Published:Updated:

டெல்லி: 'கொரோனா பரவலுக்கு தப்லீக் ஜமாத் மாநாடும் ஒரு காரணம்!’ - மத்திய உள்துறை அமைச்சகம்

மாநிலங்களவை
மாநிலங்களவை

`இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவியதற்கு, டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லீக் ஜமாத் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களும் ஒரு காரணம்’ என்று மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் தனது எழுத்துபூர்வ பதிலில் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய காலகட்டத்தில், டெல்லி தப்லீக் ஜமாத்தில் நடந்த கூட்டம் குறித்துப் பரபரப்பாகப் பேசப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்ட பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் இன்று மாநிலங்களவையில் தப்லீக் ஜமாத் தொடர்பாக சிவசேனா உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்விக்கு எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி.

அந்த பதிலில் டெல்லியிலும், மற்ற மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பரவியதற்கு இந்த மாநாடும் ஒரு முக்கியக் காரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ``டெல்லி காவல்துறையின் தகவல்களின்படி, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டிருந்தன. அந்த உத்தரவுகளையும் மீறி, சிறிய பகுதியில் தப்லீக் ஜமாத் மாநாட்டுக்காக மிகப்பெரிய கூட்டம் கூடியது.

தப்லீக் ஜமாத் மாநாடு
தப்லீக் ஜமாத் மாநாடு

அந்தக் கூட்டத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. முகக்கவசம் அணிவது, கைகளைச் சுத்தம் செய்வது போன்றவை சரிவர கடைப்பிடிக்கப்படவில்லை. இது போன்றவை அங்கிருந்த பலருக்கும் கொரோனா வைரஸ் பரவக் காரணமாகின.

கடந்த மார்ச் 29-ம் தேதி, டெல்லி நிஜாமுதீன் பகுதியிலிருந்தும், தப்லீக் ஜமாத்தின் தலைமையகத்திலிருந்தும் 2,361 பேர் டெல்லி காவல்துறையால் அப்புறப்படுத்தப்பட்டனர். மேலும், 233 பேர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். இது தொடர்பாக தப்லீக் ஜமாத்தின் தலைவர் மவுலானா முகமது சாத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையும் நடந்துவருகிறது" என்று தெரிவித்திருக்கிறார் கிஷன் ரெட்டி.

மேலும், அனுமதியின்றி தப்லீக் ஜமாத் கூட்டத்தைக் கூட்டியது, முறையான விசா பெறாமல் வெளிநாட்டவர் இந்தியா வந்து மாநாட்டில் கலந்துகொண்டது போன்ற காரணங்களுக்காக, டெல்லி காவல்துறையினர், தொற்று நோய் பரவல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் பலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு