Published:Updated:

`தமிழகம் தீவிரவாதிகளின் பயிற்சிக் கூடாரம்!' - அரசு மீது பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் சாடல்

தி.மு.க கூட்டணிக் கட்சிகளோடு இஸ்லாமிய தீவிரவாதிகளும் கூட்டணி வைத்திருக்கிறார்கள். இதற்கு தி.மு.க விளக்கம் அளிக்க வேண்டும்.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

தீவிரவாதிகளின் பயிற்சிக் கூடாரமாகத் தமிழகம் மாறிவிட்டதாகப் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக அரசைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலிலிருந்து தொடர்ந்து அ.தி.மு.க அரசை விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன் ராதாகிருஷ்ணன்
பொன் ராதாகிருஷ்ணன்

அரியலூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் தேர்தல் மற்றும் அறிவிப்பு கூட்டம் அரியலூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய நினைக்கிறார்கள். சிறுபான்மையினர் வாக்குக்காக அரசியல்வாதிகள் கீழ்த்தரமான வேலையைச் செய்யத் தொடங்கிருக்கின்றனர். தி.மு.க கூட்டணிக் கட்சிகளோடு இஸ்லாமியத் தீவிரவாதிகளும் கூட்டணி வைத்திருக்கிறார்கள். இதற்கு தி.மு.க விளக்கம் அளிக்க வேண்டும்.

தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டது என்பதை மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலத்திலிருந்தே நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். தற்போது கேரளா, குஜராத், டெல்லி, தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளது, இதை உறுதிப்படுத்தியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

பொன்.ராதாகிருஷணன்
பொன்.ராதாகிருஷணன்

மோடி அரசை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். அதன் தொடர்ச்சியாகத் தமிழகத்தில் பல இடங்களில் தாமரை மலரத்தொடங்கியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் சில இடங்களில் பா.ஜ.க தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. இது தொடரும். தீவிரவாதிகளால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்டது குறித்து சட்டமன்றத்தில் இதுவரை விவாதிக்கப்படவில்லை. இதுகுறித்து அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்கூட தெரிவிக்காதது மிகவும் வருத்தம் அளிக்கிறது. நான் மந்திரியாக இருந்தபோது உள்ளாட்சிகளுக்கு ரூ.1,700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் மத்திய அரசின் நிதி விரைவில் கிடைக்கும்" என்று முடித்துக்கொண்டார்.