Published:Updated:

உதயநிதியை உசுப்பேற்றுகிறதா ஐ-பேக்?! - பிரசாரத்தின்போது நடந்த கைதின் பின்னணி

உதயநிதி
உதயநிதி

கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளையில் தி.மு.க-வின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தைத் தொடங்கினார்.

தமிழகம் முழுக்கத் தேர்தல் அலை வீசத் தொடங்கிவிட்டது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகளும், வெற்றி பெறுவதற்கான திட்டமிடல்களும் முழுவீச்சில் நடந்துவருகின்றன. தி.மு.க-வும் நேற்றைய தினம் தனது பிரசாரத்தைத் தொடங்கிவிட்டது. 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' எனத் தேர்தல் பரப்புரைக்கான திட்டத்தை வகுத்து, 15,000 கி.மீ பயணம், 1,500 கூட்டங்கள், 15 தலைவர்கள் என மெகா பிரசாரப் பயணத்துக்குத் தயாராகிவிட்டது. கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளையில் தி.மு.க-வின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தைத் தொடங்கினார். பிரசாரத்தின்போது கைதுசெய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டார். இந்தப் பிரசாரத்துக்கு முழுக்கவே ஐ-பேக் டீம் உதயநிதிக்கு தனியாக ஒரு செயல்திட்டத்தை வகுத்துக் கொடுத்திருக்கிறது.

திருச்சியில் உதயநிதி
திருச்சியில் உதயநிதி

நேற்றைய தினத்தின் பிரசாரத்துக்கு முன்பே உதயநிதியைக் கைதுசெய்யப்போகிறார்கள் என்ற செய்தி அவருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால், `பிரசாரத்தைத் தள்ளி வைக்கலாமா?' என உதயநிதி தரப்பிலிருந்து ஐ-பேக் டீ மிடம் கேட்டிருக்கிறார்கள். ஆனால், `கைதுசெய்யட்டும்; கைதுக்குப் பிறகு மறுநாளும் பிரசாரத்துக்குத் தயாராகுங்கள்’ என ஐ-பேக் டீமிடமிருந்து உத்தரவு பறந்திருக்கிறது. அதுமட்டுமின்றி உதயநிதியின் கூடவே பயணிக்க ஒரு வீடியோ டீமையும் அனுப்பிவைத்திருக்கிறார்கள். அதன்படி உதயநிதி கைதாவது குறித்த வீடியோ, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரலாக்கி, உதயநிதியை தி.மு.க-வின் முகமாக இந்தத் தேர்தலில் உருவாக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறது ஐ-பேக் டீம். உதயநிதி ஐ-பேக்கின் ஆலோசனையோடு , தனக்கென, தான் வைத்திருக்கும் ஐடி டீமின் ஆலோசனையையும் கேட்டு, தனது பிரசாரத்தைத் தொடர்ந்துவருகிறார்.

அடுத்த கட்டுரைக்கு