Published:Updated:

தி.மு.க-வுக்கு பணியாற்ற பிரசாந்த் கிஷோர் அணிக்கு மாதம் எவ்வளவு? பின்னணி விவரங்கள்

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர் ( twitter )

ஐபேக் நிறுவனத்தின் பெயரில் பிரசாந்த் கிஷோர் செயல்பட்டாலும், அந்த நிறுவனத்தில் எந்தப் பொறுப்பிலும் கிஷோர் நேரடியாக இல்லை. தனக்கு வேண்டிய சில நண்பர்கள் மூலமே இந்த நிறுவனத்தை நடத்திவருகிறார்.

``தமிழகம் இழந்த புகழை மீட்கவும், நம் குறிக்கோள் வெற்றி பெறவும், அதற்கான திட்டமிடலில் உதவிடவும், திறமைமிக்க , ஒத்தகருத்துடைய பலதமிழக இளைஞர்கள் ஐபேக் அமைப்பின் கீழ் நம்முடன் 2021-ம் தேர்தலில் இணைந்து பணியாற்றிட இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்ற தகவலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்திருந்தார். உடனே, அண்ணாவின் பேச்சினாலும், கருணாநிதியின் கடிதத்தினாலும் வளர்ந்த தி.மு.க இயக்கத்திற்கு இந்த கார்ப்பரேட் கலாசாரம் தேவையா? என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

ஐபேக் நிறுவனம் என்று ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தாலும் அவர் சொல்லாத மற்றொரு விஷயம் ஐபேக் நிறுவனத்தின் சார்பில் இந்தப் பணிகளை மேற்கொள்ளப் போவது தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர். 2014-ம் ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்தியா முழுவதும் உற்றுநோக்கிய நபராக மாறிய பிரசாந்த் கிஷோர் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு தி.மு.கவுக்குப் பணியாற்றப் போவதை அந்தக் கட்சி தலைமை அறிவித்ததும், அடுத்த ரியாக்ஷஷன் அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளிதழான நமது அம்மாவில் வெளிப்பட்டது. `தி.மு.க வின் தலைமைக்கு அறிவு முலாம் பூச பீகாரிலிருந்து இரவல் மூளையை இறக்குமதி செய்திருக்கும் ஐ.பேக் நிறுவனம்” என்று விமர்சனம் செய்துள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால் இதே இறக்குமதி மூளைக்குத்தான் ஆறுமாதமாக அ.தி.மு.க-வும் வெயிட்டிங்கில் இருந்தது. ஏன்... இந்த பீகார் இறக்குமதி மூளைதான் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு அ.தி.மு.கவுக்குப் பணியாற்ற பேச்சுவார்த்தையும் நடந்தது. ஐபேக் நிறுவனம் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-வுக்கு உள்ள செல்வாக்கு பற்றியும் சர்வே செய்தது. ஆனால் அ.தி.மு.க வின் அணுகுமுறையில் ஏற்பட்ட குழப்பத்தினால் கட்சிகள் அணிமாறுவது போல அணிமாறியது ஐ.பேக் நிறுவனம். கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்குச் சில காலம் வேலையும் செய்தது. ஏன்... கமல் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் பலமுறை ஆலோசனையும் நடத்தினார் பிரசாந்த் கிஷோர். அப்போது தி.மு.கவுக்கு ஓ.எம்.ஜி என்கிற குழுமம் பணியாற்றி வந்தது. அந்தக் குழுவின் தலைவராக சுனில் என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தார். ஆனால், கடந்த நவம்பர் மாதம் திடீரென சுனில் தனது பதவியை ராஜினாமா செய்ய, அதற்குப் பிறகுதான் பிரசாந்த் கிஷோர் தி.மு.கவுக்குப் பணியாற்றப் போகும் விவரம் வெளியே தெரிந்தது. இப்போது அதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் ஸ்டாலின்.

மோடியுடன் பிரசாந்த் கிஷோர்
மோடியுடன் பிரசாந்த் கிஷோர்

யார் இந்த கிஷோர்?

பிரசாந்த் கிஷோரின் பூர்வீகம் பீகார் மாநிலம். வசதியான குடும்பத்தில் பிறந்த இவர் வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனி ஒன்றில் ஆரம்பத்தில் பணியாற்றி வந்தார். அந்தத் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுகாதார நிறுவனத்தில் இவர் பங்கெடுக்க ஆரம்பித்தார். ஆப்பிரிக்கா நாடுகளில் ஐ.நா பல சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தி வந்தது. அந்தப் பணிகளை ஒருங்கிணைக்கும் நபர்களில் கிஷோரும் ஒருவராகச் செயல்பட்டு வந்தார். அப்போது மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடந்துவந்தது. அரசியல் ஆசை கிஷோருக்கு நீண்ட நாள்களாகவே இருக்க, அதற்கு சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தார்.

அரசியலில் பிரசாந்த் என்ட்ரியாக மறைமுகமாக ராகுல் காந்தியும் உதவினார் என்பதுதான் வேடிக்கை. ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் அரசு மருத்துமவனை ஒன்றைக் கட்டினார். அந்த மருத்துமனைப் பணிகளை ஒருங்கிணைக்கவும் மருத்துவமனைச் செயல்பாட்டைப் பார்த்துக்கொள்ளவும் ராகுல் காந்தியால் நியமிக்கப்படுகிறார் கிஷோர். ஐ.நாவிலிருந்து அமேதிக்குள் என்ட்ரியானார் கிஷோர். ஒருகட்டத்தில் ராகுலுடன் ஏற்பட்ட மோதலால் அங்கிருந்து வெளியேறிய கிஷோர், குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியைச் சந்திக்கிறார். ராகுலிடம் பணியாற்றியவன் என்ற அடிப்படையிலே மோடியின் சந்திப்பை நடத்துகிறார் கிஷோர். அப்போதுதான் வெளிநாடுகளில் தேர்தல் யுக்திக்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் பணிகளைப் பற்றி மோடிக்கு எடுத்துச் சொல்லியுள்ளார். அது மோடி பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்பட்ட நேரம்.

சுனில் -ஸ்டாலின்
சுனில் -ஸ்டாலின்

மோடி இந்தவிவரங்களை பி.ஜே.பி தலைமைக்கு எடுத்துச் சொல்ல, உடனடியாக தலைமையும் இந்த ஐடியாவுக்கு ஓ.கே சொல்லியது. அப்போது அமைக்கப்பட்ட நிறுவனம்தான் சி.ஏ.ஜி. இந்த நிறுவனத்தின் இயக்குநராக பிரசாந்த் கிஷோரும் இணை இயக்குநராக இதே தி.மு.கவுக்குப் பணியாற்றிய ஓ.எம்.ஜி குழுவின் தலைவர் சுனிலும் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்குக் கீழ் ஐம்பதுக்கும் மேற்பட்ட இளைஞர் படையும் உருவாக்கப்பட்டது. மோடியின் விளம்பரம் முதல் அவர் அணியும் உடை வரை அனைத்தையும் செயல்திட்டப்படுத்தியது இந்த சி.ஏ.ஜி நிறுவனம்.

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி வெற்றி பெற்றால் தனக்கு பிரதமர் அலுவலகத்திலே ஓரு பதவியைப் பெற்றுவிடும் திட்டத்திலிருந்தார் கிஷோர். ஆனால், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு கட்சி, சி.ஏ.ஜி-யிடம் தேர்தல் செலவுகள் குறித்து கணக்கு கேட்டது. அப்போது பி.ஜே.பி-யின் பொருளாளராக இருந்த பியூஷ் கோயல், பிரசாந்த் கிஷோரிடம் கணக்கு கேட்க, சரியான கணக்கு கொடுக்கமுடியாமல் திணறியிருக்கிறார் கிஷோர். இதனால் பி.ஜே.பி இவரை கழற்றி விட முடிவு செய்தது.

பி.ஜே.பியிலிருந்து கிஷோர் வெளியானதும் பி.ஜே.பியை வீழ்த்துவதுதான் எனது குறிக்கோள் என்று வெளிப்படையாகவே சொல்ல ஆரம்பித்தார். அதற்காக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம்தான் ஐபேக். இந்த நிறுவனத்தின் பெயரில் 2015-ம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ்குமாருக்கு ஆதரவாகத் தேர்தல் பணியாற்றத் தொடங்கினார். பி.ஜே.பி-யிடமிருந்து நிதிஷ் குமார் பிரிந்து தேர்தலைச் சந்தித்த நேரம் அது. அந்தத் தேர்தலில் நிதிஷ்குமார் வெற்றி பெற கிஷோரின் மாஸ்டர் பிளானால் கிடைத்த வெற்றி என்று செய்திகள் காட்டுத்தீயாய்ப் பரவியது. அகில இந்திய அளவில் கிஷோரின் பெயர் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் துணைத் தலைவர் பதவியும் கிஷோருக்குத் தேடி வந்தது.

நிதிஷ் - பிரசாந்த் கிஷோர்
நிதிஷ் - பிரசாந்த் கிஷோர்
twitter

அதன் தொடர்ச்சியாக குஜராத் மாநிலத்தில் பி.ஜே.பியை வீழ்த்த காங்கிரஸ் கட்சிக்கு மறைமுகமாகப் பணியாற்றினார் கிஷோர். ஆனால், அந்தத் தேர்தலில் பி.ஜே.பி-யே வெற்றி பெற்றது. ஆனால் அதிகாரபூர்வமாக கிஷோர் காங்கிரஸ் கட்சிக்கு வேலை செய்யாததால், அவர் பெயர் இந்தத் தோல்வியில் பெரிதாக அடிபடவில்லை. அதற்குப் பிறகு உத்தரப்பிரதேச தேர்தலில் கால் வைத்தார். காங்கிரஸ்-அகிலேஷ் கூட்டணி பி.ஜே.பி-யை எதிர்த்து களத்தில் நின்றது. அகிலேஷ் அழைப்பில் அங்கு பணியாற்றச் சென்றார். ஆனால், அவரது யுக்தி உத்தரபிரதேசத் தேர்தலில் எடுபடவில்லை. அந்தத் தேர்தலில் இந்தக் கூட்டணி படு தோல்வியைச் சந்தித்து. ஆனால், கிஷோர் பெயர் அதில் பெரிதாக அடிபடாமல் போனது. அதுதான் அவரது மார்க்கெட் யுக்தி. வெற்றி பெற்றால் அதற்கு தானே காரணம் என்பதை வெளியே மார்க்கெட் செய்யும் கிஷோர், தோல்வியடைந்தால் சத்திமில்லாமல் அமுங்கிவிடுவார்.

அதே நேரம் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் அம்ரிந்தர் சிங்குக்குப் பணியாற்றினார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற மீண்டும் கிஷோர் கிராப் உச்சத்துக்குச் சென்றது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வேலை பார்க்கும் வாய்ப்பு கிஷோருக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கிஷோர் மீது ராகுலுக்கு இருந்த நம்பிக்கை குறைந்துவிட்டதால், அவரை அழைப்பதில் ராகுல் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முன்பே ஆந்திராவிற்கு என்ட்ரி கொடுத்துவிட்டார் கிஷோர். ஜெகன்மோகன் ரெட்டிக்குத் தேர்தல் பணியாற்ற பெரும் தொகையுடன் ஒப்பந்தம் செய்துவிட்டார்.

இந்தமுறையும் கிஷோருக்கு ஜாக்பாட் அடித்தது. ஆந்திராவில் அமோக வெற்றி பெற்றார் ஜெகன். அந்தத் தேர்தல் முடிந்த கையோடு மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் பணியாற்ற ஒப்பந்தம் போட்டார். அங்கும் ஐபேக் நிறுவனம் பணியாற்றிவருகிறது. இந்தநிலையில் இப்போது தி்.மு.கவுடன் அதிகாரபூர்வமாக ஒப்பந்தம் செய்துள்ளது ஐபேக் நிறுவனம்.

ஜெகன்மோகன் ரெட்டி- பிரசாந்த் கிஷோர்
ஜெகன்மோகன் ரெட்டி- பிரசாந்த் கிஷோர்

கிஷோர் மீதான விமர்சனங்கள்!

தேர்தல் யுக்தி வகுப்பதில் புலி என்று கிஷோரை வர்ணித்தாலும் அவரது கடந்த காலச் செயல்பாடுகளைப் பார்க்கும் போது பல விமர்சனங்களும் அவருடைய பணியில் இருக்கின்றன. முதலில் மம்தா பானர்ஜி, தி.மு.க என இரண்டு கட்சிகளுக்கும் கிஷோர் பணியாற்ற ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் தமிழகத்திற்கும், மேற்குவங்கத்திற்கும் 2021-ம் ஆண்டுதான் தேர்தல் நடக்க இருக்கிறது. ஒரே நேரத்தில இரண்டு மாநிலங்களுக்கு எப்படி தேர்தல் பணியாற்ற முடியும் என்கிற கேள்வியும் எழுகிறது. அவர் ஒருகட்சிக்குப் பணியாற்றிய பிறகு அந்தக் கட்சி அவரை தக்க வைத்ததே கிடையாது. 2014-ம் ஆண்டு பி.ஜே.பி அவரை வெளியேற்றியது. ராகுல் ஒரு கட்டத்தில் உறவை முறித்துக்கொண்டார். நிதிஷ் கட்சியில் துணைத்தலைவராக இருந்து கொண்டே டெல்லி தேர்லில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வேலைசெய்ய அவசர ஒப்பந்தம் செய்தார். ஆனால், அதே டெல்லி தேர்தலில் இவர் துணைத் தலைவராக இருக்கும் ஐக்கிய ஜனதா தளமும் போட்டியிட்டது. சொந்தக் கட்சிக்கே சூனியம் வைக்க பார்க்கிறாரா? என்று கொந்தளித்த நிதிஷ், அவரை கட்சியிலிருந்து சில நாள்களுக்கு முன்பு நீக்கினார். அதேபோல் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் முடிந்த பிறகு கிஷோரைச் சந்திப்பதையே தவிர்த்தார்.

பணம் கொடுத்தால் எந்தவித கொள்கையும் இல்லாமல் யாருக்கு வேண்டுமானாலும் பணியாற்றுவார் கிஷோர் என்கிற விமர்சனம் இவர் மீது அழுத்தமாக வைக்கப்படுகிறது. இல்லையென்றால் அ.தி.மு.கவுக்குப் பணியாற்ற ஆரம்பத்தில் முடிவு செய்தவர் தி.மு.க வுடன் எப்படி ஒப்பந்தம் போட முடியும் என்கிறார்கள் கிஷோருடன் ஏற்கெனவே பணியாற்றியவர்கள்.

கிஷோர் பின்னால் பெரும் நிறுவனங்கள்!

கட்சிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும் இந்தியாவில் பிரிக்க முடியாத ஒன்று. இந்த சூத்திரம்தான் இப்போது கிஷோர் காட்டில் பணமழையாகப் பொழிய வைக்கிறது. எந்தக் கட்சிக்கு அவர் பணியாற்றப் போகிறாரோ, அந்தக் கட்சிக்கு இந்தியாவில் உள்ள முன்னணி நிறுவனங்கள் தாரளமாகத் தேர்தல் நிதியை வழங்கும். அந்த நிறுவனங்கள் கிஷோரின் மூலம் ஆட்சிக்கு வந்த பிறகு தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தேர்தலுக்கு முன்பே சொல்லிவிடும். ஒவ்வொரு கட்சிக்கும் அவர் பணியாற்ற பெரும் தொகையை ஊதியமாகப் பெறுவார். தற்போது தமிழகத்தில் தி.மு.க வுக்குப் பணியாற்ற மாதம் 15 கோடி ரூபாய் ஊதியமாகப் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரம் கிஷோர் கைகாட்டும் நிறுவனங்கள் தேர்தல் நிதி உதவியையும் தாராளமாக வாரி வழங்கும்.

ஸ்டாலின், பிரசாந்த் கிஷோர்
ஸ்டாலின், பிரசாந்த் கிஷோர்

கிஷோர் ஜெயிக்கும் குதிரை எது என்று தெரிந்துவிட்டே களத்தில் இறங்குவார் என்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தக் கட்சி அடுத்து ஆட்சிக்கு வரும் என்று தெரிந்து அந்தக் கட்சிக்குப் பணியாற்றவே விருப்பப்படுவார். தமிழகத்தில் தி.மு.க-வை அவர் தேர்ந்தெடுத்தது அப்படித்தான். ஆனால், அவரது சூத்திரம் தமிழகத்தில் எடுபடுவது கடினம். இரண்டு முக்கியக் காரணங்கள் அதற்குப் பின்னால் இருக்கின்றன.

‘‘அ.தி.மு.க தலைவர்களில் இன்னும் சிலர் பா.ஜ.க-வில்?!"
- சசிகலா புஷ்பா சஸ்பென்ஸ்!

இந்தியாவில் எந்த மாநிலத்தையும் முன்வைத்து தமிழகத்தின் தேர்தல் களத்தை ஒப்பிட முடியாது. மோடிக்கு ஆதரவான அலை நாடு முழுவதும் வீசியபோது இங்கு பி.ஜே.பி மண்ணைக் கவ்வியது. அதே போல் வட இந்திய அரசியல் களத்துக்கும் தமிழக அரசியல் களத்துக்கும் நிறைய வேறுபாடு உண்டு. திராவிடத்தின் தாக்கம் இங்கு இப்போதும் உள்ளது. ஜாதிகளை முன்வைத்து தேர்தல் வியூகம் வகுக்கும் கிஷோார், தமிழகத் தேர்தல் களத்தைக் கணிப்பதும் கடினம். தமிழகத் தேர்தல் களத்தை நன்கு அறிந்த பல சூரர்கள் தி.மு.க வில் இருக்கிறார்கள். அவர்களை முறையாகப் பயன்படுத்தினாலே தி.மு.க தலைமைக்குப் போதுமான ஒன்று. ஆனால் கார்ப்பரேட் மோகம் இப்போது தி.மு.க-வையும் விட்டுவைக்கவில்லை.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

கிஷோர் கட்சிக்கு வேலை செய்வதாக ஸ்டாலின் போட்ட பதிவும் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு தகவலும் சொல்லப்படுகிறது. ஐபேக் நிறுவனத்தின் பெயரில் கிஷோர் செயல்பட்டாலும், அந்த நிறுவனத்தில் எந்தப் பொறுப்பிலும் கிஷோர் நேரடியாக இல்லை. தனக்கு வேண்டிய சில நண்பர்கள் மூலமே இந்த நிறுவனத்தை நடத்திவருகிறார். நாளை அவர் வேலை செய்யும் கட்சி தோல்வியைச் சந்தித்தால் ஐபேக் நிறுவனம் மீதுதான் குறை வர வேண்டும். தன் மீது வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் கிஷோர். சரி. கிஷோரின் எதிர்காலத் திட்டம்தான் என்ன? என்று அவருக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டால், பீகார் மாநில முதல்வர் பதவிதான் அவரது கனவு என்கிறார்கள்.

நீங்கள் அதற்கு முயற்சி செய்யலாமே கிஷோர்..!

அடுத்த கட்டுரைக்கு