Published:Updated:

`இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும்!’ - திவாகரன், அமைச்சர் காமராஜ் சந்திப்பில் நடந்தது என்ன?

திவாகரன்
திவாகரன்

சிறை நன்னடத்தை, விடுமுறை கழித்தல், கன்னட மொழியை கற்றதால் கொடுக்கப்படும் சலுகைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சசிகலா, விடுதலையாக உள்ளார் என்கிறார்கள்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலா விரைவில் விடுதலையாகி வெளியே வர உள்ளார் எனப் பேசப்பட்டு வரும் நிலையில் சசிகலா தம்பி திவாகரன், உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ஆகியோர் மன்னார்குடியில் சந்தித்துப் பேசியுள்ளனர்.

`இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும்' என சசிகலா உறவுகளும், `திரும்பி வந்துவிட்டார் திவாகரன்' என அவரது ஆதரவாளர்களும் பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சசிகலா
சசிகலா

இது குறித்து சசிகலா உறவினர்களிடம் பேசினோம், ``ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்றார். அதன் பிறகு அ.தி.மு.க-வில் பிளவுகள் ஏற்பட்டன. அம்மா முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை அ.தி.மு.க-வுக்கு மாற்றாக தொடங்கிய டி.டி.வி தினகரன் அ.தி.மு.க ஆட்சி குறித்தும் அமைச்சர்கள் குறித்தும் விமர்சனம் செய்து பேசி வந்தார்.

ஜெயில்... மதில்... திகில்! - 27 - சிறை விதிகளை மீறினாரா சசிகலா?

அ.தி.மு.க-வுக்குப் போட்டியாக கட்சி தொடங்கியது உள்ளிட்ட பல காரணங்களால் தினகரனுக்கும் திவாகரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய திவாகரன், `இது தற்காலிகமானதுதான், அ.தி.மு.க-வில் பிரிந்து கிடக்கும் அணிகளை ஒன்றாக இணைப்பதே என் முழு பணி' எனப் பேசியிருந்தார். இதைத்தொடர்ந்து சசிகலாவை சிறையிலிருந்து வெளியே கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அதற்குள் கொரோனா பரவியதைத் தொடர்ந்து இந்தப் பணிகள் தடைபட்டன.

அமைச்சர் ஆர்.காமராஜ்
அமைச்சர் ஆர்.காமராஜ்

இந்த நிலையில், சிறை நன்னடத்தை, விடுமுறை கழித்தல், கன்னட மொழியை கற்றதால் கொடுக்கப்படும் சலுகைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சசிகலா முறையாகவே விடுதலையாக உள்ளார். அநேகமாக ஜூலை மாதத்திற்குள் வெளியே வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அ.தி.மு.க ஆட்சியும் கடைசி ஆண்டில் இருக்கிறது. இதனால் அங்கேயும் காட்சிகள் மாறத் தொடங்கும் என நம்புகிறோம். சசிகலா குடும்பத்தையும், தினகரனையும் விமர்சனம் செய்து பேசி வந்த அ.தி.மு.க அமைச்சர்கள் அதையும் நிறுத்திக்கொண்டனர்.

அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக சசிகலாவை அமர்த்த வேண்டும் என்பது திவாகரனின் திட்டம். அதாவது கட்சித் தலைமை மட்டும் சசிகலா கையில் இருக்க வேண்டும் என நினைக்கிறார்.

திவாகரன்
திவாகரன்

இதற்கான முன்னெடுப்புகளுக்கு சசிகலா சிறையிலிருந்தபடியே சில தகவல்களைக் கூறி அனுப்பியிருக்கிறார். அதன்படி எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில். கடந்த வாரம் மன்னார்குடியில் வழக்கறிஞர் தமிழரசன் என்பவரின் தாயார் இறந்துவிட்டார். இந்த துக்க நிகழ்வில், அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்துகொண்டார். சிறிதுநேரம் கழித்து வந்த திவாகரன், அஞ்சலி செலுத்தியுள்ளார். அதன்பிறகு திவாகரனும் காமராஜும் தனிமையில் நீண்ட நேரம் பேசியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்த பிறகு நடக்கக் கூடிய நிகழ்வுகளைப் பற்றியே பேசியதாகக் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும்விதமாக திவாகரனுடன் அமைச்சர் ஆர்.காமராஜ் இருப்பது போன்ற பழைய போட்டோக்களை திவாகரன் மகன் ஜெய்ஆனந்த், தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மேலும் திவாகரன் திரும்பி வந்துவிட்டார் என அவரின் ஆதரவாளர்களும் கொண்டாடி வருகின்றனர். அத்துடன் கஷ்டங்கள் மறைந்து அதிகாரம் கைக்கு வருவதுடன் இனி எல்லாமே நல்லதாக நடக்கும் என சசிகலா தரப்பிலும் கூறப்படுகிறது” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு