Published:Updated:

ஆப்கனில் தாலிபன் ஆட்சி; சவாலைச் சமாளிக்குமா இந்தியா?!

ஆப்கனில் போர் முடிந்துவிட்டதாக அமெரிக்கா கூறியது தவறு. உண்மையில், போர் இப்போதுதான் மீண்டும் தொடங்கியிருக்கிறது. அதிலிலும், தாலிபன்களால் இந்தியா சந்திக்கவேண்டிய சவால்கள் லேசுப்பட்டதல்ல.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

20 வருடங்களுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபன்களின் ஆட்சி, கொடிநாட்டியிருக்கிறது. பெரிய அளவில் எந்த எதிர்ப்பும் இல்லாமல், நாட்டின் அதிகாரத்தை தாலிபன்கள் கைப்பற்றியிருக்கிறார்கள். ஆப்கனில் அமைதியை நிலைநாட்டுவதற்காக, அந்த நாட்டின் உள்கட்டமைப்பில் பல நூறு கோடி ரூபாயை இறைத்திருக்கிறது இந்தியா. சல்மா அணைக்கட்டு முதற்கொண்டு, ஆப்கன் நாடாளுமன்றக் கட்டடம் வரை பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் இந்தியாவால் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இது குறிப்பிட்டுப் பேசியிருக்கும் தாலிபன்களின் செய்தித் தொடர்பாளர் முகமது சுஹைல் ஷஹீன், ``எங்கள் நாட்டின் வளர்ச்சியில் இந்தியா பங்குகொண்டதை வரவேற்கிறோம். அதேநேரத்தில், எங்கள் நாட்டைத் தங்களின் ராணுவத்தளமாக இந்தியா மாற்ற முற்பட்டால், அதற்கான விளைவுகளைச் சந்திக்கவேண்டியிருக்கும். ஆப்கானிஸ்தானில் கால்பதித்த பெரிய சாம்ராஜ்ஜியங்களே காணாமல் போய்விட்டதை இந்தியா நினைவில்கொள்ள வேண்டும்” என்றிருக்கிறார். இந்த வார்த்தைகள் இந்தியாவுக்கு எதிரான மன ஓட்டத்தில் தாலிபன்கள் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன என்கிறது விவரமறிந்த வட்டாரம்.

முல்லா பதுல் கானி பராதருடன் வாங் லீ
முல்லா பதுல் கானி பராதருடன் வாங் லீ

சூழலை மாற்றிய தியான்ஜின் சந்திப்பு

யார் இந்த தாலிபன்கள், அமெரிக்கா ஏன் பின்வாங்கியது, ஆப்கானிஸ்தானில் நடப்பது என்ன? - 1

கடந்த ஜூலை 28-ம் தேதி யாரும் எதிர்பாராத ஒரு சந்திப்பு, சீனாவின் தியான்ஜின் நகரில் நடந்தது. சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் லீயும், தாலிபன்களின் அரசியல் பிரிவுத் தலைவர் முல்லா அப்துல் கானி பராதரும் சந்தித்துப் பேசினர். ஆப்கானிஸ்தானுடன் 76 கி.மீ நில எல்லையை சீனா கொண்டிருக்கிறது. ஜின்ஜியாங் மாகாணத்திலுள்ள உய்குர் முஸ்லிம்கள் மீதான சீனாவின் அடக்குமுறை, முஸ்லிம்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்தக் கோபம் தனக்கெதிராக வெடித்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் சீனா, முதற்கட்டமாக தாலிபன்களுடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கொண்டதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

நம்மிடம் பேசிய இந்திய வெளியுறவுப்பணி அதிகாரி ஒருவர், ``ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியைப் பிடிப்பது உறுதியானவுடன், அப்துல் கானி பராதருடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்தியது சீனா. `சீனாவுக்கு எதிராக எந்த ஆயுதக் குழுக்களும் ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுவிடாதபடி தடுக்க வேண்டும்’ என்று இந்தப் பேச்சுவார்த்தையில் வாங் லீ கேட்டுக்கொண்டார். அதை தாலிபன்களும் ஏற்றுக்கொண்டார்கள். இதற்குப் பிரதிபலனாக, ஆப்கானிஸ்தானுக்குத் தேவைப்படும் நிதியுதவியை அளிப்பதாக சீனா வாக்குறுதி அளித்திருக்கிறது. சீனாவின் கனவுத் திட்டமான `பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தில் ஆப்கானிஸ்தானையும் இணைக்க பீஜிங் திட்டமிடுகிறது. இதன் மூலம், மத்திய ஆசிய நாடுகளை பாகிஸ்தானிலுள்ள குவாடர் துறைமுகத்துடன் இணைக்கும் போக்குவரத்துக்கு சீனா அடித்தளமிடுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் தாலிபன்கள்
சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் தாலிபன்கள்

ராணுவரீதியாக இந்தியாவுக்கு அடி!

பொதுவாகப் பார்த்தால் இவையெல்லாம் வளர்ச்சித் திட்டங்கள்போலத் தோன்றும். ஆனால், இவை இந்தியாவுக்கு வைக்கப்படும் குறி. இந்தியாவைச் சுற்றியிருக்கும் நாடுகளுக்கு பொருளாதார நிதியுதவி அளிப்பதுபோல, அந்த நாடுகளைத் தனக்கு கடனாளியாக்க முற்படுகிறது சீனா. இதன் மூலமாக, அந்தந்த நாடுகளின் அரசியலில் தன் ஆளுமையைச் செலுத்த முயல்கிறது. மொரீஷியஸ், இலங்கை நாடுகள் ஏற்கெனவே சீனாவின் மறைமுக ஆளுகைக்குள் போய்விட்டன. பாகிஸ்தான் பற்றிக் கேட்கவே வேண்டாம். நேபாளத்தில் தற்போதுதான் இந்தியாவுக்குச் சாதகமான ஒருவர் பிரதமராக வந்திருக்கிறார். ஆனாலும், நேபாளத்தில் இந்தியாவுக்கு எதிரான கொள்கைகள் தொடரத்தான் செய்கின்றன. இப்போது, ஆப்கானிஸ்தானும் சீனாவின் மறைமுகக் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது. தஜிகிஸ்தானில் ஃபர்க்ஹோர் விமான தளம் இந்திய விமானப்படையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதேபோல, ஒரு விமான தளத்தை ஆப்கானிஸ்தானில் நிறுவி, ராணுவரீதியாக பாகிஸ்தானைச் சுற்றிவளைக்க வேண்டுமென்பதுதான் இந்தியாவின் திட்டம். இதையெல்லாம் தாலிபன்களின் வருகை தவிடுபொடியாக்கிவிட்டது.

ஆப்கன்: `மூடப்பட்ட காபூல் விமான நிலையம்... திடீர் துப்பாக்கிச்சூடு’ -இந்தியர்களை மீட்பதில் சிக்கல்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தாலிபன்களுக்கு பாகிஸ்தானும் சீனாவும் ஆதரவளிப்பது ராணுவரீதியாக இந்தியாவுக்குப் பெரும் சவால்தான். ஆப்கானிஸ்தானில் இதுவரை இந்தியா செய்திருந்த முதலீடுகளுக்கு பிரயோசனம் இல்லாமல் போய்விட்டது. ஆப்கன் ராணுவத்துக்கு இதுவரை நான்கு எம்.ஐ-35 ரகம், மூன்று சீட்டா ரக ஹெலிகாப்டர்களை இந்தியா அளித்திருக்கிறது. தன்னுடைய ராணுவக் கூட்டளியாக ஆப்கன் ராணுவத்தை இந்தியா மாற்ற முனைந்ததை தாலிபன்கள் ரசிக்கவில்லை. இப்போது அவர்கள் அதிகாரத்தை அடைந்திருப்பதால், இந்தியாவுக்கு எதிராக ராஜாங்கரீதியிலான நெருக்குதலை சீனா, பாகிஸ்தானுடன் இணைந்து மேற்கொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. பெண்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி, அனைவருக்கும் பொது மன்னிப்பு என ஜனநாயகரீதியில் தாங்கள் திரும்பிவிட்டதாகத் தாலிபன்கள் காட்டிக்கொள்கிறார்கள். அவர்களை நம்பிக்கொண்டிருக்காமல், காஷ்மீரிலும் பஞ்சாபிலும் இந்தியா தன் பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்ளவேண்டிய நேரமிது” என்றார்.

ஆப்கன் அதிபர் மாளிகையில் தாலிபன்கள்
ஆப்கன் அதிபர் மாளிகையில் தாலிபன்கள்

அதிகரிக்குமா எல்லை தாண்டிய பயங்கரவாதம்?

தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையிலும் சரிவைச் சந்திக்கவிருக்கிறது இந்தியா. ஆப்கனில் தாலிபன்களின் ஆட்சி அமைந்திருப்பதால், அங்கு இருக்க முடியாத தீவிரவாத இயக்கங்கள் புதிய புகலிடம் தேடவேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றன. குறிப்பாக, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை தாலிபன்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சமீபத்தில், தங்கள் சகாக்களைப் பல்வேறு சிறைச்சாலைகளிலிருந்து தாலிபன்கள் விடுதலை செய்தபோது, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை மட்டும் விடுதலை செய்யவில்லை. இப்போது, ஆப்கனில் எஞ்சியிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் குழுக்கள் காஷ்மீரை நோக்கி நகரும் ஆபத்து இருக்கிறது. காஷ்மீரில் ஏற்கெனவே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் பிரிவு தொடங்கப்பட்டிருப்பதால், அங்கு பாதுகாப்பை உறுதி செய்வது இந்தியாவுக்குச் சவாலான காரியம்தான்.

தாலிபன்கள் கையில் ஆப்கானிஸ்தான்.. இந்தியாவுக்கு பேராபத்தா? | Elangovan Explains

ஆப்கானிஸ்தானையும் பாகிஸ்தானையும் `துரந்த் கோடு’ என்கிற எல்லைக்கோடுதான் பிரிக்கிறது. இதை பஸ்தூன் பழங்குடியினர் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த எல்லைப்புறப் பகுதிகளில் லஸ்கர் -இ -தொய்பா, ஜெய்ஷ் - இ -முகம்மது, தெஹ்ரிக்- இ- பாகிஸ்தான் போன்ற தீவிரவாத இயக்கங்கள் செயல்படுகின்றன. பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராகத் தாக்குதலை நடத்திவிட்டு, ஆப்கானிஸ்தானில் பதுங்கிக்கொள்வதை தெஹ்ரிக் - இ- பாகிஸ்தான் அமைப்பு வழக்கமாக்கியிருந்தது. இனி அதுபோல ஆப்கனில் அவர்களால் பதுங்க முடியாது. பாகிஸ்தானுக்குள்ளும் அவர்களால் இருக்க முடியாது. அந்த இயக்கம் சிதற வாய்ப்பிருக்கிறது. இப்படிச் சிதறும் இது போன்ற இயக்கங்களால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்.

ரகசிய கூட்டத்தில் அம்ருல்லாஹ் சலேஹ், அஹ்மத் மசூத்
ரகசிய கூட்டத்தில் அம்ருல்லாஹ் சலேஹ், அஹ்மத் மசூத்

இப்போதைக்கு, ஆப்கனில் நடப்பதை அமைதியாக கவனித்துக்கொண்டு மட்டுமே இருக்கிறது இந்தியா. அங்குள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக இந்தியாவுக்குக் கொண்டுவரும் பணிகள் துரிதமாகியிருக்கின்றன. ஆப்கானிஸ்தானின் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லாஹ் சலேஹ், அரசியல் பிரமுகர் அஹ்மத் மசூத் இருவரும் இணைந்து தாலிபன்களுக்கு எதிரான ஒரு கூட்டணியைக் கட்டமைக்க முயல்கிறார்கள். ஒருவேளை தாலிபன்கள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினால், அம்ருல்லாஹ் கட்டமைக்கும் கூட்டணிக்கு இந்தியா மறைமுக ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாலிபன்களால் இந்தியா பல சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு