அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

“நாங்க எப்படிங்க பொறுப்பு?” - “அப்போ எங்க மேல எப்படிக் குற்றச்சாட்டு சொல்றீங்க..?”

சட்டமன்றம்
பிரீமியம் ஸ்டோரி
News
சட்டமன்றம்

- சட்டமன்ற ‘மைக்ரோ’ பிட்ஸ்

கே.பி முனுசாமி, இசக்கி சுப்பையா ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை, `பொதுச்செயலாளர்’ எனக் குறிப்பிட்டனர். நத்தம் விசுவநாதன் அவரை `இடைக்காலப் பொதுச்செயலாளர்’ என்றே அழைத்தார். பொள்ளாச்சி ஜெயராமன் பேசும்போது, ‘ஒப்பற்ற பொதுச்செயலாளர்’ எனத் தனி ரூட்டில் எடப்பாடிக்கு ஐஸ் வைத்தார். #‘பாடிய துதியை கவனித்தீரா!’

கே.பி.முனுசாமி எடப்பாடி பழனிசாமியை, `பொதுச்செயலாளர்’ எனக் குறிப்பிட்டபோது, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பலரும் மேஜையைத் தட்டி ஆரவாரம் செய்தனர். உடனே தி.மு.க அமைச்சர் சேகர் பாபுவும், வேறு சிலரும் ஓ.பி.எஸ்-ஸைப் பார்த்துக் குசும்பாக, ``வணக்கம்... பொதுச்செயலாளர் ஓ.பி.எஸ் அவர்களே...’’ என்றனர். இதைக் கேட்டதும் அடக்கமுடியாத சிரிப்புடன் ஓ.பி.எஸ்., ``அட ஏன்யா...’’ என்பதுபோல நெளிந்தார். # ‘நாம் பாட்டுக்கு சிவனேன்னுதானேய்யா போய்க்கிட்டிருக்கேன்’ மொமன்ட்!

தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பேசும்போது, அதில் உடன்பாடு இல்லாத அ.தி.மு.க உறுப்பினர்கள் தங்களின் எதிர்ப்பைக் காட்ட ‘ஓஹோ... ஆஹா...’ என கோரஸாகக் குரலெழுப்பினார்கள். இதில் கடுப்பான அமைச்சர் எ.வ.வேலு ‘என்ன ஓஹொ...’ என்று காட்டமாகக் கடிந்துகொண்டார். #‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்!’

“நாங்க எப்படிங்க பொறுப்பு?” - “அப்போ எங்க மேல எப்படிக் குற்றச்சாட்டு சொல்றீங்க..?”

நீட் தேர்வு பற்றிப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., ‘நீட் தேர்வைக் கொண்டுவந்தது, காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி’ என்றார். இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுந்து, “நாங்கள் ஆட்சியில் இருந்தவரை நீட் தேர்வை அனுமதிக்கவில்லை. கடந்த அ.தி.மு.க ஆட்சியில்தான் நீட் தமிழ்நாட்டுக்குள் வந்தது. அதற்கு முழுப் பொறுப்பு அ.தி.மு.க-தான்’’ என்றார். இதற்கு பதிலளித்த எடப்பாடி, “ஏங்க... நாங்க எப்படிங்க பொறுப்பு... அதைக் கொண்டுவந்தது மத்திய அரசு” என்று குமுறினார். இதைக் கேட்டதும், ‘`அப்போ எங்க மேல எப்படிக் குற்றச்சாட்டு சொல்றீங்க...’’ என்பதுபோல தி.மு.க-வினர் நக்கலடித்துவைத்தனர். #‘மாநில அரசா... மத்திய அரசா?’ அவரே கன்ஃப்யூஸ் ஆகிட்டாரு!

சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், `` `கடுக்காய் சாப்பிட்டவர்கள் மிடுக்காக நடப்பார்கள்’ என்பார்கள். எங்கள் கல்வராயன்மலையில் கடுக்காய் விவசாயம் செய்யும் மக்களுக்குச் சரியாக விலை கிடைப்பதில்லை. எனவே, அந்தப் பகுதியில் தொழிற்சாலை அமைக்க அரசு முன்வருமா?’’ என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்குப் பதிலளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு அரசு கடுக்காய் கொடுக்காமல் இருக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றதும், அவையில் லேசான சிரிப்பொலி எழுந்தது. #2,000 ஆண்டுகள் தொன்மையான காமெடி சார்!

அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா, சிங்கம்பட்டி ஜமீனுக்கு மணிமண்டபம் அமைப்பது தொடர்பாகக் கேள்வி எழுப்பினார். அப்போது, ``விஜயநகரப் பேரரசு...’’ என வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்தார். அவரை இடைமறித்த சபாநாயகர், “தம்பி நீங்க நிறைய படிச்சிருக்கீங்க, புலமையெல்லாம் இருக்கு. நேரா கேள்வியை மட்டும் கேளுங்க...” என்று இடைமறித்தார். #நா... சுத்திவளைச்சுப் பேச விரும்பல!

`ஜீரோ ஹவர்’ நேரத்தில் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, ``தி.மு.க ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது...’’ என்று பேசத் தொடங்கினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, ``இந்த நேரத்தைப் பயன்படுத்தி ஆக்கபூர்வமான கேள்விகளைக் கேளுங்க’’ என்றார். அதற்கு அசராத எடப்பாடி, தி.மு.க பொதுக்கூட்டத்தில் நடந்த பாலியல் பிரச்னை குறித்துக் கேள்வி எழுப்பினார். இதற்கு, ``நீதிமன்றத்திலிருக்கும் வழக்கு பற்றி இங்கே பேசக் கூடாது’’ என்று சபாநாயகர் முட்டுக்கட்டை போட்டார். திடீரென சீறியெழுந்த ஸ்டாலின், ``அவர்கள் பேசட்டும். நான் பதில் சொல்கிறேன். ஓடி ஒளிய மாட்டேன். அவர்கள் இப்படிப் பேசினால்தான், அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் சட்டம்-ஒழுங்கின் நிலை எப்படி இருந்தது என்பதைச் சுட்டிக்காட்ட என்னால் முடியும்” என்றார். இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வினர் பேச அனுமதி மறுக்கப்பட்டதால், கூண்டோடு வெளிநடப்பு செய்தனர். #பேசிக்கிட்டே இருந்தா எப்படிண்ணே!?

அ.தி.மு.க-வின் நத்தம் விசுவநாதன் பேசும்போது, “எட்டுவழிச் சாலைத் திட்டத்தை எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்த்தார்கள். தற்போது ஆளுங்கட்சியானதும், அதை நிறைவேற்ற முயல்கிறார்கள். காலத்தைக் கணக்கிட கிறிஸ்து பிறப்பைவைத்து கி.மு., கி.பி என்பார்கள். அதுபோல, தி.மு.க-வின் செயல்களை `தி.மு.க தேர்தலுக்கு முன்’, `தி.மு.க தேர்தலுக்குப் பின்’ என்று குறிப்பிடலாம் எனக் கலாய்த்துத் தள்ளியது அ.தி.மு.க-வினரிடையே சிரிப்பலையை உண்டாக்கியது. #பல்டிகள் பலவிதம்... ஒவ்வொன்றும் ஒருவிதம்!

புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிக்கு 10-வது இடத்தில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் சட்டசபையின் மூன்றாவது நாள் முழுவதும் அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இல்லாமல், அன்பில் மகேஸ் அருகிலேயே அமர்ந்திருந்தார். எம்.எல்.ஏ-க்கள் ராமகிருஷ்ணன், கொங்கு நாடு ஈஸ்வரன் ஆகியோர் மாநில அரசைப் பாராட்டும்போது உதயநிதிக்கும் புகழ்மாலை சூட்டத் தவறவில்லை. அமைச்சரான பிறகு மிகச் சிறப்பாகப் பணியாற்றுவதாகப் புகழ்ந்து தள்ளினர். #அந்த ‘ஆஹா... ஓஹோ...’ எல்லாம் இதுக்குத்தானா!