Published:Updated:

உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் முதல்வர் பதவியிலிருந்து விலகிய உத்தவ் தாக்கரே... புதிய அரசு எப்போது?!

ராஜினாமா கடிதம் கொடுத்த உத்தவ்

நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டதால் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் முதல்வர் பதவியிலிருந்து விலகிய உத்தவ் தாக்கரே... புதிய அரசு எப்போது?!

நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டதால் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Published:Updated:
ராஜினாமா கடிதம் கொடுத்த உத்தவ்

மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்த சிவசேனா தலைமைக்கு எதிராக 50 எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி தூக்கினர். அவர்கள் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாகப் பிரிந்து சென்றனர். அவர்களில் 40 பேர் சிவசேனா எம்.எல்.ஏ-க்கள். அவர்கள் அனைவரும் குஜராத் வழியாக அஸ்ஸாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கவுஹாத்தியில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்களை மீண்டும் கட்சிக்கு இழுக்க உத்தவ் தாக்கரே மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. அவர்களில் 16 பேர்மீது கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று துணை சபாநாயகர் நர்ஹரி நோட்டீஸ் அனுப்பினார். இதையடுத்து துணை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் நோட்டீஸ் கொடுத்திருந்தனர்.

எம்.எல்.ஏ-க்களுடன் பட்னாவிஸ்
எம்.எல்.ஏ-க்களுடன் பட்னாவிஸ்

ஆனால் அந்த நோட்டீஸ் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து கட்சித்தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தங்கள் மீது நடவடிக்கை எடுக்க தடைவிதிக்கவேண்டும் என்று கோரி 16 எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் ஜூலை 12-ம் தேதி வரை சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மீது கட்சித்தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது.

இதையடுத்து சட்டமன்றத்தில் 30-ம் தேதி காலை 11 மணிக்கு பெரும்பான்மையை நிரூபித்துக்காட்டும்படி உத்தவ் தாக்கரே அரசுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷாரியா உத்தரவிட்டார். இதை எதிர்த்து சிவசேனா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் சூர்யகாந்த், பி.பார்த்திவாலா அடங்கிய அமர்வு, வியாழக்கிழமை சட்டமன்றத்தில் நடக்கவிருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்குத் தடைவிதிக்க மறுத்துவிட்டது. அதேசமயம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டதாக இருக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உச்ச நீதிமன்றத்தில் விவாதம் நடந்துகொண்டிருந்தபோது மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஒளரங்காபாத் நகரத்துக்கு சாம்பாஜி நகர் என்றும், ஒஸ்மனாபாத் நகரத்துக்கு தாராசிவ் என்றும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று அமைச்சர் அனில் பரப் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்தவுடன் உத்தவ் தாக்கரே ஆன்லைன் மூலம் உரையாற்றினார்.

அதில், `எனது முதல்வர் பதவி மற்றும் சட்டமேலவை உறுப்பினர் பதவி இரண்டையும் ராஜினாமா செய்கிறேன். நான் எதிர்பாராமல் ஆட்சிக்கு வந்தேன். அதே போன்று ஆட்சியிலிருந்து செல்கிறேன். நான் எங்கேயும் போய்விடவில்லை. இங்குதான் இருக்கிறேன். சிவசேனா பவனில் அமருவேன். எனது ஆட்களைக் கூட்டுவேன். எனக்கு ஆதரவளித்த தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியினருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். பதவியைவிட்டு விலகுவதற்காக நான் வருத்தப்படவில்லை. அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மும்பைக்குத் திரும்ப சிவசேனா தொண்டர்கள் அனுமதிக்க வேண்டும். போராட்டம் எதுவும் நடத்த வேண்டாம். சிவசேனா மற்றும் பால் தாக்கரேயால் வளர்ச்சியடைந்த அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் தாக்கரேயின் மகனை முதல்வர் பதவியிலிருந்து இறக்கியதற்காக மகிழ்ச்சியடையட்டும்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் சூரத் அல்லது கவுஹாத்திக்குச் செல்லாமல் நேரடியாக என்னிடம் வந்து தங்களது கருத்தைச் சொல்லியிருக்கலாம். சிவசேனா சாமானிய மக்களின் கட்சி. பல சவால்களைச் சந்தித்து வெற்றிபெற்றிருக்கிறது. சிவசேனாவை மீண்டும் புதிதாக உருவாக்குவோம்” என்று தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே ஆளுநர் மாளிகைக்குச் சென்று பகத்சிங் கோஷாரியாவைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். உத்தவ் தாக்கரே பதவி விலகியிருப்பதால் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக அரசு விரைவில் (நாளை) பதவியேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்ஸாமில் தங்கியிருந்த சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் நேற்றே கோவாவுக்கு வந்துவிட்டனர். அவர்கள் இன்று மும்பைக்குத் திரும்புகின்றனர். முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தனது கட்சி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ-க்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.