Published:Updated:

கருணாநிதி கட்டிய கோட்டையில் கொடி ஏற்றுகிறாரா ஸ்டாலின்? - மருத்துவமனை இடமாற்ற சர்ச்சை...

அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை
பிரீமியம் ஸ்டோரி
News
அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை

கருணாநிதி, ‘புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும்’ என்று சொன்னபோதே, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா ‘அங்கு காலடிகூட எடுத்துவைக்க மாட்டேன்’ என்று காட்டமாகத் தெரிவித்தார்.

சென்னை ஓமந்தூரார் தோட்டத்திலிருக்கும் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இடம் மாற்றப்படப்போவதாகக் கடந்த சில நாள்களாகச் செய்திகள் கசிகின்றன. இதை முன்வைத்து ‘கருணாநிதி கட்டிய கோட்டையில், முதல்வர் ஸ்டாலின் விரைவில் கொடி ஏற்றப்போகிறார்’ என்று வரும் தகவலால் தமிழக அரசியல் பரபரக்கிறது. உண்மையில் என்னதான் நடக்கிறது? விசாரணையில் இறங்கினோம்.

கருணாநிதி கட்டிய கோட்டையில் கொடி ஏற்றுகிறாரா ஸ்டாலின்? - மருத்துவமனை இடமாற்ற சர்ச்சை...

சென்னை மாகாணத்தில் பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டை, சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய ராணுவத்தின் வசம் சென்றுவிட்டது. அங்கு அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகம், சட்டப்பேரவை, துறைச் செயலாளர்களின் அலுவலகங்கள் ஆகிய இடங்களுக்கு தமிழக அரசு, மத்திய பாதுகாப்புத்துறைக்கு வாடகை அளித்துக்கொண்டிருக்கிறது. இங்கு இட நெருக்கடியும் உள்ளது. ‘இன்னும் எத்தனை காலம்தான் ராணுவத்தின் இடத்தில் இருப்பது?’ என்கிற எண்ணத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 450 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டினார். 2010, மார்ச் 12-ம் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இதைத் திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து சட்டப்பேரவைக் கூட்டமும் அங்கு நடைபெற்றது.

கருணாநிதி கட்டிய கோட்டையில் கொடி ஏற்றுகிறாரா ஸ்டாலின்? - மருத்துவமனை இடமாற்ற சர்ச்சை...

கருணாநிதி, ‘புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும்’ என்று சொன்னபோதே, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா ‘அங்கு காலடிகூட எடுத்துவைக்க மாட்டேன்’ என்று காட்டமாகத் தெரிவித்தார். சொன்னதுபோலவே அவர் அங்கு வரவில்லை. அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும், தலைமைச் செயலகத்தை மீண்டும் கோட்டைக்கே மாற்றியதுடன், புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் ஊழல் நடந்ததாக அறிவித்து விசாரணை கமிஷனும் அமைத்தார். மேலும், அந்தக் கட்டடத்தில் சில மாற்றங்களைச் செய்து அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றி, அதன் அருகிலேயே புதிய அரசு மருத்துவக் கல்லூரியும் அமைக்கப்படும் என்று அறிவித்தார். தொடர்ந்து எடப்பாடி ஆட்சிக்காலத்தில் மருத்துவக் கல்லூரியும் அங்கு அமைக்கப்பட்டது. இப்படியான சூழலில்தான் தற்போது இந்த மருத்துவமனை இடமாற்றம் செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள், “தலைமைச் செயலகத்தை ஜெயலலிதா வம்படியாக மருத்துவமனையாக மாற்றியதற்கும் ஒரு காரணம் உள்ளது. 2001-2006 அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் புதிய தலைமைச் செயலகத்தை அமைக்க ராணி மேரி கல்லூரி இடத்தைத் தேர்வு செய்தார் ஜெயலலிதா. அப்போது தி.மு.க இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், திட்டம் தடைப்பட்டது. ஜெ-வின் பழிவாங்கலுக்கு இதுதான் காரணம்.

கருணாநிதி கட்டிய கோட்டையில் கொடி ஏற்றுகிறாரா ஸ்டாலின்? - மருத்துவமனை இடமாற்ற சர்ச்சை...

ஜூன் 3-ம் தேதி கருணாநிதி பிறந்தநாள். அன்று, ‘கிண்டி கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் 250 கோடி ரூபாய் செலவில், 500 படுக்கைகளுடன் புதிய மருத்துவமனை அமைக்கப்படும்’ என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்துதான் ‘ஓமந்தூரார் மருத்துவமனை மீண்டும் தலைமைச் செயலகமாகிறது; இங்கிருக்கும் மருத்துவமனையைத்தான் கிண்டிக்கு மாற்றுகிறார்கள்’ என்றெல்லாம் தகவல்கள் தடதடக்க ஆரம்பித்தன. தொடர்ந்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், ‘ஒருபோதும் மருத்துவமனையை இடம் மாற்றக் கூடாது’ என்று அறிக்கை வெளியிட்டார். இதே கருத்தை பா.ம.க நிறுவனர் ராமதாஸும் தெரிவித்துள்ளார். இந்தச் சலசலப்புக்குக் காரணம் இல்லாமலும் இல்லை. தற்போது கொரோனா தொற்று காலகட்டத்தில் இருக்கிறோம். அடுத்தடுத்த அலைகள் வரும் என்கிறார்கள். இதனால், கொரோனா எப்போது முடிவுக்கு வரும் என்று சொல்லவும் இயலவில்லை. கோட்டையிலுள்ள பழைய சட்டப்பேரவையில் 234 எம்.எல்.ஏ-க்களும் சமூக இடைவெளியுடன் அமரும் வாய்ப்புகள் இல்லை. அதனால்தான் கடந்த அ.தி.மு.க ஆட்சியின் இறுதியிலேயே சட்டசபைக் கூட்டத்தை கலைவாணர் அரங்கில் நடத்தினார்கள். இப்போதும் புதிய எம்.எல்.ஏ-க்களின் பதவியேற்பு அங்குதான் நடந்தது. வரும் 21-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கப்படவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டமும் கலைவாணர் அரங்கில்தான் நடக்கவிருக்கிறது. இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் அந்த அரங்கையே பயன்படுத்துவது? அதனால்தான் ஓமந்தூரார் தோட்டத்துக்கு மாற்ற யோசிக்கிறார்கள்” என்றார்கள்.

கருணாநிதி கட்டிய கோட்டையில் கொடி ஏற்றுகிறாரா ஸ்டாலின்? - மருத்துவமனை இடமாற்ற சர்ச்சை...
கருணாநிதி கட்டிய கோட்டையில் கொடி ஏற்றுகிறாரா ஸ்டாலின்? - மருத்துவமனை இடமாற்ற சர்ச்சை...

இந்த விவகாரம் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 14 மருத்துவப் பிரிவுகள் செயல்பட்டுவருகின்றன. இதய மாற்று அறுவை சிகிச்சைகளும், முழு உடல் பரிசோதனையும் இங்கு சிறப்பாகச் செய்யப்பட்டுவருகின்றன. சென்னையில் கொரோனா சிகிச்சையில் முதலிடத்தில் இருப்பதும் இதுதான். இதையும், இங்கிருக்கும் மருத்துவக் கல்லுரியையும் இடம் மாற்றுவது அவ்வளவு சுலபமல்ல... ஏராளமான சிக்கல்கள் இருக்கின்றன” என்றார்கள்.

அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நம்மிடம், “அன்றைக்கு கொரோனா என்கிற நோய் உருவாகும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால், தொலைநோக்குப் பார்வையுடன் இந்த மருத்துவமனையை ஜெயலலிதா உருவாக்கினார். அதன் பலனை இன்று நாம் உணர்கிறோம். எந்த நிலையிலும் மருத்துவமனையை இடம் மாற்றக் கூடாது. அதை நாங்கள் அனுமதிக்கவும் மாட்டோம்” என்றார் உறுதியாக.

மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் “பன்னோக்கு மருத்துவமனை இடமாற்றம் உண்மையா?” என்று கேட்டோம். “யூகங்களில் அடிப்படையில் வரும் தகவல்களுக்கு எங்களிடம் பதில் இல்லை. அரசிடம் கொள்கைரீதியாக இப்படியொரு திட்டம் இருப்பதாகத் தெரியவில்லை” என்பதுடன் முடித்துக்கொண்டார்.