Published:Updated:

``பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக வலுவான சட்டங்கள் வேண்டும்”-அன்புமணி ராமதாஸ்!

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

``பாலியல் வன்கொடுமைக்கு எதிராக வலுவான சட்டங்கள் இயற்றப்பட்டு, கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டால் மட்டுமே இதுபோன்ற தவறுகள் நடக்காமல் தடுக்க முடியும்” என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலப் பொருளாளர் திலகபாமாவின் இல்லத் திருமண விழாவில் பா.ம.க நிறுவனத் தலைவர் ராமதாஸ், பொதுச்செயலாளர் ஜி.கே.மணி, இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், எம்.பி-யுமான அன்புமணி ராமதாஸ்,

திருமண விழாவில் பா.ம.க நிர்வாகிகள்
திருமண விழாவில் பா.ம.க நிர்வாகிகள்

``தமிழகத்தில் குழந்தைகள், பெண்களுக்கு மத்தியில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாலியல் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகபட்ச தண்டனையான தூக்குத்தண்டனை வழங்கிட வேண்டும். பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டுவர வேண்டும். சட்டங்களும், தண்டனைகளும் கடுமையாகும்போதுதான் இதுபோன்ற தவறுகள் தடுக்கப்படும்.

சிவகாசியில் பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த 3-ம் வகுப்பு பயின்றுவந்த 8 வயது மாணவியின் குடும்பத்துக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்குவதுடன், அந்தக் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும். நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை தொடர்ந்து தள்ளிப்போகிறது. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தள்ளி வைக்கக் கூடாது.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு நடத்தப்பட உள்ள பொதுத்தேர்வை தமிழக அரசு, உடனே திரும்பப் பெற வேண்டும். இந்தத் தேர்வுகளில் மாணவர்கள் தோல்வியுறும் பட்சத்தில் கல்வியைப் பாதியில் நிறுத்தும் அபாயம் உள்ளது. 10-ம் வகுப்பு வரை நூறு சதவிகிதத் தேர்ச்சி என்பதே பா.ம.க-வின் நிலைப்பாடு.

ஹைட்ரோ கார்பன் திட்டம் என்பது தேவையில்லாத ஒரு திட்டம். தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஸ்டாலின் கையொப்பமிட்டு தொடங்கிய திட்டம்தான் அது. டெல்டா பகுதி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உணவு வழங்கும் பகுதியாக இருக்கிறது இதைச் சேதப்படுத்தி, நாசப்படுத்துவதை ஏற்றுக் கொள்ளக் கூடாது. காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

செய்தியாளர் சந்திப்பு
செய்தியாளர் சந்திப்பு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் நடைபெற்ற மோசடியில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் கைது செய்து, உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்து முழுமையான விசாரணை நடத்திட வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்வுகள் அனைத்தையும் சோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் பூரண மதுவிலக்கை தற்போது ஏற்றுக்கொள்கிறார்கள். தமிழக அரசுக்கு நாங்கள் தொடர்ச்சியாகக் கொடுத்துவரும் அழுத்தம்தான் அதற்குக் காரணம்” எனக் கூறினார்.

பின் செல்ல