Published:Updated:

சட்டப்பேரவை ஹைலைட்ஸ்...

சட்டப்பேரவை
பிரீமியம் ஸ்டோரி
சட்டப்பேரவை

பா.ஜ.க மட்டுமின்றி பெண் உறுப்பினர்களிலும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டது வானதி சீனிவாசன்தான்.

சட்டப்பேரவை ஹைலைட்ஸ்...

பா.ஜ.க மட்டுமின்றி பெண் உறுப்பினர்களிலும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டது வானதி சீனிவாசன்தான்.

Published:Updated:
சட்டப்பேரவை
பிரீமியம் ஸ்டோரி
சட்டப்பேரவை

28 நாள்கள் நடந்திருக்கிறது தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர். ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி மே 10-ம் தேதி வரை நடைபெற்ற இந்தக் கூட்டத்தொடர் ஏராளமான அறிவிப்புகள், புதிய மசோதாக்கள், காரசார விவாதங்கள், புகழ்பாடல்கள் என நடந்து முடிந்திருக்கிறது. அவையில் நடந்த ஹைலைட்டான விஷயங்கள் இங்கே...

சபாநாயகர் அறையில் குவியும் எம்.எல்.ஏ-க்கள்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ-க்களும் அவைத்தலைவர் அப்பாவு-வுடன் உரிமையோடு உரையாடுகிறார்கள். காலை 9:30 மணிக்கே அவரது அறை அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ-க்களால் திணறுகிறது. காலை 9:50 மணிக்கு சட்டமன்றத்துக்குள் வரும் முதல்வர், சபாநாயகரின் அறையில் யாரும் இல்லாவிட்டால், அன்றைய நாள் ஜீரோ ஹவரில் பேசப்போகும் விஷயங்கள் குறித்துக் கேட்டுக்கொள்கிறார். கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அப்போது அவைத்தலைவராக இருந்த பி.டி.ஆர்.பழனிவேல் ராஜனிடம் இரண்டு நிமிடங்கள் தினமும் பேசிவிட்டுச் செல்வது வழக்கம். அதே பாணியைத்தான் ஸ்டாலினும் கடைப்பிடிக்கிறார். ஆனால், எம்.எல்.ஏ-க்கள் கூட்டம், குறிப்பாக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் அதிகமாக அறைக்குள் இருந்தால் அப்படியே சென்றுவிடுவாராம் முதல்வர்.

முதல்வரின் அலர்ட்....

“எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்குக் கூடுதல் வாய்ப்பளியுங்கள். ஆனால், ‘விடியா அரசு’ போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அரசை டேமேஜ் செய்யும்விதமாக யாராவது பேச முயன்றால் அனுமதிக்க வேண்டாம்.”

“கட்சி சார்ந்த விஷயங்களையும் சபையில் பேச ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்!!”

- முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு-வுக்கு கொடுத்த முக்கியமான ஆலோசனைகள் இவை என்கிறார்கள் சபை வட்டாரத்தில்.

அனைவருக்கும் வாய்ப்பு; குறுக்கீடு இல்லை!

திருப்திகரமாக இந்தக் கூட்டத்தொடர் நடந்து முடிந்திருக்கிறது என எதிர்க்கட்சி உறுப்பினர்களே சொல்கிறார்கள். பேசத் தயங்கிய, கேள்விகூட கொடுக்காத எம்.எல்.ஏ-க்களுக்குத் துணைக் கேள்விகள் கேட்க வாய்ப்பு கொடுத்து பேசவைத்திருக்கிறார் அவைத்தலைவர். கடந்தகாலங்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பேசவிடாத அளவுக்குக் குறுக்கீடுகள் இருக்கும். இம்முறை பெரும்பாலும் அவர்களை முழுமையாகப் பேசவிட்டு, பேசி முடித்த பிறகே துறை அமைச்சர்கள் பதில் சொன்னார்கள். கடந்த ஆட்சி பற்றி குற்றச்சாட்டுகள் அடுக்குவதையும் தவிர்த்தது ஆளுங்கட்சித் தரப்பு.

விஜயபாஸ்கர் போட்ட துண்டு!

மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் அவைத்தலைவரை மரியாதை நிமித்தமாகச் சந்திப்பது மரபு. இம்முறை எதிர்க்கட்சி சார்பில் பேசவிருந்த முன்னாள் அமைச்சர்களும் மரியாதை நிமித்தமாக சபாநாயகரைச் சந்தித்திருக்கிறார்கள். குறிப்பாக, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சால்வை அணிவித்து மரியாதை செய்ததுடன், “நீங்கள் அனைவருக்கும் பொதுவானவர்” என்று சொல்ல... நெகிழ்ந்திருக்கிறார் அப்பாவு.

டாப் ஃபைவ் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள்!

அவையில் பல அமைச்சர்கள் சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், தரவுகளை மனப்பாடமாகப் பேசி அப்ளாஸ் அள்ளியதில், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். எம்.எல்.ஏ-க்களில் சிவக்குமார் என்ற தாயகம் கவி (தி.மு.க), ஜி.கே.மணி (பா.ம.க), பிரபாகர் ராஜா (தி.மு.க), அருள் (பா.ம.க), ச.சிவக்குமார் (பா.ம.க) ஆகியோர் நிறைய கேள்வி கேட்டவர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார்கள். ஐந்தில் மூவர் பா.ம.க என்பதால் மகிழ்ந்து ‘ட்விட்’ போட்டிருக்கிறார் ராமதாஸ். அ.தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், கே.பி.முனுசாமி, வி.சி.க-வில் சிந்தனைச்செல்வன், ஆளூர் ஷாநவாஸ், கொங்கு நாடு ஈஸ்வரன் ஆகியோரின் செயல்பாடும் பாராட்டும்படி இருந்தது.

சட்டப்பேரவை ஹைலைட்ஸ்...

பி.டி.ஆர் எஸ்கேப்...

சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பெரும்பாலான அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் முழுமையாகக் கலந்துகொள்கிறார்கள். ஒருசில அமைச்சர்கள் அவ்வப்போது எஸ்கேப் ஆகிவிடுவது வழக்கம். இப்படி அதிகமாக எஸ்கேப் ஆனது நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்தானாம்.

வானதி நம்பர் ஒன்... ஆனால்?

பா.ஜ.க மட்டுமின்றி பெண் உறுப்பினர்களிலும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டது வானதி சீனிவாசன்தான். ஆனால், அவரது பேச்சில் தி.மு.க அரசைக் குறைகூறும் நோக்கம் வெளிப்படையாகத் தெரிந்ததால், அமைச்சர்கள் அவருக்கு உடனுக்குடன் பதிலடி கொடுத்தார்கள். அடிக்கடி குறுக்கிட்டார்கள். ஆனால், சிரித்துக்கொண்டே பேசினாலும், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல நயினார் நாகேந்திரன், தான் சொல்லவந்ததை சாதுர்யமாகச் சொல்லிவிடுகிறார்; விமர்சனங்களை முன்வைத்துவிடுகிறார் என்கிறார்கள்.

ஓவராகப்போன உதயநிதி புகழ்பாடல்...

உதயநிதியை குளிர்விப்பதற்காக மூத்த அமைச்சர்கள் தொடங்கி இளம் எம்.எல்.ஏ-க்கள் வரை புதுசு புதுசாகப் புகழ்ந்தும், விதவிதமாக கவிதை வாசித்தும் அனைவரையும் நெளியவைத்தனர். `துதிபாடல்கள் வேண்டாம்’ என முதல்வர் பலமுறை எச்சரித்தபோதும் அது நிற்கவில்லை. ‘பொதுக்கூட்டம் என்றால்கூட பரவாயில்லை... மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் பேரவையில் இதெல்லாம் தேவைதானா’ என்றனர் எதிர்க்கட்சியினர்.

அதிகமான நேரம்... காரணம் இதுதான்!

பொதுவாக, சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானமாகக் கொண்டுவரும் விஷயங்கள் இரண்டு நாள்களுக்கு முன்பாகவே, துறைக்கு அனுப்பப்பட்டு அதற்குரிய பதில்கள் தயார் செய்யப்பட்டுவிடும். சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அதை அவையில் வாசிப்பது வழக்கம். ஆனால், சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் என்கிற பெயரில் கொண்டுவரப்படும் விஷயங்களால் 4 மணி வரை அவை நடவடிக்கைகள் நீண்டன. “கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் அதிகபட்சம் 2 மணிக்குள் அவை நடவடிக்கைகள் முடிந்துவிடும். ஆனால், கடந்த அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் என்கிற புதிய முறைதான் தாமதத்துக்குக் காரணம். இது அவையின் சட்ட திட்டத்திலேயே கிடையாது” என்று கண்டித்திருக்கிறார் அவை முன்னவரான துரைமுருகன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism