Published:Updated:

`தி ஃபேமிலிமேன்-2 தொடரை நீக்குக!’ - லண்டன் அமேஸான் அலுவலகத்தில் ஒலித்த புலம்பெயர் தமிழர்களின் குரல்

லண்டன் போராட்டம்
News
லண்டன் போராட்டம்

‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரீஸைக் கண்டித்து லண்டனிலுள்ள அமேஸான் அலுவலகம் முன்பாக புலம்பெயர் தமிழர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

`தி ஃபேமிலிமேன்-2 தொடரை நீக்குக!’ - லண்டன் அமேஸான் அலுவலகத்தில் ஒலித்த புலம்பெயர் தமிழர்களின் குரல்

‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரீஸைக் கண்டித்து லண்டனிலுள்ள அமேஸான் அலுவலகம் முன்பாக புலம்பெயர் தமிழர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

Published:Updated:
லண்டன் போராட்டம்
News
லண்டன் போராட்டம்

மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, சமந்தா நடித்திருக்கும் ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரீஸ் அமேஸான் பிரைம் வீடியோவில் கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட்டது. அதன் டீஸர் கடந்த மே 19-ம் தேதி வெளியானது. அப்போதே இந்த வெப் சீரீஸுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டனர். தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். எல்லா எதிர்ப்புகளையும் மீறி இந்த வெப் சீரீஸ் திட்டமிடப்பட்ட நாளில் வெளியிடப்பட்டது.

லண்டன் போராட்டம்
லண்டன் போராட்டம்

``தமிழர்களை பயங்கரவாதிகளாகச் சித்திரித்துள்ளனர். தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் இன்னுயிரை ஈந்த ஈழப் போராளிகளைக் கொச்சைப்படுத்தியுள்ளனர். ராணுவச் சீருடை அணிந்த தமிழ்ப் பெண் ஒருவர், பாகிஸ்தானியர்களுடன் தொடர்பு வைத்திருப்பதுபோல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது போன்ற காட்சிகளைக் கொண்டிருக்கும் இந்த வெப் சீரீஸ், தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிரானது. தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகிறது. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும்” என்பது இந்த வெப் சீரீஸுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட விமர்சனம்.

எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல், ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரீஸ் வெளியிடப்பட்டது. தலைவர்களின் கண்டன அறிக்கைகளோடு தமிழ்நாட்டில் எதிர்ப்பு நின்றுவிட்ட நிலையில், ‘தி ஃபேமிலி மேன் 2’ தொடரை அமேஸான் பிரைமிலிருந்து நீக்க வேண்டும் என்று லண்டனிலுள்ள அமேஸான் தலைமையகம் முன்பாக புலம்பெயர் ஈழத் தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜூன் 21-ம் தேதி நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் இளைஞர்கள், பெண்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் அமேஸான் தலைமையகத்தின் அதிகாரி ஒருவரிடம் அவர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில், ``அமேஸான் பிரைம் நிறுவனத்தின் ஒளிபரப்பு சேவையிலிருந்து `தி ஃபேமிலி மேன் 2’ தொடர் நீக்கப்பட வேண்டும், இனிவரும் காலங்களில் ஈழ விடுதலைப் போராட்டத்தையோ, தமிழர்களின் வாழ்வியலையோ, தமிழ்ப் பெண்களின் கலாசாரத்தையோ இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்ட வெப் தொடர்களை, திரைப்படங்களை ஒளிபரப்பக் கூடாது” என்று வலியுறுத்தியிருந்தனர்.

சந்திரிகா
சந்திரிகா

லண்டனில் நடைபெற்ற போராட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவரான லண்டனைச் சேர்ந்த சந்திரிகாவிடம் பேசினோம்.

``தமிழ் இனத்தையும் தமிழ்ப் பெண்களையும் மிக இழிவாகச் சித்திரித்துள்ள ‘தி ஃபேமிலி மேன் 2’ என்கிற வெப் தொடர் எங்களுக்கு மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழினத்தையும் அவமானப்படுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, ஈழத் தமிழர்களையும் பெண்களையும் மிக மோசமாகச் சித்திரித்திருக்கிறார்கள். அதை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழினத்தின் உரிமைகளுக்காகப் போராடிய எங்கள் ஈழத் தமிழ் உறவுகள், சொந்த நாட்டை இழந்து நிறைய வலிகளோடும் துயரங்களோடும் பல நாடுகளில் அகதிகளாக வாழ்ந்துவருகிறோம். 2009-ல் நிகழ்ந்த இனப்படுகொலைக்கு சர்வதேச சமூகத்திடம் நீதி கேட்டுக்கொண்டிருக்கிறோம். எங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று ஐ.நா-வில் தொடர்ந்து பேசப்பட்டுவருகிறது.. அதன் விளைவாக, எங்களது நியாயத்தை சர்வதேசச் சமூகம் உணர்ந்துவருகிறது. இப்படியான நேரத்தில், ஈழத் தமிழர்களைப் பயங்கரவாதிகள்போலச் சித்திரித்து இந்த வெப் தொடரை எடுத்திருப்பதன் நோக்கம் என்ன? இது எங்களுக்கு எவ்வளவு பின்னடைவை ஏற்படுத்தும் என்பது இந்த வெப் தொடரைத் தயாரித்தவர்களுக்குத் தெரியுமா?

உண்மைக்கு மாறாகவும், வரலாற்றைத் திரித்தும் எடுக்கப்பட்டிருக்கும் இந்த வெப் தொடரை ஏதோ ஓர் உள்நோகத்துடனேயே எடுத்திருப்பதாக நினைக்கிறோம். ஈழத் தமிழர்களுக்கு ஐ.எஸ்.ஐ-உடன் தொடர்பு இருந்ததாகச் சித்திரித்திருப்பது, பயங்கரவாதம் என்று சொல்லிக்கொண்டு எங்களை அழிக்க நினைக்கும் முயற்சியா என்று கேள்வி எழுப்புகிறோம். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்முறைகள் உட்பட இந்தியாவில் எத்தனையோ சமூகப் பிரச்னைகள் இருக்கின்றன. அவை குறித்து வெப் தொடர்களையும் திரைப்படங்களையும் எடுக்கலாமே... பணம் சம்பாதிப்பதற்காக எங்கள் தியாகங்களைக் கொச்சைப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?

லண்டன் போராட்டம்
லண்டன் போராட்டம்

தமிழ்ப் பெண்களை மோசமாக சித்திரித்திருப்பதை ஜீரணிக்க முடியவில்லை. ஈழத்தில் பெண்களெல்லாம் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தோம் என்பதைப் பத்திரிகையாளர் அனிதா பிரதாப் உட்பட அங்கு வந்த பலரும் பாராட்டிச் சொல்லியிருக்கிறார்கள். இன உரிமைக்கான போராட்டத்தில் பங்கெடுத்த ஈழத் தமிழ்ப் பெண்களின் போராட்டத்தை உலகமே பாராட்டியது. ஆனால், இந்த வெப் தொடரில் எங்களைக் கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள். எங்களின் போராட்ட வரலாறு எங்களின் அடுத்த தலைமுறையினருக்குத் தவறாகச் சொல்லப்பட்டுவிடக் கூடாது என்பதில் நாங்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கிறோம். ஆனால், ‘தி ஃபேமிலி மேன் 2’ தொடரைப் பார்க்கும் எங்கள் எதிர்காலச் சந்ததிகள், ஈழப் பெண்களைப் பற்றியும் போராளிகளைப் பற்றியும் தவறாக நினைத்துவிட மாட்டார்களா? இது எங்கள் கௌரவப் பிரச்னையும்கூட. எதிர்காலத்தில் இது போன்ற தவறான சித்திரிப்புகளுடன் தொடர்களோ, திரைப்படங்களை வந்துவிடக் கூடாது. எனவேதான், இதற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம்.

தமிழ்நாட்டிலிருந்து அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தது எங்களுக்கு ஆறுதலாக இருக்கிறது. அதேநேரத்தில், கொரோனா பெருந்தொற்று பிரச்னை காரணமாகவோ என்னவோ, தமிழ்நாட்டிலிருந்து பெரிய அளவுக்கு இதற்குக் கண்டனமும் எதிர்ப்பும் எழுவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணியவாதிகள் ஏன் மௌனமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. தமிழ்த் திரையுலகிலிருந்து எதிர்ப்புகள் வந்தபோதிலும், பெரிய அளவிலான எதிர்ப்பாக அது எழுவில்லை. தமிழ்த் திரைப்படங்களுக்கு வெளிநாடுவாழ் தமிழர்கள்தான் மிகப்பெரிய சந்தையாக இருக்கிறார்கள். வெளிநாடு வாழ் தமிழர்களை வைத்துத்தான் தமிழ்த் திரையுலகினர் நிறைய சம்பாதிக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, எங்களுடைய உணர்வுகளைத் தமிழ்த்திரையுலகினர் புரிந்துகொள்ள வேண்டும்.

அமேஸான் நிறுவனத்தின் அதிகாரியிடம் கோரிக்கை மனு
அமேஸான் நிறுவனத்தின் அதிகாரியிடம் கோரிக்கை மனு

தமிழர்களையும் தமிழினத்தையும் இழிவுபடுத்துகிற தொடர்களிலோ, திரைப்படங்களிலோ தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த கலைஞர்கள் நடிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறோம். இந்த வெப் தொடருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமேஸானைப் புறக்கணிக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளோம். அமேஸான் அக்கவுன்ட்களிலிருந்து நிறைய பேர் வெளியே வந்துவிட்டோம். கனடா உட்பட மற்ற நாடுகளிலும் இத்தகைய போராட்டத்தை புலம்பெயர் தமிழர்கள் நடத்தவிருக்கிறார்கள்” என்றார் சந்திரிகா.