Published:Updated:

``ஒரு போராளியின் முகமல்லவா அந்த முகம்!'' - இந்தி எதிர்ப்புப் போராளி நடராசனின் மறைவு குறித்து அண்ணா!

இந்தி எதிர்ப்பு
இந்தி எதிர்ப்பு

தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முதலில் உயிர்நீத்தவர் நடராசன்.

"பலர் சேர்ந்து ஒரு சமுதாயமாய் ஓர் இனமாய்ப் பழகி வாழ்வதற்குத் துணையாகவுள்ள சிறந்த கருவி மொழியே ஆகும். பலர் ஓர் இனமாய் வாழ்கின்றனர் என்பதற்கு உண்மையான அறிகுறி அவர்களின் நிறம் முதலிய எவையும் அல்ல; அவர்கள் பேசும் மொழியே உண்மையான அறிகுறி எனலாம். சமுதாய வாழ்வுக்கு அறிகுறியாகவுள்ள மொழியே, அந்தச் சமுதாய வளர்ச்சிக்கும் காரணமாக உள்ளது. சமுதாயத்தால் வளர்ந்து சமுதாயத்தை வளர்த்து வருவது மொழி " இந்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் மொழியியல் அறிஞர் ஜே.வென்றிஸ்.

இந்தி எதிர்ப்பு
இந்தி எதிர்ப்பு

இப்படி ஒன்று கூடி வாழ பேரூதவியாக இருக்கும் மொழிக்கான ஆபத்து தமிழகத்தில் பல முறை ஏற்பட்டு இருக்கிறது. தென் மாநிலங்களில் இந்தி மொழியைக் கட்டாயமாக்கப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அப்போதே அதற்கெதிரான போராட்டங்களும் தொடங்கிவிட்டன. மொழிக்கானப் போராட்டம் என்பதைத் தாண்டி தமிழகத்தில் இந்திக்கு எதிராக கருத்துக்கள் உருவாகக் காரணம் தமிழகத்தில் இந்தி திணிப்பு என்பது மொழித்திணிப்பாக அல்லாமல் கலாசாரத் திணிப்பாகவே பார்க்கப்பட்டது, விளைவு பல இடங்களில் தன்னெழுச்சியாக மாணவர்கள் போராடத் தொடங்கினர். அவர்களை கட்டுப்படுத்த இராணுவம் வரவழைக்கப்பட்டு பல உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

14 ஜூலை 1937 -ம் ஆண்டு இராஜாஜி சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்தியை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்து வந்தது. அதை நிறைவேற்றும் விதமாக தான் பொறுப்பேற்ற ஒரு மாதத்திலேயே அனைவரும் இந்தியைக் கற்க வேண்டும் என்ற கொள்கையை அறிமுகப்படுத்தினார். இதற்கு எதிர்ப்பு வந்த போதிலும் அடுத்த ஆண்டு பள்ளிக் கல்வியில் 6,7,8 ஆம் வகுப்புகளுக்கு இந்தி கட்டாயப் பாடமாகக் கொண்டுவரப்பட்டது. இந்தியில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும், இல்லையேல் அவர்கள் தேர்வில் தோல்வியுற்றவராகவே அறிவிக்கப்படுவர் என்ற அறிவிப்பும் வெளியானது.

இந்தி எதிர்ப்பு
இந்தி எதிர்ப்பு

இதன் பிறகுதான் போராட்டம் வலுப்பெறத் தொடங்கியது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பல தலைவர்கள் பங்குபெற்றனர். பல கட்சிகளும் இதனை எதிர்த்து போராடியது. நீதிக்கட்சி, மறைமலை அடிகளார், கா.அப்பாதுரை, முடியரசன், இலக்குவனார், மூவலூர் ராமாமிருதம், நாராயணி, வ.ப.தாமரைக்கனி போன்ற பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டங்கள் தான் தமிழகத்தில் தேசிய கட்சிகள் அல்லாத மாநில கட்சி உருவாக அடிப்படையாக அமைந்தது. மக்களாலும், தலைவர்களாலும் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டங்கள் வலுப்பெற காரணம், போராட்டத்தின் வழியாக நிகழ்ந்த பல உயிர்த் தியாகங்கள்தான்.

ராஜாஜியின் அறிவிப்பால் கொந்தளித்த தமிழகம் பல போராட்டங்களை நடத்தியது. இதில் மாணவர்கள் பலரும் பங்கு கொண்டனர். சென்னை அடையார், தியாலஜிக்கள் பள்ளி முன்பு நடைபெற்ற போராட்டத்தில் நடராசன் என்பவர் போராட்டத்தில் கலந்து கொண்டதால் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆறு மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் நோயால் பல நாட்கள் அவதிப்பட்ட அவரை 30 டிசம்பர் அன்று அரசு மருத்துவமனையில் சேர்த்தது காவல் துறை. பத்து நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடராஜன் 15 ஜனவரி மாதம், 15-ம் தேதி உயிரிழந்தார். நடராஜனின் இழப்பு போராட்டக் களத்தில் பலரையும் அழைத்து வந்தது. பல தலைவர்களும் நாடராஜனின் இறப்புக்குத் தங்களின் கண்டனங்களை முன்வைத்தனர்.

நடராசன் - தாளமுத்து
நடராசன் - தாளமுத்து

நடராசனுக்கு அண்ணாவின் அஞ்சலி உரை:

''அதோ அங்கே படுத்திருக்கிறார் நடராசன். அவருடைய இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டது. அவரது ரத்தம் ஓடுவதை நிறுத்திவிட்டது. அவருடைய கேசம் சிலிர்த்து நிற்கிறது. ஆனால், அவருடைய முகத்தைப் பாருங்கள். தன்னுடைய கலாசாரத்துக்காகவும் விடுதலைக்காகவும் போராடி அப்போரில் தன் இன்னுயிர் ஈந்த ஒரு போராளியின் முகமல்லவா அந்த முகம்? நாம் விரும்பாத ஒரு மொழியை எதிர்த்துப் போரிட்டு ஐயகோ நம்மிடம் இல்லாது மறைந்துபோன நடராசனின் வீர வாழ்வை, நாங்களும் பின்பற்றுவோம் என்று உறுதிகொள்வீர்களா?’’ என உரை நிகழ்த்தினார் அண்ணா.

`அவனுகளை சும்மா விடக் கூடாது என நினைத்தேன்!'- கும்பகோணம் பாலியல் வழக்கில் இறுதிவரை போராடிய இன்ஸ்பெக்டர்

நடராசனுக்குப் பிறகு இந்தித் திணிப்பை எதிர்த்து போராடி உயிர் துறந்தார் தாளமுத்து. ஆனால், இன்றளவும் தாளமுத்து- நடராசன் என நடராசனின் பெயர் இரண்டாவதாகத்தான் உச்சரிக்கப்படுகிறது. தன் பெயர் முதலில் வரவேண்டும் என்பதற்காக நடராசன் போராடியிருக்க மாட்டார். ஒவ்வொரு சொல்லும் பொருள் குறித்தனவே என்று சொல்வது போல, ஒவ்வொரு சொல்லும் அரசியலாக்கப்படும் வராலாறாகப் கவனிக்கப்படும் இன்றைய காலகட்டத்தில், அதை நினைவுபடுத்தவேண்டியது நம் கடமையாக இருக்கிறது.

நடராசன் - தாளமுத்து
நடராசன் - தாளமுத்து

இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடியவர்களுள் உயிரிழந்த முதல் போராட்டக்காரர் நடராசன் என்று சொல்வதைவிட, இந்தி திணிப்பை எதிர்த்து போராடியவர்களுக்குக் கிடைத்த முதல் உந்து சக்தி நடராசன் என்றுதான் எழுத வேண்டும்.

- தனிமொழி

அடுத்த கட்டுரைக்கு