Published:Updated:

நீலகிரி: ``இலவச சேலை வேண்டாம்; நிரந்தர வீடு வேண்டும்"- அமைச்சரை அதிரவைத்த பந்தலூர் பழங்குடிகள்!

மீட்பு முகாம்
மீட்பு முகாம்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பழங்குடிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கச் சென்ற அமைச்சரிடம் வீடு வேண்டும் எனக் கூறி நிவாரண உதவிகளை வாங்க மறுத்தனர்.

வனத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ராமச்சந்திரன், கொரோனா நிவாரண உதவித்தொகையாக தமிழக அரசு வழங்கும் ரூபாய் 2,000 திட்டத்தை குன்னூரில் நேற்று முன்தினம் தொடங்கிவைத்தார்.

வனத்துறை அமைச்சர்
வனத்துறை அமைச்சர்

நேற்று கூடலூரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற வனத்துறை அமைச்சர், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பழங்குடியின மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க தற்காலிக மீட்பு முகாம்களுக்குச் சென்றார்.

இந்தநிலையில்,பொன்னானி பகுதியிலுள்ள மீட்பு முகாமில் தக்கவைக்கப்பட்டுள்ள பழங்குடியின மக்களுக்கு அமைச்சர் சேலைகளை வழங்கினார். ஆனால் சேலையை வாங்க மறுத்த பழங்குடியினப் பெண்கள் சிலர், "எல்லா மழைக்கும் எங்களைக் கூட்டிட்டு வந்து முகாம்ல தங்கவெக்கிறீங்க. இதே மாதிரி சேலை, கம்பளின்னு கொடுத்துட்டுப் போறீங்க. இதுக்கு பதிலா எங்களுக்கு நல்ல இடத்துல வீடு கட்டிக் கொடுங்க. எல்லா மழைக்கும் பயந்து வாழ வேண்டிய அவசியம் இருக்காது. நூறு ரூபா சேலை வேண்டாம். எங்களுக்கு நிரந்தர வீடு கட்டித்தாங்க" என வாக்குவாதம் செய்து‌ சேலைகளை வாங்கப் பிடிவாதமாக மறுத்தனர். அவர்களை அமைச்சர் பலமுறை சமாதானம் செய்தும் சேலையை வாங்காததால், அதிருப்தியுடன் திரும்பிச் சென்றார் அமைச்சர்.

மீட்பு முகாம்
மீட்பு முகாம்

இது குறித்து அமைச்சர் தரப்பில், ``கடந்த 10 ஆண்டுகளாக ஆளுங்கட்சியின் அலட்சியம் காரணமாக மக்கள்‌, அரசுமீது அதிருப்தியில் உள்ளனர். இவர்களுக்கு நிரந்தர வீடு கட்டித்தர உரிய நடவடிக்கையை கட்டாயம் மேற்கொள்வோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு