Published:Updated:

`அண்ணனுக்கு ஒண்ணுமில்ல... லோ பிரஷர்தான்' - மு.க.அழகிரிக்கு திடீர் உடல்நலக் குறைவு?

செ.சல்மான் பாரிஸ்
வி.சதிஷ்குமார்

திடீரென மு.க.அழகிரிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவரின் ஆதரவாளர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

மு.க.அழகிரி
மு.க.அழகிரி ( வி.சதீஷ்குமார் )

அரசியலில் ஏற்பட்டுள்ள பின்னடைவால் மனம் வெறுத்துப் போயிருந்த மு.க.அழகிரிக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவலால் அவரின் ஆதரவாளர்கள் கவலையடைந்தனர். சாதாரண உடல் நோவுதான் என்று தெரிந்த பின்பு, தற்போது அமைதி அடைந்துள்ளார்கள்.

alagiri
alagiri

தி.மு.க-விலிருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, கருணாநிதி மரணத்துக்குப் பின் மீண்டும் தி.மு.க-வில் சேர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று அவருடைய ஆதரவாளர்கள் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால், மு.க.ஸ்டாலின் தரப்பு அதற்கு ஒப்புக்கொள்ளாததால் மீண்டும் கட்சியில் சேர முடியாமல் எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக அனைத்தையும் பார்த்து வருகிறார்.

கருணாநிதி மரணத்துக்குப் பின், சென்னையில் ஆதர்வாளர்களை திரட்டி அமைதிப்பேரணி நடத்தி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தினார். ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். ஆனால், அதற்குப் பின் எந்த நடவடிக்கையும் இல்லை. மகன், மகள், பேரப்பிள்ளைகளோடு பொழுதைக் கழித்துக்கொண்டும் ஆதரவாளர் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டும் இருந்தார்.

alagiri
alagiri

இந்த நிலையில்தான் இரண்டு நாள்களுக்கு முன் அவருக்கு உடல் நலம் சரியில்லாததால் வீட்டுக்கு மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்துள்ளனர். இத்தகவல் தெரிந்து அவர் வீட்டுக்கு ஆதரவாளர்கள் வரத் தொடங்கினார்கள். அவரை, தொண்டர்கள் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

அழகிரிக்கு மிகவும் நெருக்கமான முன்னாள் துணைமேயர் பி.எம்.மன்னனிடம் கேட்டோம், ''ஒண்ணுமில்லை, லோ பிரஷ்ஷர், அதனால் கொஞ்சம் உடல் நலமில்லாமல் போய்விட்டது. அன்றைக்கு கட்சிக்காரர் வீட்டு விசேஷத்துக்குப் போயிட்டு வரும்போது இப்படி ஆயிடுச்சு. சிகிச்சைக்குப் பின் இப்ப பரவாயில்லை. ஓய்வில் இருக்கிறார்'' என்றார்.

PM mannan and alagiri
PM mannan and alagiri

தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை என்ற மனக்கவலையே அவருக்கு உடல்நலத்தையும் பாதித்துள்ளது என்கிறார்கள் அழகிரியின் ஆதரவாளர்கள்.