Published:Updated:

``பாசமான அக்காவை இழந்துவிட்டோம்!''- திருமாவளவன் அக்கா மறைவால் கலங்கும் வி.சி.க நிர்வாகிகள்

தொல். திருமாவளவன்
தொல். திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியாக இல்லாமல், அமைப்பாக இருந்த காலத்தில் இருந்தே அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு பக்கபலமாக இருந்து வந்தவர் அவரின் அக்கா கு.பானுமதி (எ) வான்மதி.

''நானும் போயிட்டேன்னா என் தம்பியப் பார்த்துக்க யார் இருக்கா'' நிதானமாகத் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில், ஒரு அக்கா இப்படிப் பேசுவதற்கும், நோயுற்று, மருத்துவமனைப் படுக்கையில் மூச்சுவிடவே சிரமப்படும் வேளையிலும், "எனக்கு சாவறத பத்தி பயமில்ல; உன்ன அம்போனு விட்டுட்டுப் போறேன்; உன்னை யார் சாமி பார்த்துக்குவாங்க?'' என, தன் தம்பியைப் பார்த்து அலறித் துடிப்பதற்கும் இடையே ஒரு பாரிய இடைவெளி இருக்கிறது. ஆனால், அதில் இருக்கும் ஒரு ஒற்றுமை எந்தவொரு நேரத்திலும் தன் தம்பியின் நலனைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் ஒரு அக்காவின் ஆழ்மனதில் இருந்து வந்த வார்த்தைகள் இவை என்பது மட்டுமே.

பானுமதி
பானுமதி

அக்கா - தம்பி பாசம் என்பது இயல்பானதுதான். தம்பியின் நலனில் அக்கறைகொள்ளாத அக்காக்களே இல்லை எனலாம். ஆனால், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக, தன் தம்பிக்காக தன் ஒட்டுமொத்த வாழ்க்கையையே அர்ப்பணித்த ஒரு அக்கா மறைந்திருக்கிறார். அப்படி தாய்க்கு இணையாக பாசத்தைப் பொழிந்த அக்காவை இழந்திருப்பவர் வேறு யாருமல்ல, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன்தான்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியாக இல்லாமல், அமைப்பாக இருந்த காலத்தில் இருந்தே திருமாவளவனுக்குப் பக்கபலமாக இருந்து வருபவர் அவரின் அக்காவாகிய கு.பானுமதி (எ)  வான்மதி. அந்த அமைப்பின் நிர்வாகிகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த காலத்திலேயே துணிச்சலாகத் தன் தம்பிக்கு அடைக்கலம் கொடுத்தவர் பானுமதி. தன் தம்பியை மட்டுமல்லாமல், கட்சி உறுப்பினர்கள் அனைவரிடமும் மிகுந்த பாசத்தோடு பழகுபவர் என்று பெயரெடுத்தவர். கடந்த மாதம் 10-ம் தேதி, கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகி காய்ச்சல் காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

''விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அவர்களின் சகோதரி பானுமதி என்கிற வான்மதி அவர்கள் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். தொல்.திருமாவளவன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.''
- எடப்பாடி பழனிசாமி

90-களின் தொடக்கத்தில், இடைவிடாத பயணங்களால், சரியான நேரத்துக்கு உணவருந்தாமலும், ஹோட்டல் உணவுகளைச் சாப்பிட்டு வந்த காரணத்தினாலும் தொடர்ச்சியாக வயிறு சம்பந்தமான உபாதைகளுக்கு ஆளாகி வந்திருக்கிறார் திருமாவளவன். அந்த நேரத்தில் தம்பியின் நலனைக் கருத்தில்கொண்டு சென்னைக்குக் குடியேறியிருக்கிறார் பானுமதி. சென்னை அசோக்நகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு எதிரிலேயே சிறிய வீடெடுத்து வசித்து வந்திருக்கிறார். தம்பிக்கு வேண்டிய உணவு சமைத்துக் கொடுப்பது, தம்பியின் துணிகளைத் துவைத்துப் போடுவது எனத் தம்பியைச் சுற்றியே கிட்டத்தட்ட 30 ஆண்டுக்காலம், அவரின் காலச்சக்கரம் கடந்திருக்கிறது.

சிறு வயதிலேயே கணவரை இழந்தபோதும், தன் தம்பியின் நலன் கருதி மறுமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்து வந்திருக்கிறார் பானுமதி. அதேவேளை, தன் தம்பி திருமாவளவனை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார். தம்பியிடம் மட்டுமல்லாது, அவருடன் நெருங்கிப் பழகிவந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, மருத்துவர் ராமதாஸ், மருத்துவர் சேதுராமன் போன்ற தலைவர்களிடமும் தம்பியைத் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கச் சொல்லுங்கள் என்கிற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்.

திருமாவளவன்
திருமாவளவன்

தம்பிக்கு உதவியாக இருந்ததோடு மட்டுமல்லாமல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தென்சென்னை மாவட்ட மகளிரணித் துணைத்தலைவியாகவும் கட்சிப் பணியாற்றியிருக்கிறார் பானுமதி. கட்சியின் மாநாடு, பொதுக்கூட்டம் இயக்க நிகழ்வுகள் அனைத்திலும் பங்கேற்று வந்துள்ளார். ''கட்சித் தலைவரின் அக்கா என எந்த இடத்திலும் யாரிடமும் அதிகாரம் செலுத்தியதில்லை, அதேவேளை எங்கள் தலைவருக்கு மட்டுமல்ல, எங்கள் அனைவருக்கும் அக்காவாகத் திகழ்ந்தவர் பானுமதி'' என்கிறார்கள் அந்தக் கட்சியின் நிர்வாகிகள்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமான ரவிக்குமார், தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிந்துள்ள இரங்கல் பதிவில், ''நான் சைனஸால் அவதிப்படுவதைப் பார்த்துவிட்டு திரிபலா சூரணம் வாங்கி சாப்பிடச் சொன்னார். அன்றைக்கே வாங்கி சுமார் ஒரு மாதகாலம் சாப்பிட்டேன். அப்போது அவர்களைப் பார்த்ததுதான் தலைவருக்கும் கடைசி சந்திப்பாக இருக்கும் என அன்று நினைக்கவில்லை'' என ஆதங்கத்தோடு பதிவு செய்திருக்கிறார். அவரிடம் மட்டுமல்ல, கட்சி நிர்வாகிகள் அனைவரிடம் சொந்தக் குடும்பத்தினர் போல, உறவினர் போல மிகவும் பாசத்தோடு உரையாடக் கூடியவர், யாரிடம் கடுகளவும் கடிந்துபேசாதவர் என்கிற பெயரையும் எடுத்திருக்கிறார் மறைந்த பானுமதி.

`21 நாள்களுக்குப் பிறகு வேண்டாம்; இப்போதே சொல்லிவிடுங்கள்!’ -பிரதமரிடம் வலியுறுத்தும் திருமாவளவன்

கடவுள் நம்பிக்கை கொண்ட பானுமதி, 2019 நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில், திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் வெல்ல வேண்டும் என ஒருமாத காலம் கடுமையான விரதம் இருந்திருக்கிறார். தேர்தல் முடிவு வந்த நாள் அன்றும் இரவு மூன்று மணி வரை, விழித்திருந்து தேர்தல் முடிவுகள் வந்த பிறகே தூங்கச் சென்றிருக்கிறார். ''உனக்கு வாக்களித்து எம்.பி-யாக்கிய சிதம்பரம் தொகுதி உனக்கு தாய்நாடு போல. அந்தத் தொகுதி மக்களுக்கு முடிந்த உதவிகளை எப்போதும் செய்ய வேண்டும்'' எனத் தம்பியிடம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்திருக்கிறார். 

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் தன் தம்பிக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதில் கடைசி வரை உறுதியோடு இருந்திருக்கிறார் பானுமதி. சாதி வெறியாட்டங்களைக் கண்டு கவலைகொண்டு கண்ணீர் வடித்ததோடு மட்டுமல்லாமல் இதெல்லாம் மாறி, அனைத்து மக்களும் எந்தவித ஏற்றத்தாழ்வுமின்றி ஒற்றுமையாக வாழ வேண்டும் என்கிற கனவோடு வாழ்ந்து மறைந்திருக்கிறார் பானுமதி. அக்காவின் உடலைக் கண்டு, தலையில் அடித்துக்கொண்டு திருமாவளவன் அழும் காட்சி அனைவரையும் ஒரு கணம் உறையச் செய்துவிட்டது.

அக்காவின் நினைவிடத்தில் திருமாவளவன்
அக்காவின் நினைவிடத்தில் திருமாவளவன்

அவரின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். தொல்.திருமாவளவனும் மிகவும் உருக்கமாக, ஒரு இரங்கல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

''கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு நான் வரும்போது தகவலறிந்து, அங்கே வந்து கும்பல்சூழ பரபரப்பாயிருக்கும் என்னைத் தூரமாய் நின்று பார்த்துவிட்டுப் போய்விடுவார். கால் நூற்றாண்டாய் எனக்காக வாழ்ந்த அக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு நெஞ்சை நெருப்பாய் சுடுகிறது'' எனக் கண்ணீர் வடித்திருக்கிறார்.

"நீ ஏன் இங்க வந்த? நீ பத்திரமாயிரு சாமி" என்று கையெடுத்துக் கும்பிட்டு "வெளியே போ வெளியே போ" எனக் கதறினார். "எனக்கு சாவறதப் பத்தி பயமில்ல; உன்ன அம்போனு விட்டுட்டுப் போறேன்; உன்னை யார் சாமி பாத்துக்குவாங்க? அதான் எனக்கு பெரிய கவலையா இருக்கு; உன்ன நம்பி சனங்க இருக்காங்க; நீ பத்திரமா இரு; ரூம விட்டு உடனே வெளிய போ" என்று அக்கா அலறித் துடித்தார். அதனால், அவருக்கு இருமல் கடுமையாகி, மூச்சுத்திணறல் ஏற்பட, நான் பதறிப்போய் அவரை அமைதிப்படுத்த முயன்றேன். நான் உடனிருக்கிறேன் என்பதை அறிந்தால் அவருக்குத் தெம்பாக இருக்குமென்று நம்பிதான் உள்ளே சென்றேன். ஆனால், அவர் என்னைக் கண்டதும் எனக்கு ஏதும் ஆகிவிடக் கூடாதே எனப் பதைபதைத்துப் போனார். இரண்டே நிமிடங்களில் நான் வெளியேறிவிட்டேன். பின்னர் அவர் ஆக்சிஜன் உதவியுடன் அமைதியான சுவாசத்துக்குத் திரும்பினார்.

`இது தோழமை சுட்டுதல்; என்றாலும் அதிர்ச்சி அளிக்கிறது!’ -தொல். திருமாவளவன் வேதனை

"எல்லோரும் கவனமாயிருங்கள்; கொரோனா கொடியது" என்று ஒவ்வொரு நாளும் ஃபேஸ்புக் நேரலையில் கெஞ்சுவேன். ஆனால், அக்காவைப் பற்றிக் கவனமில்லாமல் இருந்துவிட்டேனே! என்னை என்னால் ஆற்றுப்படுத்த இயலவில்லை. மீண்டும் வேண்டுகிறேன், எச்சரிக்கையாய் இருங்கள் 'கொரோனா கொடியது'! ஆற்றாமையும் வெறுமையும் என்னை ஆக்கிரமித்துக்கொண்டு ஆட்டிவைக்கிறது. அக்கா கவலைப்பட்டது போல இப்போது நான் தனித்துவிடப்பட்ட உணர்வுக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன்'' எனவும் தன் வலியைப் பதிவு செய்திருக்கிறார்.

தொடர்ந்து, திருமாவளவனின் சொந்த ஊரான அங்கனூரில், அவரின் தந்தை உடல் புதைக்கப்பட்ட இடத்துக்குப் பக்கத்தில் பானுமதியின் ஆசைப்படி அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஒருவார காலம் துக்கம் அனுசரிக்கவும் தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைமை வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு