Election bannerElection banner
Published:Updated:

திருச்சி கிழக்கு: தொகுதி மாறும் அன்பில் மகேஷ்?; போட்டிக்கு இனிகோ இருதயராஜ்! -தீராத திமுக பஞ்சாயத்து

உதயநிதி - அன்பில் மகேஷ் - ஸ்டாலின்
உதயநிதி - அன்பில் மகேஷ் - ஸ்டாலின்

திருச்சி வந்த ஸ்டாலினிடம், திருச்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சந்தித்து இத்தொகுதியைக் கூட்டணிக்கு ஒதுக்கவேண்டாம் என்றும், தி.மு.க-வினருக்கு கொடுத்தால் நாங்கள் வேலைப்பார்த்து வெற்றியை உங்களிடம் சமர்ப்பிப்போம் என்று சொல்லி வந்திருக்கிறார்கள்.

’விடியலுக்கான முழக்கம்' என்ற பெயரில் திருச்சி சிறுகனூரில் தி.மு.க சார்பில் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம், மாநாடு போல் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், `தமிழகத்திற்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை ஸ்டாலின் அறிவிக்க இருக்கிறார்’ என முன்னரே தெரிவிக்கப்பட்டது. இதில் பெருமளவில் தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

திருச்சி தி.மு.க கூட்டம்
திருச்சி தி.மு.க கூட்டம்

அப்படி என்ன தான் அறிவிக்கப் போகிறார் என்று எல்லோரது பார்வையும் இம்மாநாட்டை நோக்கியே இருந்தது. இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் திருச்சி கிழக்கு தொகுதியைக் கூட்டணிக்கு ஒதுக்காதீர்கள் என்று தி.மு.க முக்கிய நிர்வாகிகள் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியிருக்கும் சம்பவம்தான் திருச்சி தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அன்பில் மகேஷ் இத்தொகுதியைப் பெற மறைமுகமாகக் காய்நகர்த்திக் கொண்டிருக்கிறார். மகேஷ் ஏன் தொகுதி மாறவேண்டும்? ஏன் கூட்டணிக்கு ஒதுக்கக்கூடாது என்று சொல்கிறார்கள் என்று விசாரிக்கத் தொடங்கினோம்.

திருச்சி கிழக்கு தொகுதியைக் கைப்பற்ற தி.மு.க முக்கிய நிர்வாகிகள் பலர் கடுமையாகக் காய்நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சத்தமே இல்லாமல் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பேயிருந்தே பிரசார வேலைகளைத் தொகுதியில் செய்துகொண்டிருக்கிறார் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ்.

ஆதரவாளர்களுடன்  இனிகோ இருதயராஜ்
ஆதரவாளர்களுடன் இனிகோ இருதயராஜ்

இத்தொகுதியில், சமூக வாக்குகளும், இஸ்லாமிய வாக்குகளும் கணிசமாக இருப்பதால் சுலபமாக வெற்றி பெறலாம் எனக் கணக்கைப் போட்டு ஸ்டாலினிடம் பேச, அவரும் க்ரீன் சிக்னல் கொடுத்ததாக தொகுதியில் பம்பரமாய் சுழன்றுகொண்டிருக்கிறார். ஆனால் களம் வேறுமாதிரியாக இருக்கிறது என்கிறார்கள் தி.மு.க வினர். இத்தொகுதியைக் கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுக்கவேண்டாம். தி.மு.க-வினருக்கு ஒதுக்குங்கள் என்று சொல்வதற்குக் காரணமும் இருக்கிறது.

திருச்சி கிழக்கு தொகுதியைக் குறிவைத்து அன்பில் மகேஷ் இன்றளவும் காய்நகர்த்தி வருகிறார். காரணம் திருவெறும்பூர் தொகுதியில் சொல்லிக் கொள்ளும்படியாக எதுவும் செய்யாதது, கட்சி நிர்வாகிகளை மகேஷ் அனுசரித்து போகாதது, அவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திறுவெறும்பூர் ஒன்றியசெயலாளர் நவல்பட்டு விஜியை தற்காலிகமாக நீக்கியதும் மகேஷ் தான்.

நவல்பட்டு விஜி
நவல்பட்டு விஜி

அதனால் அவர் மகேஷுக்கு எதிராக வேலை செய்து அவரை தோற்கடிக்க நேரிடும் என பல்ஸ் தெரிந்துகொண்டு உதயநிதி, மற்றும் துர்கா ஸ்டாலின் மூலமாகக் காய்நகர்த்திக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான் திருச்சி வந்த ஸ்டாலினிடம், திருச்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சந்தித்து இத்தொகுதியைக் கூட்டணிக்கு ஒதுக்கவேண்டாம் என்றும், தி.மு.க-வினருக்கு கொடுத்தால் நாங்கள் வேலைப்பார்த்து வெற்றியை உங்களிடம் சமர்ப்பிப்போம் என்று சொல்லி வந்திருக்கிறார்கள்.

`திருச்சி கிழக்குக்கு நான்தான் வேட்பாளர்!’ - இனிகோ இருதயராஜ்-க்கு எதிராகக் கொதிக்கும் தி.மு.க-வினர்

ஸ்டாலினைச் சந்தித்து வந்த தி.மு.க நிர்வாகிகளிடம் பேசினோம். ”இதுவரை தி.மு.க கூட்டணியில் நின்று திருச்சியில் வெற்றி பெற்ற வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் யாரும் திருச்சியில் தங்கி பணிபுரிந்ததாகச் சரித்திரமே இல்லை. உதாரணமாகத் தலித் எழில்மலை, எல்.கணேசன், திருநாவுக்கரசு. இவர்கள் எம்.பி-க்கள் ஆனாலும் இவர்கள் வெற்றி பெற்ற பிறகு தொகுதிக்குள் வரவே இல்லை.

உதயநிதி - அன்பில் மகேஷ் - ஸ்டாலின்
உதயநிதி - அன்பில் மகேஷ் - ஸ்டாலின்

தற்போது இனிகோ இருதயராஜும் சென்னை வாசி. இவர் திருச்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அதன் பிறகு ஐந்து வருடம் இவரைப் பார்க்கவே முடியாது. வாக்கு கேட்ட எங்களுக்குத் தான் கெட்ட பெயர் ஏற்படும். இத்தொகுதியை இங்குள்ள தி.மு.க நிர்வாகிகளுக்கு ஒதுக்கினால் இங்குள்ள நல்லது கெட்டது அனைத்தும் தெரியும். மக்களுக்குப் பயந்து அவர்களே வேலை செய்வார்கள். ஆனால் இவர் பணம் இருந்தால் போதும் எல்லாத்தையும் விலைக்கு வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார்.

மு.க.ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின்

இவரின் முகத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்காக போஸ்டர்கள், தினசரிப் பத்திரிகைகள், ஐடி டீம் எனப் பல கோடிகளை வாரி இறைத்துக்கொண்டிருக்கிறார். இரண்டு மூன்று மாதங்களாக வேலை செய்துவருகிறார். இன்று வரையிலும் தி.மு.க நிர்வாகிகளை கண்டுகொள்ளவில்லை. அதேபோல் சிறுகனூரில் நடந்த தி.மு.க மாநாட்டிற்குத் தலைமை பணம் கேட்டிருக்கிறது. அவர்கள் எதிர்பார்த்த பணத்தைக் கொடுக்கவில்லையாம். இதனால் தலைமை இவர் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் வேட்பாளர்கள் மாற்றம் இருக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் சொல்கிறார்கள்” தி.மு.க-வினர்.

இனிகோ இருதயராஜ்
இனிகோ இருதயராஜ்

இது குறித்து இனிகோ இருதயராஜ் ஆதரவாளர்கள் தரப்பில் பேசினோம்.``தளபதி வாக்குறுதி கொடுத்தப்பிற்கு தான் இத்தொகுதியில் அண்ணன் வேலைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். தி.மு.க நிர்வாகிகள் ஏன் எதற்காக இப்படிச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. வேட்பாளர் பட்டியல் அறிவித்தவுடன் முறையாகச் சந்திப்பார். இதில் எந்த மாற்றமும் இல்லை” என்றார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு