவர்கள்தான். அதை மறைக்கத்தான் அண்ணன்மீது குறை சொல்கிறார்கள்.

ராஜீவ் காந்தி
ராஜீவ் காந்தி

கட்சியின் பெயரைப் பயன்படுத்தி, கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள், கூட்டம் கைதட்டுவதால் தங்களையே தலைவனாக வரித்துக்கொண்டவர்களைப் பற்றி அண்ணன் மனக்காயம் அடைந்ததென்னவோ உண்மைதான். ஆனால், உண்மையில் இதற்காக வருந்த வேண்டியவர்கள் கல்யாணசுந்தரமும் ராஜீவ் காந்தியும்தான். ஏனெனில், சொந்த அண்ணனைவிடவும் ஒருபடி மேலாக பார்த்துப் பார்த்து வளர்த்த அண்ணனையே எதிர்க்கத் துணிந்து, இன்றைக்கு நிராதரவாகிவிட்டார்கள்'' என்கின்றனர் கோபத்தோடு.

உள்ளூர் அரசியல் மேடைகள் மட்டுமல்லாமல், வெளிநாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் தொலைக்காட்சி விவாத மேடைகளிலும் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை வீரியமாக முழங்கிவந்தவர்கள் அந்தக் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்களான கல்யாணசுந்தரமும் ராஜீவ் காந்தியும். சீமானுக்குப் பிறகு, கட்சியில் அடையாளம் காட்டக்கூடிய அளவுக்குத் தங்களை முன்னிறுத்திக்கொண்டதே இப்போது இவர்களுக்குச் சிக்கலாகியிருக்கிறது என்கின்றனர் விஷயமறிந்தவர்கள்.

சீமானின் தொகுதி மாற்றம்... `நாம் தமிழர்' கட்சியின் தேர்தல் கூட்டணிக் கணக்கு! #TNElection2021

இவர்களது வெளியேற்றம் கட்சியையே பிளவுப்படுத்தும் அல்லது பாதிக்கும் என்பதுவரையிலாக தம்பிகளிடையே பலதரப்பட்ட விவாதங்கள் சூடுபறக்கின்றன. இந்த நிலையில், `அரசியல்ரீதியாக, நாம் தமிழர் கட்சிக்கு இந்த விவகாரம் பாதிப்பை ஏற்படுத்துமா?' என்ற கேள்விக்கு விடை கேட்டு அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம்.

``தமிழக அரசியல் களத்தில், நாம் தமிழர் கட்சி என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதே 2021 சட்டமன்றத் தேர்தலில்தான் தெளிவாகத் தெரியவரும். இதற்கும்கூட அன்றைய அரசியல் சூழல் மற்றும் சீமானின் தேர்தல் வியூகம் உள்ளிட்டவை காரணங்களாக இருக்கக்கூடும்.

சீமான்
சீமான்

இதற்கிடையே, இப்போது அந்தக் கட்சியிலிருந்து கல்யாணசுந்தரமும் ராஜீவ் காந்தியும் விலகியிருப்பதென்பது அவர்களுக்கு பெரும் இழப்புதான். ஏற்கெனவே அய்யநாதன் போன்றோரும் கட்சியிலிருந்து விலகிச் சென்றிருக்கின்றனர். ஆனால், அது நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவிகிதம் என்பது மிகக்குறைவாக இருந்த காலகட்டம். இப்போது குறிப்பிடும்படியான சதவிகிதத்தில் நாம் தமிழர் கட்சியும் வாக்குகளைக் கவர்ந்துவருகிறது.

இந்தக் காலகட்டத்தில், கட்சியின் துடிப்பான இளைஞர்களை நாம் தமிழர் கட்சி இழக்கக் கூடாது. கட்சியின் கொள்கைகளை நிதானமாகவும் தெளிவாகவும் பொது அரங்கில் விவாதிக்கக்கூடிய இளைஞர்களாக வலம்வந்தவர்கள் கல்யாணசுந்தரமும் ராஜீவ் காந்தியும். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தம்பிகள் பலரும் இணையதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறார்கள் என்றாலும்கூட, பொது விவாத மேடைகளில் அவர்களின் பங்களிப்புகள் எந்த அளவுக்குப் பயனுள்ளவையாக, பொறுப்புணர்வுமிக்கவையாக இருந்தன என்பது தெரியாது.

ரவீந்திரன் துரைசாமி
ரவீந்திரன் துரைசாமி

ஆக, இம்மாதிரியான சூழலில், கட்சியின் நிர்வாகிகளாகவும் முகமறிந்த பேச்சாளர்களாகவும் இருந்துவரும் இருவர் கட்சியிலிருந்து வெளியேறியிருப்பது, நாம் தமிழர் கட்சிக்கு இழப்புதான். அதேசமயம் இதனால் கட்சி பிளவுபடும் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது!" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு