Published:Updated:

மணல்... மது... லாட்டரி - நிரம்புமா கஜானா?

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின்

சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, இதுவரை எந்த மணல் குவாரியும் செயல்படவில்லை

தலைமைச் செயலகத்துக்குள் நுழைந்தாலே, கைகளில் கோப்புகளும் குறிப்புகளுமாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பரபரப்புடன் இயங்கிவருவதைப் பார்க்க முடிகிறது. இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடருக்கான தேதி நெருங்கிவரும் நிலையில், ‘கஜானா காலி... எதை வைத்து பட்ஜெட் போடுவது?’ என்ற கூக்குரலே கோட்டையின் சுவர்களைக் கிடுகிடுக்கவைக்கிறது. 27.6.2021 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், ‘கஜானா காலி! வெடிவைக்கும் வெள்ளை அறிக்கை’ என்கிற தலைப்பில், அரசின் கஜானா காலியாக இருப்பதையும், ‘அதற்குக் காரணம் முந்தைய அ.தி.மு.க அரசின் நிர்வாகக் கோளாறுகள்தான்’ என வெள்ளை அறிக்கையை தி.மு.க அரசு வெளியிடத் திட்டமிட்டிருப்பதையும் விரிவாக எழுதியிருந்தோம். வெள்ளை அறிக்கை வெளியிட்டாலும், இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய முடியாத அளவுக்கு அரசுக்கு நெருக்கடி முற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், ஜூலை இரண்டாவது வாரம், ஜூலை மாத இறுதி என்று தள்ளிப்போடப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடர், இப்போது ஆகஸ்ட் மாதத்துக்குப் போவதாகக் கூறுகிறார்கள் நிதித்துறை அதிகாரிகள்.

“தமிழக அரசின் கடன் சுமை 5 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது. தி.மு.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளித்த திட்டங்களை அறிவிக்கவே அரசுக்குப் பெரும் நிதி தேவைப்படுகிறது. இதனால், நிதி வருவாயைப் பெருக்க, துறைவாரியாக ஆலோசனை நடத்திவருகிறார் முதல்வர் ஸ்டாலின். அரசின் நிதி ஆதாரங்களைப் பெருக்க சில முக்கிய முடிவுகளையும் அரசு எடுக்கவிருக்கிறது” என்று நம்மிடம் சொன்னார் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர். கனிமவளம், மதுபானம், லாட்டரி... இந்த மூன்றிலிருந்தும் கணிசமான வருவாயை ஈட்ட அரசு திட்டமிட்டிருப்பதாகவும், இதுவரை தனியார் நிறுவனங்களே இந்தத் துறைகளில் அதிகமும் பார்த்துவந்த லாபத்தை அரசின் கஜானாவுக்குத் திருப்பவும் திட்டமாம். அதற்கான பணியில் தீவிரம் காட்டிவருவதாகக் கோட்டையில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ‘என்ன திட்டம் வைத்திருக்கிறது அரசு’ என்பதை அறிய, களமிறங்கினோம்...

மணல்... மது... லாட்டரி - நிரம்புமா கஜானா?

ஏன் சரிந்தது மணல் வருமானம்?

“அரசின் வருவாயில் கனிமவளத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. குறிப்பாக, ஆற்றுமணல், தாதுமணல், கிரானைட் உள்ளிட்டவை மூலமாக கணிசமான வருவாய் கடந்த காலங்களில் அரசுக்கு வந்தது. ஆனால், அவற்றை முறைப்படுத்தி அரசு கண்காணிக்காமல் விட்டதால், கடும் இழப்பு ஏற்பட்டது. தனியார் நிறுவனங்களின் ஏகோபித்த ஆதிக்கம் இந்தத் துறைகளில் கொடிகட்டிப் பறந்தது” என்றபடி பேசினார்கள் பொதுப்பணி மற்றும் கனிமவளத்துறையின் மூத்த அதிகாரிகள்.

“2017-ம் ஆண்டு முதல் மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்த முடிவெடுத்து, `ஆன்லைன் மூலம் விற்பனை’ என்ற யுக்தியைக் கொண்டுவந்தது. அதில் ஏகப்பட்ட குளறுபடிகள் நிலவியதால், ஆற்றுமணல் தட்டுப்பாடு அதிகரித்தது. முறையாக விநியோகம் இல்லாமல் போனதால், அரசுக்கும் ஏகப்பட்ட வருவாய் இழப்பு. கடந்த 2019 -20 நிதியாண்டில் மட்டும், அரசுக்கு மணல் விற்பனை மூலம் கிடைத்த வருவாய் வெறும் 13 கோடிதான். ஆனால், 2015-16-ம் ஆண்டுகளில் அதே மணல் விற்பனை மூலம் கிடைத்த வருவாய் 100 கோடி ரூபாய். ஆன்லைன் மூலமாக மணல் விற்பனையைச் சீர்செய்யாதவரை, அரசுக்கு இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, இதுவரை எந்த மணல் குவாரியும் செயல்படவில்லை. எனவே, ஆந்திராவிலிருந்து கண்ணாடி தொழிற்சாலைக்குக் கொண்டுவரப்படும் சிலிக்கான் மணலின் கழிவோடு கடற்கரை மணலைக் கலந்து, ஆற்றுமணல் என்று போலியாக விற்பனை செய்கிறார்கள். அதேபோல, திருட்டுத்தனமாக மணல் அள்ளி விற்பனை செய்யும் போக்கும் அதிகரித்துள்ளது. ஆன்லைனில் ஒரு யூனிட் மணல் 1,500 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இன்றைக்கு சென்னையில் மூன்று யூனிட் மணல் 40,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை ஏற்றத்துக்குக் காரணம் மணல் விநியோகத்தில் நடக்கும் குளறுபடிகள்தான்” என்றனர்.

புதிய மணல் வியாபாரத் திட்டம்!

முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, மணல் விற்பனையில் வருவாய் ஈட்டுவதற்கான புதிய திட்டம் ஒன்றை அதிகாரிகள் வழங்கியுள்ளார்கள். முதல்வருக்கு அவர்கள் அளித்திருக்கும் ஆலோசனையில், “மணல் விற்பனையில் தனியாரின் பங்களிப்பு இல்லாமல் லாபம் ஈட்ட முடியாது. விற்பனையை மட்டும் அரசு பார்த்துக்கொள்ளலாம். மணல் அள்ளுவது, அதை லாரிகளுக்கு மாற்றுவது, குவாரிகளைக் கட்டமைப்பது போன்றவற்றை ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தினால், இந்தத் தொழிலில் அரசு அதிக வருமானம் பார்க்க முடியும். மணலுக்கான விலையை அரசு நிர்ணயம் செய்து, அதை முழுமையாகக் கண்காணிக்க வேண்டும். தட்டுப்பாடு இல்லாமல் மணல் விநியோகம் செய்தாலே, அரசுக்கும் வருவாய் வரும். கள்ளச் சந்தையில் அநியாய விலைக்கு மணல் விற்பனையாவதைத் தடுத்து மக்களிடம் நல்லபெயர் வாங்கலாம்” என்று ஐடியா கொடுத்திருக்கிறார்கள். இப்படிச் செய்தால், ஆண்டுக்கு 100 கோடி ரூபாயைத் தாண்டியும் அரசுக்கு வருவாய் வரும் என அதிகாரிகள் சொல்ல, முதல்வரும் அதற்கு ஓகே சொல்லியிருக்கிறாராம்.

கிரானைட் குவாரிகள் மற்றும் அதன் தொழிற்சாலைகள் மூலம் அரசுக்கு எப்படி வருவாயை அதிகரிப்பது என்று சமீபத்தில் இந்தத் தொழிலில் உள்ளவர்கள் மற்றும் தமிழ்நாடு கனிம நிறுவன அதிகாரிகளிடம் கருத்துகளைக் கேட்டிருக்கிறார் நிதித்துறை அமைச்சர். அப்போது, “இந்தத் தொழிலில் எந்த முறைகேடும் நடக்காமல் அரசு பார்த்துக்கொண்டாலே நல்ல வருவாய் கிடைக்கும்” என்று சொல்லியிருக்கிறார்கள் கிரானைட் தொழிலில் உள்ளவர்கள்.

நம்மிடம் பேசிய கனிமவளத்துறை அதிகாரி ஒருவர், “இந்தியாவில் அதிகம் கிரானைட் ஏற்றுமதி செய்யும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன்பு, கிரானைட் விவகாரத்தில் மிகப்பெரிய முறைகேடு வெளிச்சத்துக்கு வந்து சர்ச்சையானது. இதனால் மதுரைப் பகுதியில் கிரானைட் குவாரிகள் தற்போது செயல்படவில்லை. அதேநேரம் கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் தற்போது 140 கிரானைட் குவாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் பல குவாரிகள் எந்த அனுமதியும் இல்லாமல் இயங்கிவருகின்றன. கடந்த ஆட்சியில் முக்கிய அமைச்சர் ஒருவரைச் சரிக்கட்டி, இந்த குவாரிகளை இயக்கிவந்தனர். கிரானைட் குவாரிகள் மூலம் ஆண்டுக்கு 8,000 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் வர வேண்டும். ஆனால், தற்போது 1,000 கோடி ரூபாய் வருவதே திண்டாட்டமாக இருக்கிறது.

கைகொடுக்குமா கிரானைட் வருமானம்!

கிரானைட் தொழிலில் வருவாய் குறைவுக்குக் காரணமே, பர்மிட் கட்டணங்களைப் பல ஆண்டுகளாக மாற்றாமல் வைத்திருப்பதுதான். ஒவ்வொரு கல்லின் அளவுக்கும் தனித்தனியான கட்டணங்களை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். ஆனால், தமிழக அரசு இதைச் சரியாகச் செயல்படுத்தவில்லை. சிறிய அளவிலான கற்களையும், கழிவுகளையும்கூட அனுமதி வரம்புக்குள் கொண்டுவரலாம். அதேபோல, அனுமதியின்றி செயல்படும் குவாரிகளை முடக்கி, முறையாகச் செயல்பட வைக்க வேண்டும். வழக்குகளால், மதுரையில் பல இடங்களில் குவாரிகள் செயல்படாமல் உள்ளன. அவற்றில், ஏற்கெனவே வெட்டப்பட்ட கற்களை மட்டுமேகூட விற்பனை செய்யலாம். என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை அரசுக்கு அளித்திருக்கிறோம்” என்றார்.

தமிழகத்தில் செயல்படும் 760 கிரானைட் தொழிற்சாலைகளில், வெட்டப்படுகிற... பாலிஷ் செய்யப்படுகிற... கிரானைட் கற்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தொகையை அரசுக்குக் கட்டணமாகத் தொழிற்சாலைகள் செலுத்த வேண்டும். ஆனால், பல தொழிற்சாலைகள் இதைச் செய்யாமலேயே கற்களை ஏற்றுமதி செய்கின்றனவாம். இதற்குக் கனிமவள அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருப்பதால், விஷயம் அமுக்கப்படுகிறது என்கிறார்கள். இந்த விவரங்களைத் திரட்டிய தமிழக நிதியமைச்சர், கிரானைட் குவாரிகளை முறைப்படுத்தி அதன் மூலம் வருவாயைப் பெருக்கலாம் என முதல்வருக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறாராம். அதேபோல, தனியாரிடமிருக்கும் தாதுமணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தவும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக ஆண்டுக்கு 3,000 கோடி ரூபாய்க்குக் குறையாமல் அரசின் கஜானா நிரம்பும் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள்.

மணல்... மது... லாட்டரி - நிரம்புமா கஜானா?

பார்களுக்கு அனுமதி!

தமிழக கஜானாவை நிரப்புவதில் டாஸ்மாக்கின் பங்கு முக்கியமானது. டாஸ்மாக் கடைகளோடு, வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்யும் எலைட் கடைகளையும் அரசு நடத்துகிறது. ஆனால், டாஸ்மாக் பார்கள் தனியாரிடம்தான் உள்ளன. அதேபோல, கேளிக்கை விடுதிகளுக்கான பார், நட்சத்திர விடுதிகளிலுள்ள பார் எனப் பல வழிகளிலும் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

தமிழக அரசு, மது மூலம் வருமானத்தைப் பெருக்க இப்போது புதிய வழியை ஆராய்ந்துள்ளது. வடமாநிலங்களில் உயர்தர உணவகங்களிலும் பார்கள் செயல்படும். இதற்குத் தனியாக லைசென்ஸ் பெற வேண்டும். தமிழகத்தில் இது போன்ற உணவகங்களில் பார்கள் நடத்துவதற்கான லைசென்ஸ் வழங்கப்படாமல் இருந்தது. இனி, அந்த லைசென்ஸ்களை வழங்க தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாகக் கூறுகிறார்கள் டாஸ்மாக் உயரதிகாரிகள். இதற்குப் பல லட்சங்களைக் கட்டணமாக முதலில் பெறவிருக்கிறார்கள். டாஸ்மாக் கடைகளில் செயல்படும் பார்களால் அரசுக்குப் பெரிதாக வரி வருவாய் இல்லை என்பதால், உணவகங்களில் பார் என்கிற இந்தத் திட்டத்தைக் கையிலெடுத்துள்ளது அரசு. இதன் மூலம் ஆண்டுக்குக் குறைந்தது 100 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும் என்று கணக்கு போட்டுள்ளனர் நிதித்துறை அதிகாரிகள்.

லாட்டரிக்கு என்ட்ரி! - நிரம்புமா கஜானா?

2003 ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில், லாட்டரி விற்பனை தமிழகத்தில் தடைசெய்யப்பட்டது. கடந்த 18 ஆண்டுகளாகத் தமிழகத்தில் கால்பதிக்காத ‘லாட்டரி தொழிலுக்கு மீண்டும் அனுமதி’ என்கிற செய்தி சமீபத்தில் றெக்கை கட்டிப் பறந்தது. இது குறித்து நிதித்துறை உயரதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

“ஜி.எஸ்.டி வரிக்கு முன்னால் - பின்னால் என லாட்டரி தொழிலைப் பார்க்க வேண்டும். சீனாவில் 4 லட்சம் கோடி ரூபாய் இந்தத் தொழிலில் புழங்குகிறது. அமெரிக்காவில் 3 லட்சம் கோடி ரூபாய் லாட்டரி தொழிலில் புழங்குகிறது. ஏன், மேற்கு வங்கத்தில் ஆண்டுக்கு 30,000 கோடியும், கேரளாவில் 20,000 கோடியும் இந்தத் துறையில் பணமாகச் சுழற்சியாகிறது. தி.மு.க அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பெரும் நிதி தேவைப்படும் சூழலில், அதற்கு லாட்டரி பெரிதாகக் கைகொடுக்கும்” என்கிறார்கள்.

முன்னாள் லாட்டரி விற்பனையாளர்கள் சிலர் நம்மிடம் பேசுகையில், “பழைய லாட்டரி விற்பனையில், சுரண்டல் லாட்டரி, ஒரு நம்பர் லாட்டரி போன்றவை புழக்கத்தில் இருந்தன. இதனால்தான் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இப்போது அந்தவகை லாட்டரிகளுக்குச் சட்டபூர்வ அனுமதி கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய ரிசர்வ் வங்கி, லாட்டரி விற்பனை குறித்து சில வழிகாட்டு முறைகளை வெளியிட்டது. அதன்படி, ரிசர்வ் வங்கி அனுமதியளித்த லாட்டரிச் சீட்டுகளை மட்டுமே புழக்கத்தில் விட முடியும். போலிச் சீட்டுகளை அச்சடிக்க முடியாத அளவுக்கு லாட்டரி சீட்டுகளில் பாதுகாப்பு அம்சங்களை இப்போது உருவாக்கியிருக்கிறார்கள். லாட்டரிக்கு 28 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரியும் விதிக்கப்படுகிறது. லாட்டரி விற்பனை மூலமாக, அரசுக்கு 6,000 முதல் 8,000 கோடி ரூபாய் வரை ஆண்டு வருமானம் கிடைக்கும்” என்கிறார்கள்.

இந்த நெருக்கடியான கட்டத்தில், வேறு வழியின்றி லாட்டரி விற்பனைக்கு அனுமதியளிக்கும் முடிவுக்கு அரசு வந்திருப்பதாக தலைமைச் செயலக வட்டாரத்தில் கூறப்படுகிறது. லாட்டரி தொழிலைக் கண்காணிக்க ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை முழுநேரப் பணியில் அமர்த்தவும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறதாம். கூட்டணிக் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் லாட்டரி விவகாரத்தில் என்ன சொல்லும் என்ற யோசனையும் முதல்வருக்கு எழுந்திருக்கிறது.

மணல், மது, லாட்டரி மூலமாக நிதி திரட்டுவதற்கான ஆயத்தப் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறது அரசு. அரசின் இந்தத் திட்டம் நிஜமாகவே கஜானாவை நிரப்புமா... மக்களின் ஆதரவைப் பெறுமா?

****

வெளிச் சந்தையிலிருந்து 15,500 கோடி ரூபாய் கடன்!

மொத்த மாநில உற்பத்தியில் (GSDP), 4 சதவிகிதத்தை அரசின் பங்கு விற்பனை மூலமாக, வெளிச் சந்தையிலிருந்து கடனாக ஒரு மாநிலம் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கான அனுமதியை இந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு வழங்கியிருந்தது. இதன்படி, கடந்த ஜூலை 9-ம் தேதி பல்வேறு மாநில அரசுகளும் வெளிச் சந்தையிலிருந்து கடனாகப் பெறக்கூடிய தொகைகளுக்கான அனுமதி விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அதன்படி, தமிழக அரசு ஜூலை மாதத்தில் மட்டும் 6,500 கோடியும், ஆகஸ்ட் மாதத்தில் 5,000 கோடியும், செப்டம்பர் மாதத்தில் 4,000 கோடியும் கடனாகப் பெற அனுமதி பெற்றுள்ளது. தமிழக அரசு மட்டுமன்றி இந்தப் பட்டியலில் பல மாநிலங்களும் கடன்பெறுவதற்கான அனுமதியைப் பெற்றுள்ளன. “தமிழக அரசின் நிதித் தள்ளாட்டத்துக்குத் தீர்வுகாணவே வெளிச் சந்தையிலிருந்து 15,500 கோடி ரூபாய் கடன் வாங்கப்படுகிறது. இது வழக்கமான ஒரு நடைமுறைதான்” என்கிறார்கள் நிதித்துறை அதிகாரிகள்.