Published:Updated:

`தி.மு.க செய்த அதே தவற்றை நீங்களும் செய்யலாமா?!’ - அ.தி.மு.க-வுக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

ஹைதராபாத் வழக்கில் அவர்கள் குற்றவாளிகள் என்பது உறுதியானாலும் அரசால் தண்டனை வாங்கித்தர முடியாது. எனவே, அந்த என்கவுன்டர் சரியானதுதான். சில நிரூபிக்க முடியாத குற்றங்களுக்கு வேறுவழியே கிடையாது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி நாகர்கோவில் வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், ``தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட தேர்தல், சட்டத்துக்குப் புறம்பானது. பட்டியலின மக்கள், பெண்களுக்கான இடஒதுக்கீடு ஆகியவை சரியாகச் செய்யப்படவில்லை. தி.மு.க உச்ச நீதிமன்றம் சென்றதால் சில வழிகாட்டுதல்கள் கிடைத்தன. அதையும் தமிழகத் தேர்தல் ஆணையம் பின்பற்றவில்லை.

உள்ளாட்சித் தேர்தலை முறையாக நடத்த காங்கிரஸ் கட்சியின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும். ப.சிதம்பரம் மற்றும் கபில் சிபல் ஆகியோர் வாதாடத் தயாராக இருக்கிறார்கள். உள்ளாட்சி என்பது மக்கள் நேரடியாக பங்களிக்கும் தேர்தலாக இருக்க வேண்டும். மறைமுக தேர்தல் இருக்கக் கூடாது. அ.தி.மு.க அரசுக்குத் தைரியம் இருந்தால் நேரடி தேர்தலை அறிவிக்கட்டும். தி.மு.க தவறு செய்தால் அதே தவற்றை நீங்களும் செய்யலாமா?

செய்தியாளர் சந்திப்பில் கே.எஸ்.அழகிரி
செய்தியாளர் சந்திப்பில் கே.எஸ்.அழகிரி

நாட்டின் நிதிநிலை இப்போது இருப்பதைவிட இன்னும் மோசமாகும். ஜி.எஸ்.டி-யை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறார்கள். அப்படிச் செய்தால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். சட்டம் - ஒழுங்கை கடுமையாகப் பின்பற்ற வேண்டும்.

ஹைதராபாத் வழக்கில் அவர்கள் குற்றவாளிகள் என்பது உறுதியானாலும் அரசால் தண்டனை வாங்கித்தர முடியாது. எனவே, அந்த என்கவுன்டர் சரியானதுதான். சில நிரூபிக்க முடியாத குற்றங்களுக்கு வேறுவழியே கிடையாது.

அதிசயம் நிகழும் என ரஜினி கூறியிருக்கிறார். அதிசயம் என்பது அவரது கடைசி திரைப்படத்தின் பெயராக இருக்கலாம். ஓர் அரசு திறமையாகச் செயல்படுகிறதா என்பதைப் பார்க்க வெங்காயம் விலை முக்கியமானது. முதல்வர் 20 நாளில் சரியாகும் எனக் கூறுகிறார்; உணவுத்துறை அமைச்சர் 40 நாள்கள் என்கிறார். இவர்கள் சீராக்காமல் இருந்தாலும் விளைச்சல் காரணமாக வெங்காய விலை விரைவில் சரியாகும்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

தேசிய குடியுரிமை மசோதாவைப் பொறுத்தவரையில் அரசு சட்டத்துக்குப் புறம்பாக செயல்படுகிறது. இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை இல்லை எனக் கூற மோடி யார்.. மத்திய அரசின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். மத்திய அமைச்சர், `வெங்காயம் சாப்பிட மாட்டேன்' என்று கூறுகிறார். அவருக்கு மக்கள் மீது அக்கறை இல்லை.

கர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரையில் ஆளுங்கட்சிதான் வெல்லும். அங்கு பி.ஜே.பி அரசு அதிக நாள்கள் நீடிக்காது. ஐ.ஐ.டி மாணவர்கள் தற்கொலைக்கு யார் காரணம் என்பதை கல்வியாளர்களைக் கொண்டு ஆய்வுசெய்து உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும். கூடங்குளம் அணுக்கழிவுகள் குறித்து கருத்து கூற நான் விஞ்ஞானி இல்லை. இதுகுறித்து விஞ்ஞானிகளின் கருத்தறிந்து அதற்கான திட்டத்தை உருவாக்க வேண்டும். ஒருவேளை பாதிப்பு ஏற்படும் என்றால் அதைக் கைவிட வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு