Published:Updated:

`குமரி மண்ணில் கலவரத்தைத் தூண்டப் பார்க்கிறீர்கள்!' -பொன்னாரைச் சாடிய சுரேஷ்ராஜன்

சுரேஷ்ராஜன்
சுரேஷ்ராஜன்

குமரியில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து குமரிவாழ் மக்களின் வாக்குகளைப் பெற்று அமைச்சராக இருந்த நீங்கள் இத்தகைய கருத்துகளை வெளியிட்டு அமைதிப் பூங்காவான நம் மாவட்டத்தை ஒரு கலவர மாவட்டமாக மாற்ற நினைப்பது என்ன நியாயம்?

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள், காங்கிரஸ் எம்.பி. ஆகியோரைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்துவருகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். களியக்காவிளையில் எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை சம்பந்தமாக தி.மு.க, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சட்டசபையில் பேசவில்லை என்று ஆரம்பத்தில் கூறிவந்தார்.

இந்த நிலையில், குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக குமரி மாவட்டத்தில் நடக்கும் கூட்டங்களில் பேசும் பொன்.ராதாகிருஷ்ணன், `இஸ்லாமியர்களைப் போராட்டத்துக்கு தி.மு.க தூண்டிவிடுகிறது' எனப் பேசியிருந்தார். இதற்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான சுரேஷ்ராஜன் தனது முகநூல் பக்கத்தில் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

சுரேஷ்ராஜன் முகநூல் பதிவு
சுரேஷ்ராஜன் முகநூல் பதிவு

சுரேஷ்ராஜன் தனது முகநூல் பதிவில், ` முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பொதுக்கூட்டத்தின் வாயிலாக சில இடங்களில் ஆற்றி வருகின்ற கருத்துரை குமரி மாவட்ட மக்கள் உள்ளத்தை வேதனைப்படுத்தியுள்ளது. நம் மாவட்டத்தில் பல்வேறு மதம், இனம், மொழி சார்ந்த மக்கள் வசித்து வருகிறார்கள். ஆனால் நம்முடைய ஒற்றுமையை, சகோதரத்துவத்தைப் பாதுகாத்து வருகிறோம் என்பதில் நமது மாவட்ட மக்களுக்குப் பெருமை உண்டு. குமரியில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து குமரிவாழ் மக்களின் வாக்குகளைப் பெற்று அமைச்சராக இருந்த நீங்கள் இத்தகைய கருத்துகளை வெளியிட்டு அமைதிப் பூங்காவான நம் மாவட்டத்தை ஒரு கலவர மாவட்டமாக மாற்ற நினைப்பது என்ன நியாயம்?

Vikatan

குமரி மாவட்ட மக்களின் எண்ணங்களில் மதம் எதுவாக இருந்தாலும் மனித நேயமும், ஒற்றுமையும்தான் முக்கியமென்று வாழ்கின்றனர். பல்வேறு இடங்களில் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடன் காவல்துறையின் ஒற்றர்கள் மூலமாக அரசியல்ரீதியான செய்திகள் அதிகரித்து வருகின்றன. மேலும், வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒரு கலவரத்தை உண்டாக்கிவிட வேண்டும் என்ற நோக்கோடு சமீபத்தில் நடைபெற்ற சில பொதுக்கூட்டங்களிலும் நீங்கள் பேசிவருகிறீர்கள். அது ஊடகங்களில் வைரலாகப் பரவியிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கக் கூடும்.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

அவரவர் கொள்கையில் வெற்றியடைவதில் ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் உரிமை உண்டு. உங்கள் அகில இந்திய பா.ஜ.க தலைவர்களைப் போன்று ஆணவம் கலந்த கருத்துகளை வெளியிட்டு வருகிறீர்கள். ஒரே குடும்பத்தில் அண்ணன், தம்பியாக இந்து, கிறிஸ்துவர், இஸ்லாமியர் ஆகிய அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதைப் பார்க்கிறோம்.

மத்திய அமைச்சராக இருந்தவர் ஒரு கலவரத்தை உருவாக்க நினைக்கின்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்று தூண்டுகின்ற செயல்களில் ஈடுபடுகின்றவர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தையும் காவல்துறையையும் கேட்டுக்கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு