Published:Updated:

ரஜினி மூலம் முதல்வர் திட்டம்... நிறைவேறுமா தமிழருவி மணியனின் 53 ஆண்டுக் கால கனவு?!

தமிழருவி மணியன், ரஜினிகாந்த்

நாளை காலை, 8 மணிக்கு, தன் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தன் மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. புதிய அறிவிப்புகள் அவரிடமிருந்து வெளியாகலாம் என்கிற எதிர்பார்ப்பும் கிளம்பியிருக்கிறது.

ரஜினி மூலம் முதல்வர் திட்டம்... நிறைவேறுமா தமிழருவி மணியனின் 53 ஆண்டுக் கால கனவு?!

நாளை காலை, 8 மணிக்கு, தன் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தன் மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. புதிய அறிவிப்புகள் அவரிடமிருந்து வெளியாகலாம் என்கிற எதிர்பார்ப்பும் கிளம்பியிருக்கிறது.

Published:Updated:
தமிழருவி மணியன், ரஜினிகாந்த்
"1967-ல் பெருந்தலைவர் காமராஜர் விருதுநகரில் தோற்கடிக்கப்பட்ட அன்று, தியாகராய நகரில் இருக்கிற திருமலைப் பிள்ளை வீதியில், கண்ணீரும் கம்பலையுமாகக் கூடிக்கிடந்த மக்களுக்கு நடுவே சென்று அவருடைய காலடியில் விழுந்து அரசியலைத் தொடங்கியவன் நான். இன்று ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த ஐம்பது ஆண்டுகளில் நான் நெஞ்சுக்குள் நேர்ந்துகொண்ட ஒரே தவம் என்ன தெரியுமா... பெருந்தலைவர் காமராஜர் மரணத்தைச் சந்திக்கிற இறுதி கணம் வரையிலும், அவர் சொன்னது தி.மு.க அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இந்த இரண்டு திராவிடக் கட்சிகளையும் தமிழகத்து அரசியலிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதே. பெருந்தலைவரின் உண்மையான தொண்டனாக அவரின் கனவை நிறைவேற்ற வேண்டிய சபதம் என்னிடம் இருக்கிறது''
தமிழருவி மணியன்.
2017-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், திருச்சி தென்னூர் உழவர்சந்தை மைதானத்தில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழருவி மணியன் பேசிய வார்த்தைகள் இவை.
தமிழருவி மணியன் டைம்லைன்
தமிழருவி மணியன் டைம்லைன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொடர்ந்து பேசிய அவர் காமராஜரின் கனவை நிறைவேற்ற, "நான் பலரைப் பரிந்துரைத்தேன். ஆனால், என்னால் அதை நிறைவேற்ற முடியவில்லை. காலம் எனக்களித்திருக்கிற கடைசிக் கருணை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்" எனப் பேச, கூடியிருந்த ரஜினி ரசிகர்கள், கைதட்டியும், விசிலடித்தும் ஆர்ப்பரித்தனர். அப்படி காமராஜரின் சிஷ்யனாக, தான் ஏற்றுக்கொண்ட சபதத்தை ரஜினியை முதல்வராக்கி நிறைவேற்ற புறப்பட்ட தமிழருவி மணியனுக்கு, இப்போது தானே முதல்வராகவும் அற்புதக்கணம் வாய்த்திருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
2016-ல் பொதுவாழ்வை விட்டு விலகுகிறேன் என்று தெரிவித்த மணியன் மீண்டும் எப்படி பொதுவாழ்வுக்கு வந்தார் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக, அரசியலில் அவ்வப்போது அடிபடும் பெயரான தமிழருவி மணியன் என்பவர் யார் என்பதை மேலே உள்ள டைம்லைனைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு பன்னீரின் தர்மயுத்தம், கூவத்தூர் கலாட்டா எனத் தமிழக அரசியலில் பல கேலிக்கூத்துக்கள் அரங்கேறின. ஒருவழியாக 2017 பிப்ரவரி 16-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வரானார். அந்த நேரத்தில், தமிழக அரசு நிர்வாகம் பல்வேறு குளறுபடிகள் நிறைந்ததாக சீர்கெட்டுப் போயிருந்தது. அதுகுறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில், 2017 மே மாதம் (15-19) தன் ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்துப் பேசினார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது அரசை விமர்சித்து நேரடியாக அவர் பேசியது மிகுந்த அதிர்வலைகளை உண்டாக்கியது.

"தமிழகத்தில் இன்றைய அரசியலில் நிர்வாகம் சீர்கெட்டுள்ளது. சிஸ்டம் சரியில்லை. இது மொத்தத்தையும் சரி செய்ய வேண்டும். அப்போதுதான் உருப்படும். அதற்கான நேரம் வரும்" என்று சூசகமாகத் தெரிவித்தது அவரின் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. ரஜினி நேரடியாக அரசியலுக்கு வரும் அறிவிப்பாகவே அது பார்க்கப்பட்டது. தொடர்ச்சியாக தன் ரசிகர்களைச் சந்தித்து கருத்துகளையும் கேட்டு வந்தார் ரஜினிகாந்த்.

தமிழருவி மணியன் - ரஜினி சந்திப்பு
தமிழருவி மணியன் - ரஜினி சந்திப்பு

இந்தநிலையில்தான், தமிழருவி மணியனைச் சந்திக்க விரும்பினார் ரஜினி. அதைக் கேள்விப்பட்ட தமிழருவி மணியன் ரஜினிகாந்தின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தார். அப்போது தன் அரசியல் நிலைப்பாடுகளைப் பற்றி தமிழருவி மணியனிடம் ரஜினி பேசியதாகச் சொல்லப்பட்டது. தமிழருவி மணியனும் பல இடங்களில் அதை உறுதி செய்தார். தொலைக்காட்சி விவாதங்களிலும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து மிகத் தீவிரமாக விவாதித்தார். ஊழலற்ற நிர்வாகம், காமராஜர் ஆட்சி எனும் தமிழருவி மணியனின் ஐம்பதாண்டு காலக் கனவையே, நடிகர் ரஜினிகாந்தும் பேச ரஜினியின் முழு நேர அரசியல் பிரசாரகராக மாறினார் தமிழருவி மணியன். ரஜினி தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான் சந்திப்பில் தெரிவித்த 'சிஸ்டம் சரியில்லை' என்கிற கருத்தே என்னை அவரை ஆதரிக்கச் செய்தது என்றும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ச்சியாக, 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் ‘ரஜினியின் அரசியல் பிரவேசம் அவசியமா?’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடத்தினார் தமிழருவி மணியன். ரஜினியும் தன் ரசிகர்களை இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். அதனால், ஏராளமான ரசிகர்கள் அக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். அந்த மாநாட்டில், 'ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி, அவர் தனிக்கட்சி தொடங்குவது உறுதி' என அறிவித்தார் தமிழருவி மணியன். அவர் மூலமாகவே தமிழக மக்களின்... அரசியல் கட்சிகளின் பல்ஸைப் பார்த்தார் ரஜினிகாந்த். மாநாடு முடிந்த பிறகு நடிகர் ரஜினிகாந்தை இரண்டாவது முறையாகச் சந்தித்து கலந்து ஆலோசித்தார் தமிழருவி மணியன். தொடர்ந்து டிசம்பர் 26-ம் தேதி முதல் 31 ம் தேதி வரை, ரஜினி இரண்டாம் கட்டமாக தன் ரசிகர்களைச் சந்தித்தார். அவர்கள் முன்னிலையில்தான், "நான் அரசியலுக்கு வருவது உறுதி. 234 தொகுதியிலும் போட்டியிடப் போகிறோம். போருக்குத் தயாராக இருங்கள்" என அரசியலுக்கு வருவது பற்றிய அறிவிப்பையும் அந்தச் சந்திப்பின் கடைசி நாளில் வெளியிட்டார்.

திருச்சி மாநாடு
திருச்சி மாநாடு

இடையில் சில காலம் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளிவராமல் இருந்தது. பழையபடியே ரஜினி அரசியலுக்கு வருவதாகச் சொல்லி ஏமாற்றுகிறார் என்கிற விமர்சனங்களும் வெளிவரத் தொடங்கின. இந்த நிலையில், 2018 ஏப்ரல் 24-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, "அரசியல் கட்சி தொடங்குவது உறுதி. தேதி பின்னர் அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார். பிறகு மீண்டும் பலமாத காலம், ரஜினி எப்போது கட்சி தொடங்குவார் என்பது குறித்த எந்தத் தகவலும் வெளிவராமல் இருந்தது.

ரஜினிக்கு எதிரான விமர்சனங்கள் வீரியமடைந்த சூழலில்தான், கடந்த டிசம்பர் மாதம் 4-ம் தேதி ரஜினியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார் தமிழருவி மணியன். வெளியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மணியன், "அடுத்த வருடம் ரஜினி கட்சி தொடங்குவது உறுதி. ரஜினியும் கமலும் இணைந்து செயல்படுவது குறித்தும் பேசிவிட்டார்" என்று கூறினார். தொடர்ந்து ஒரு தனியார் பத்திரிகை பேட்டியில் ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பின் ரஜினி கட்சி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் மாநாடு நடத்தவும், செப்டம்பரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அந்த நேரத்தில், ரஜினிக்கு நெருக்கமான மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட கருத்துகள் வந்தன.

இதனால் கோபமான தமிழருவி, "ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் வரை இனி பேட்டியே கொடுக்கப் போவதில்லை. ரஜினிகாந்த் என்ன செய்வார் எனச் சொல்லும் உரிமை எனக்கு இல்லை. எனக்கான வரையறை எது. எனக்கான வரம்பு எது என நான் அறிந்திருக்கிறேன்" என்று விரக்தியாகப் பேட்டி கொடுத்து பல்டி அடித்தார். இது நடந்தது கடந்த பிப்ரவரி மாதம்.

வைகோ, நெறி சார்ந்த அரசியல்வாதி. கொள்கைப் பிடிப்புள்ள லட்சியவாதி. பேச்சில் எரிமலை. செயலில் புயல். எல்லாம் இருந்தும், இன்று இலவு காத்த கிளி.
தமிழருவி மணியன்.

பழையபடியே தமிழருவியின் தவம், ஒரு மாத காலம்தான் நீடித்தது. கடந்த 5-ம் தேதி, தனது ராகவேந்திரா மண்டபத்தில், தனது மக்கள் மன்றத்தின், மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்தார் ரஜினி. கூட்டம் முடிந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரஜினி, "மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசித்ததில் ஒரு விஷயத்தில் எனக்கு திருப்தியில்லை ஏமாற்றமே. திருப்தியில்லாத, ஏமாற்றமடைந்த விஷயம் என்னவென்று பின்னர் கூறுகிறேன்" எனத் தெரிவித்தார். இதனால் ரஜினியை ஏமாற்றமடையச் செய்த விஷயம் எது என்ற விவாதம் பொதுவெளியில் சூடுபிடித்தது.

ரஜினி தன் மன்ற நிர்வாகிகளுடன் மூன்று விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. 48 வயதுக்குக் கீழ் உள்ள நபர்களுக்குத்தான் தேர்தலில் 60 சதவிகித வாய்ப்பளிக்கப்படும் எனவும், தொடர்ந்து தேர்தல் வரை கட்சிகளில் இருக்கும் பல பொறுப்புகள் தேர்தலுக்குப் பிறகு கணிசமாகக் குறைக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார். இந்த இரண்டு விஷயங்களுக்கும் சரி என ஒப்புக்கொண்ட நிர்வாகிகள், ரஜினி மூன்றாவதாகச் சொன்ன "நான் ஆட்சி அதிகாரத்தில் இருக்க மாட்டேன். கட்சித் தலைமையாக மட்டுமே இருப்பேன், கட்சி வேறு, ஆட்சி வேறு" எனத் தெரிவித்த கருத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள் என்ற தகவல்கள் வெளியாகின.

ரஜினிகாந்த் - மாவட்டச் செயலாளர்கள் சந்திப்பு
ரஜினிகாந்த் - மாவட்டச் செயலாளர்கள் சந்திப்பு

ரஜினி கட்சி ஆரம்பிக்கும் வரை, பேட்டியே கொடுக்கப் போவதில்லை என அறிவித்த தமிழருவி மணியன் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்தார். இந்தமுறை, பழைய தமிழருவி மணியனாக இல்லாமல் புதுப்பொலிவுடன்! ஆம், 2016-ம் ஆண்டு பொதுவாழ்வை விட்டு விலகுகிறேன் என அறிவித்து, ரஜினியின் அரசியல் ஆசை வெளிப்படத் தொடங்கியதும், ரஜினியின் பிரசாரகராக மாறிய தமிழருவி மணியன், ‘ரஜினியை முதல்வராக்குவேன்’ எனப் போர்க்குரல் எழுப்பினார். தற்போது அவருக்கே அந்த ஜாக்பாட் அடித்திருக்கிறது என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

தமிழருவி மணியன் (விழுப்புரம் கூட்டத்தில்)
ரஜினிகாந்த் அவர்களே... என்னை உட்பட யாரையும் முதல்வராக்க நினைக்காதீர்கள். இந்திரா காந்தி மற்றும் எம்.ஜி.ஆரிடம் நான் கண்ட சுறுசுறுப்பை தற்போது ரஜினிகாந்த்திடம் பார்க்கிறேன். நான் முதல்வராக மாட்டேன் என ரஜினிகாந்த் சொன்னதை மாவட்டச் செயலாளர் ஏற்கவில்லை. இதைத்தான் ஏமாற்றம் என்று கூறினார் ரஜினிகாந்த்!

''ஆட்சித் தலைமையில் நான் அமரமாட்டேன் வேறு ஒருவரைத்தான் அமர வைப்பேன்'' என்று ரஜினி சொன்னதில் இருந்து, அந்த இடம் தமிழருவி மணியனுக்குத்தான் என ரஜினி மன்ற நிர்வாகிகள் கணிக்கத் தொடங்கிவிட்டனர். அதன் காரணமாகத்தான் ரஜினியிடம் தங்களது அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறார்கள். தமிழருவி மணியனுக்கும் அப்படி ஒரு எதிர்பார்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதற்கேற்ப ‘என்னை உட்பட யாரையும் முதல்வராக நினைக்காதீர்கள்’ என்று தமிழருவி மணியன், ஒருபுறம் பேசி வந்தாலும் ‘ரஜினி கடவுள், ரசிகர்கள் பக்தர்கள். அவர் சொல்வதை யாரும் தட்டமாட்டார்கள்’ என்றும் பேசி வருகிறார். அதாவது, ரஜினி கட்சியின் தலைவராக இருந்து கொண்டு, வேறு யாரையாவது முதல்வராக அமர வைத்தாலும் அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதே அவரது பேச்சின் உட்கருத்தாகப் பார்க்கப்படுகிறது.

“கடவுள்மீது முழுமையான நம்பிக்கை வைத்த பிறகு, அதில் விமர்சனத்துக்கு இடம் கிடையாது. பக்தனுக்குக் கடவுள் மட்டுமே குறி. ரஜினியின் ரசிகர்கள் அனைவருமே அவருடைய பக்தர்கள்தான். ஆரம்ப கட்டத்தில் ரஜினிக்குச் சில ஏமாற்றங்கள் இருக்கலாம்."
தமிழருவி மணியன்

ரஜினி ரசிகர்கள் ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் பிறகு நிச்சயமாக ஒப்புக்கொள்வார்கள் என்கிற நம்பிக்கையும் தமிழருவி மணியனுக்கு இருப்பது வெளிப்படுகிறது. தவிர, கட்சிக்கு ஒருவர், ஆட்சிக்கு ஒருவர் எனும் ரஜினியின் இந்தத் திட்டம் தமிழருவிக்கு முன்பே தெரிந்த ஒரு விஷயம்தான் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். இவ்வளவு காலம் மோடி, வைகோ எனப் பலரை தமிழருவி மணியன் ஆதரித்துப் பேசியிருந்தாலும் ரஜினிக்காக அவர் பேசிய விதம் அப்படியே வேறு. தவிர, தொடர்ந்து கூட்டங்கள் மூலமாக ரஜினி ரசிகர்கள் மத்தியில் தன்னைப் பற்றியும் தான் ரஜினிக்கு மிக விசுவாசமானவன் என்பதையும் பதிய வைக்கும் வேலையிலேயே கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார் என்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தமிழருவி மணியன்
தமிழருவி மணியன்

தமிழருவி மணியன் என்ன முயற்சி எடுத்தாலும், தமிழகத்தில், அ.தி.மு.க, தி.மு.க எனும் இருபெரும் கட்சிகளைத் தாண்டி, புதிய ஒரு கட்சி மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சிக் கட்டிலில் அமருவது என்பது சாதாரண விஷயமாகத் தெரியவில்லை. தமிழருவியின் ஐம்பதாண்டுக் கால கனவு நிறைவேறுமா என்ற கேள்விக்கு ரஜினி எப்போதும் சொல்வதுபோல காலத்தின் கையில்தான் இருக்கிறது பதில்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism